வெள்ளி, 7 அக்டோபர், 2016

படனமாம் பட்டணம்

பட்டணமாம் பட்டணம்
     “எய்யா எலேய் கவனமா போயிட்டுவாம்மா…” பாண்டித்துரை சிரித்தான். துணிப்பை கையில் இருந்தது. கருப்பட்டி சிப்பத்தைத் தலையில் வைத்து மறுகையால் அணைத்துப் பிடித்திருந்தான்.
     “டேசன் வரைக்கும் வாத்தியார் மவன் வருவான். மெட்ராஸீல இறங்கின புறவு எந்த மகராசன்கிட்டே கேட்டாலும் தம்பி கடைக்கு போவலாம். விலாசத்தை யாவுவமா வச்சுக்க… துட்டை யாரு கண்ணிலயும் படாமத்தான் எடுக்கணும்…”
     பாண்டித்துரைக்கு முதல் முறையாக சென்னை செல்வது பெருமையாக இருந்தது, நெல்லை எக்ஸ்பிரஸில் அமர்ந்து கொண்டு போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தான். வாத்தியார் மகனின் கண்கள் வயசுப் பெண்களை மேய்ந்து கொண்டிருந்தது.
     “பாண்டி… எடே டிரெயின் புறப்பட்டாச்சு. ஊருக்குப் போனதும் லெட்டர் போடு. வரட்டா…” பாண்டித்துரை டாட்டா காட்டினான்.
     ‘வாத்தியார் மவன் பொம்பள விஷயத்துல மட்டும் கொஞ்சம் மோசம். மத்தப்படி நல்ல ஆளுதான். இப்ப எவன்தான் யோக்கியமா இருக்கான். அம்மா கூப்பிட்டவுடனே வந்துட்டு ரெயிலும் ஏத்தி உட்டுட்டு போறானே…’
     சென்னை எழும்பூர். பாண்டித்துரை விழித்தான். எல்லோரும் அரக்கப்பரக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். சிகப்புச் சட்டைகள் பெரிய கிராக்கிகளுக்காகப் பறந்து கொண்டிருந்தது. ட்ராலிகள் இழுக்கப்படும் சத்தம் காதை அடைத்தது. எதிரில் மின்சார ரெயில் தடதடவென்று ஓடிக் கொண்டிருந்தது.
     “அண்ணாச்சி, வடபழனிக்கு எப்படி போவணும்?”
     “அட போப்பா…. எங்களுக்கு வேற வேலை இல்லே..” பாண்டித்துரைக்கு ‘சே’ என்றானது. கருப்பட்டி சிப்பமும் துணிப்பையும் சுமந்து கொண்டு வாட்ட சாட்டமாய் காணப்பட்ட அவனுக்குப் பொறுப்பாய் பதில் சொல்பவர்கள் யாரும் கிடைக்கவில்லை.
     ‘இது என்ன பாழாய்ப்போன ஊரு… எந்த மகராசன்கிட்டே கேட்டாலும் இடத்தை சொல்லுவான்னு அம்மா சொன்னாளே…’
     காக்கி சட்டை ஒன்று கம்பை வீசியபடி அருகில் வந்தது.
     “சார், வடபழனிக்கு எப்படி போகணும்?”
     “என் தலை மேலே ஏறிப் போகணும்… போங்கடா போக்கத்தவனுவளா…?”
     ‘என்ன அக்கறையாய் டூட்டியை கவனிக்கிறார்கள்! இதுல டிரெஸ் வேற… பாண்டித்துரைக்கு கோபம் வந்தது.
     “எப்பா தம்பி… வடபழனிக்கு போறதுக்கு வழி தெரியலே… நீயாவது சொல்லுப்பா…” கையைப் பிடித்தான். கை வழுவழுவென்றிருந்தது.
     “யூ கன்ட்ரி புரூட்…” கையை ஓங்கினாள் அந்த ஜீன்ஸ்.
     ‘அம்மாடி! பொம்பளப்பிள்ளையா…’ பின் வாங்கினான்.
     பெரியவர் ஒருவர் பொறுமையாக வழி சொன்னார்.
     “ரொம்ப நன்றிங்க சார்… அரைமணி நேரமா தவியா தவிச்சுட்டேன்.. என்ன சார் பெரிய பட்டணம்…. கொஞ்சம்கூட மரியாதை தெரியலே…”
     வடபழனியில் இறங்கி தம்பி கடைக்கு வந்து சேர்ந்தான்.
     “ரொம்ப சங்கடப்பட்டுட்டன்பா… அவன் அவன் கடன் கேக்கப் போற மாதிரி பேய் முழி முழிக்கறாங்கறேன்…”
     தம்பி செல்வராசு சிரித்தான்.
     பாண்டித்துரைக்கு அரிசிக்கடை பொறுப்பு கொடுக்கப்பட்டது… நூறு கிலோ மூட்டைகளை அலேக்காகத் தூக்கி அடித்தான்.
“இரண்டு கலயம் பயினிய ஓரே மூச்சுல குடிப்பான்…  ஒரு மூட்டையா தூக்குவான்…” சமையல்காரர் சுயம்பு மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.
“தோட்டம் தோட்டம்னு’ அங்கனயே காத்துக் கிடப்பான். மழை தண்ணி இல்லாம போச்சி… தம்பிக்காரன்கிட்டே ஓடி வந்துட்டான்…”
“ஓய், சுயம்பு! இன்னைக்கி கருவாட்டுக் குழம்பு வையும்… தம்பி ஊர்;ல கள்ளுவித்துக்கிட்டு கிடந்தாரு… இங்கின ஒழுங்கா இருக்காரா?”
“இனிமே இங்கே இருந்து போனார்னா தென்னை மரத்து மூட்டுலதான் வைக்கணும்…”
இன்னும் நின்றால் அண்ணன்காரனும் தம்பிக்காரனும் நிறைய பேசுவார்கள் என்று அவர் வேலையைக் கவனிக்க ஓடினார்.
“என்னா நாட்டாரே, கிருஷ்ணாயில் இருக்குமா?” வயசுப்பெண் ஒருத்தி.
“ஏம்பா.. அஸ்கா குடுப்பா…. எம்மாம் நேரம் நின்னுக்கினுகீறேன்…”
“வாத்தியாரே ஒரு பென்சில் கொடு…”
பாண்டித்துரை கலகலப்பாக இருந்தான். பெண்கள் மாடர்ன் டிரெஸ்களில் வந்தது அவனுக்கு மிகவும் கூச்சமாக இருந்தது.
‘ஊர்ல ஒருத்தியகூட வெளியில பார்க்க முடியாது… கிழடுகட்டைங்கதான் அங்கின இங்கின அலையும்… இங்கே ஒவ்வொருத்தியும் எப்படி இருக்காளுங்க…’ வியந்தான்.
“செல்ராசு… பொம்பளைங்க என்னா அழகா டிரெஸ் போட்டுக்கறாங்க… சிரிச்சி சிரிச்சி பேசறாங்க… தப்பு தண்டா நடக்காதா?”
“ஒண்ணு ரெண்டு இருக்கத்தான் செய்யும். ஏன் கிராமத்துல மட்டும் இல்லையா? அது மாதிரிதான்.”
அன்று லீவு நாள். கடை அடைத்திருந்தது. கடையின் முன்னால் பாண்டித்துரை நாற்காலியில் அமர்ந்திருந்தான். கையில் பேப்பர் இருந்தது. திடீர் சந்தடியில் திரும்பினான். ஒருவனை நான்கைந்து பேர் தாக்கிக் கொண்டிருந்தார்கள். பிளேடுபட்டதில் அடிபட்டுக் கொண்டிருந்தவன் கன்னத்தில் கோடு கோடாய் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. பலரும் நின்று வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, அந்த அநியாயத்தை தடுக்க முயற்சிக்கவில்லை. பாண்டித்துரை நாற்காலியைத் தூக்கிக் கொண்டு குபீரென பாய்ந்தான். சரமாரியாக நாற்காலி வீச்சு, நாட்டு உடையை வெட்டிச் சுமந்த உடம்பு. நூறடி கிணற்றுக்குள் ஒட்டுப்படியை பிடித்து இறங்கி மோட்டார் புட் வால்வில் பாசி எடுத்து மேலேறிய உடம்பு. திமிறும் காளைகளை அடக்கி நுரைகக்க வைத்த உடம்புக்கு தீனி கிடைந்தது. பேட்டை பிஸ்தாக்கள் திசைக்கொருவராய் ஓடினார்கள். பாண்டித்துரை அடித்த அடியில் கைகால் ஒடிந்திருக்க வேண்டும். ஓடும் அழகில் தெரிந்தது. யாரோ சோடா வாங்கிக் கொண்டு வந்தார்கள். அடிபட்டுக் கிடந்தவன் வாயில் சோடா மெல்ல இறங்கியது.
“என்னவே… மெட்ராஸிலே மனுசனே இல்லியா… ஒருத்தனைப் போட்டு அத்தனை பேரு அடிக்கிறானுவ… பிளேட வச்சி இழுக்கிறானுவ.. பொத்திகிட்டு நிக்கிறியளவே..”
பாண்டித்துரைக்கு இன்னும் ஆத்திரம் தீரவில்லை. செய்தி கேள்விப்பட்டு செல்வராசுவும் கடைப்பையன்களும் சுயம்பு நாடாரும் ஓடி வந்தனர்.
“பாண்டி, உனக்கு அடிகிடி பட்டிச்சா?”
     என்னை அடிக்கிறதுக்கு இங்கின எவன்லே இருக்கான்?”
     “தம்பி பேரென்ன… எந்த ஏரியா?” செல்வராசு கேட்டான்.
     “அசோக் நகருங்க… அப்பா பேரு ராமபத்திரன். என் தங்கச்சியை காலேஜிக்குப் போறபோதெல்லாம் வம்பு பண்றாங்க. தட்டிக் கேட்டேன். அதான்…”
     பாண்டித்துரை பேசினான். “தம்பியோவ்! இனிமே அந்தக் கழுதைக்குப் பொறந்தபயலுவ எங்கின நின்னாலும் சொல்லு. வெட்டி பொலி போட்டுட்டுத் தான் ஊருக்கு போவணும்…”
     “எண்ணோவ்… நீ வீட்டுக்குப் போ ஊர் நிலமை தெரியாம பேசாதே…”
     “என்னலே பெரிய மயிறு நிலவரம். தாயாளி.. கேடிப்பயலுவளுக்கு மெட்ராஸில் அவ்வளவு சலுகையா…”
     சுயம்பு நாடார் பாண்டித்துரையைத் தள்ள, பாண்டித்துரை அவரைத் தள்ள பெரிய போராட்டமே நடந்து கொண்டிருக்கும்பொழுது அந்தப் பையன் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டான்.
     இந்த சம்பவத்தில் இருந்து பாண்டித்துரைக்கு அந்த பஜாரே நடுங்கியது. பக்கத்தில் இருந்த பட்டறையில் தம்பிக்குத் தெரியாமல் பெரிய அரிவாள் ஒன்றை அடித்து வைத்துக் கொண்டான். எந்நேரமும் இடுப்பில் அரிவாள் தொங்கும். வேட்டியை மடித்துக்கட்டி அரிவாளை மறைத்திருப்பான்.
     ஒருநாள் பாரிஸ் கார்னர் வரைக்கும் போக வேண்டியது வந்தது. பாண்டித்துரைக்குத் துணையாக சுயம்பு நாடாரும் வந்திருந்தார். பஸ்ஸில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள். பஸ்ஸின் முன் பகுதியில் நான்கு வாலிபப் பையன்கள் நின்றிருந்தனர்.  அவர்கள் தோற்றமும் உடையும் அருவருப்பாய் இருந்தது. பெண்கள் ஏறும்பொழுதும் இறங்கும் பொழுதும் நெருக்கி இடித்துக் கொண்டார்கள். அதிகக் கூட்டம் சேரும்பொழுது நெருக்கி அடித்து நிற்கும் வயசுப் பெண்களின் பின்பகுதியைத் தடவினார்கள். பாண்டித்துரை பார்த்துக்கொண்டே இருந்தான். அவனது கண்களில் தீப்பொறி. சுயம்பு நாடார் மெல்ல கிசுசிசுத்தார்;.
     “தம்பி, இங்கின இது சகஜம்தான்… கண்டுக்காத…”
     “யோவ்.. சும்மா கிடயும்…” எழுந்து கொண்டான்.
     எல்லோரையும் முரட்டுத்தனமாய் விலக்கிக் கொண்டு முன்பகுதிக்கு விரைந்தான். நான்கு பேரும் தப்பித்து ஓட முடியாமல் முன்வாசலில் இரும்பாய் நின்று கொண்டான்.
     “எலே… தே… மவனுவளா… பொம்பளப்பிள்ளைககிட்டே வம்பா பண்றிய…”
     “இன்னா பண்ணுவே…”
     அரிவாளை எடுத்தான்.
     பனங்காயை சீவிய கை. சரமாரியாக நான்கு பேரையும் வெட்டியது.
     பயணிகள் சிதறி ஓடினர். டிரைவரும் கண்டக்டரும் தலைதெறிக்க ஓடினர். சுயம்பு நாடார் பாண்டித்துரையை பாய்ந்து இழுத்து, சிரமப்பட்டு டாக்ஸிக்குள் திணித்தார்.
     “வே.. வெட்டுல ஒருவனும் சாவலை. ஒருத்தனையாவது காலி பண்ணிணாத்தான் ஊரு திருந்தும்.”
     “எப்பா தம்பி உன்கூட ஜென்மத்துலேயும் எங்கினயும் வர மாட்டேன்பா..”
     சென்னைக்கு பிழைக்கச் சென்ற மகன் இரண்டு வாரத்தில் ஊர் திரும்பியதைக் கண்டதும் தாய்க்கு ஆச்சரியமாக இருந்தது.
     “எம்மோவ்… இங்கின உனக்கு சரிப்படாது. ஊருக்குப் போன்னு பிடிவாதமா ரெயிலேத்தி உட்டுட்டான்மா தம்பி…”
     “எதுக்குல?”
     “அங்குன வம்பு நடந்தா பார்த்துக்கிட்டு இருக்க முடியலே… தம்பி அதையெல்லாம் கண்டுக்க வேண்டாம்ங்கறான்… ஒண்ணு, இரண்டு இடத்தில அடிதடி…”
     “எய்யா… எம் புள்ளா… நீ எங்கினயும் போவாண்டாம்லே.. அம்மகிட்டயே இருந்துக்க. உனக்கு ஊரும் தெரியாது, உலகமும் தெரியாது…”
     பாண்டித்துரை தாயை ஆத்திரத்துடன் பார்த்தான்.
.............................................................................................................................................இதயம்

14.08.1989

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக