வெள்ளி, 7 அக்டோபர், 2016

எல்லாம் கனவாக ...!

எல்லாம் கனவாக…!
     அந்தச் செய்தி மலர்விழியை பேரிடியாய்த் தாக்கியிருக்க வேண்டும் கல்லூரி வகுப்பறையில் கற்சிலை போல் அமர்ந்திருந்தாள். அதைச் சொல்லியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது வாசுகிக்கு. என்ன செய்வது… மலர்விழியைப் போன்று அழகிலும் அறிவிலும் உயர்வான ஒரு பெண் வஞ்சகவலையில் விழுந்து வாழ்க்கையைத் தொலைத்துவிடக்கூடாதே.
     மன்னர் மன்னனிடம் இவ்வளவு மர்மங்கள் இருக்கும் என்று எந்தப் பெண்தான் எதிர்பார்த்திருக்க முடியும். அந்தக் கவிதை பேசும் கண்கள் பொய்மையும் பேசுமா. பூரணச் சந்திரன் போன்று களங்கமற்ற முகம் நெருப்பையும் கக்குமா… வைரம் பாய்ந்த அந்த தடந்தோள்களுக்குள் வாழ்க்கையின் சூன்யங்களா…
     அபாரமான அவனது கட்டழகு.. சிந்தனை மெருகுடன் அவன் சிந்தும் சொற் சித்திரங்கள்… புன்னகையைச் சிந்தும் வதனம்… வேங்கையின் நடை எவ்வளவு எதிர்பார்ப்பையும் தாகத்தையும் தரும் என்பதை இளவயதுப் பெண்கள் அறிவார்கள். இத்தனை கணைகளையும் தொடுத்துத்தான் மலர்விழியை அவன் நெஞ்சச் சிறையில் வீழ்த்தியிருந்தான். மலர்விழி அவனுக்காக எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருந்தாள்.
     அவன் சென்னை மாநகரின் பெரிய நகைக்கடை அதிபரின் மகன் என்பதற்காக அவள் மையல் கொள்ளவில்லை. ஒபெல் ஆஸ்ட்ரோ… டோயோட்டா.. மாருதிசென் சியல்லோ கார்களில் அவன் வருவதால் அவனிடம் மயங்கிப் போகவில்லை. உலகையே வெற்றி கொள்ளப் போகும் ஒரு துடிப்புள்ள இளைஞனாக அவனைக் கருதியிருக்க வேண்டும். அவன் நெஞ்சத்தில் விழுந்துபுரளும் பாக்கியசாலி தான் மட்டுமே என்ற பேராசை இருந்திருக்க வேண்டும். அவனது சூர்யபார்வை தன்மீதுதான் சஞ்சரிக்க வேண்டும் என்ற தவிப்பு இருந்திருக்க வேண்டும். எல்லாம் கனவாக கானல் நீராக நொடிப் பொழுதில் மாறிப்போனது.
     வாசுகி கேள்விப்பட்ட அவனைப் பற்றிய அந்த உண்மைகள் எரிமலைக்கனல் போன்றவை. வாசுகியின் அத்தை மகள் டாக்டர் பூங்கனி தவறான தகவலைத் தரமாட்டாள்.
     ‘ஐந்து நட்சத்திர விடுதிகளில்… மங்கிய ஒளிச்சிதறலில்.. மதுவில் மயங்குவதில் அவன் உண்மையிலேயே மன்னனாம்… உயர்ந்த விலையில் கிடைக்கும் பெண்களுக்காக அள்ளி வீசுவானாம்… அவனுக்காகவே ஆடை அவிழ்ப்பு நடனங்கள் நடைபெறுமாம்… மலர்விழி அற்புதமான அழகி என்பதால் இந்த வண்டு தேன்குடிக்க ரீங்காரமிடுகிறதாம். தேனுண்டபின் வேறு மலருக்குத் தாவிச் சென்றுவிடுமாம்..’
            வாசுகி மலர்விழியை மெல்ல நெருங்கி தழுவிக் கொண்டாள். ‘மலர்விழி உன்னை போன்றவர்கள் இப்படி இடிந்து போய்விடக்கூடாது… நல்ல நேரத்துல உண்மை தெரிஞ்சதுக்காக சந்தோஷப்படு… உனக்காக ராஜகுமாரர்கள் காத்து நிப்பாங்க…’
     நெஞ்சு அடைக்க மலர்விழி பதில் சொன்னாள்.
     “அந்த ஆள்கிட்டே நிறைய கடிதம் கொடுத்திருக்கேன்டி.. இரண்டு பேருமா ரொம்ப நெருக்கமா இருக்கிற புகைப்படங்கள் தனி ஆல்பமே வரும்… அது மட்டுமல்ல.. என்னோட நெளிவு மோதிரம் அவன் கையிலே…”
            “வேற ஒண்ணும் ஆயிரல்லியே…”
     “கடவுள் மீது ஆணையா சொல்றேன்… அந்த ஆள் விரல்கூட என்னைத் தீண்டியது இல்லை. ஆனா இப்பத் தெரியுது… திட்டம் போட்டுத்தான் என்கிட்டே நல்லவன் மாதிரி நடிச்சிருக்கான். என் கடிதங்கள், போட்டோக்களை வச்சி என் வாழ்க்கையையே பாழடிச்சிருவானே.. எல்லாம் போச்சே…”
     “உன்னை தைரியசாலின்னு நினைச்சேன் மலர். இந்த உண்மையெல்லாம் தெரிஞ்சாக்கூட உன்னை யாரும் குற்றம் சொல்ல மாட்டாங்க. அவன் வலையிலே விழாம தப்பிச்சதைத்தான் பெரிய புண்ணியம்னு சொல்லுவாங்க…”
     “இன்றைக்கு மெரினாவுக்கு வரச்சொல்லியிருக்காண்டி…”
     “தவறாம மெரினா போ… அவன்கிட்டே என் வழியிலே இனிமே வராதேன்னு தைரியமா சொல்லு… வந்தா நாறிப் போயிருவேன்னு எச்சரிக்கை பண்ணிரு.. அவன் என்ன பிரச்சனை பண்ணினாலும் அதை சந்திப்போம்.. இவனுகளுக்கு அடிமைகளாகப் போறது தலை எழுத்தா என்ன.”  
     மலர்விழி புதுத்தெம்புடன் எழுந்து விடைபெற்றாள். வீட்டிற்கு வந்ததும் பூஜை அறையில் தியானித்தாள். அம்மாவிடம் அமெரிக்கன் நூலகம் போவதாகப் பொய் சொன்னாள். மெரினா கடற்கரையை அவள் அடைந்தபோது மாலை மணி ஆறு. மன்னர் மன்னன் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்து கடல் அலைகளில் அதன் எழுச்சிகளில் லயித்துப் போயிருந்தான்.
     மலர்விழி மெல்லச் செருமினாள். திடுக்கிட்டுத் திரும்பியவன் உற்சாகத்துடன் ‘வா மலர்’ என்றான். அவள் கண்களில் காளியின் ரௌத்திரம்.
     “என்ன ஆச்சு என் கண்ணம்மா…”
     நிதானமும் தியானமும் கட்டுப்பாட்டை இழக்க அவள் கைகள் அவளை அறியாமல் ஆவேசத்துடன் அவன் கன்னங்களில் இறங்கின. அவன் அதிர்ச்சியில் உறைந்து நிற்க…
     ‘என்னை ஏமாற்றிவிட்டாயேடா… பாவி… உன் வேடம் வெளுத்துருச்சுடா..’
     அவனைப்பற்றி கேள்விப்பட்ட அத்தனையையும் பொழிந்து தள்ளினாள். கதறிக் கண்ணீர் விட்டாள். மன்னர் மன்னன் கடற்கரை கூட்டத்தில் அத்தனை பேர் மத்தியில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மிகுந்த தைரியத்துடன் தாங்கிக் கொண்டான்.
     “நான் நல்லவன்னு எந்த சந்தர்ப்பத்திலேயும் உன்கிட்டே சொன்னது கிடையாது. உன்னை முதல் முதல்ல எப்போ பார்த்தேனோ அப்பவே என் தவறுகள்லே இருந்து திருந்தணும்னு தீர்மானிச்சேன்… எப்படியாவது உன்னை அடையணும்ங்கறது எனது நோக்கமல்ல…”
     அவன் குரல் தழுதழுத்தது. வேங்கை போன்ற அவனது கம்பீரம் நொறுங்கிப் போனது. நிலைகுலைந்து போயிருந்தான். அவன் தன் தவறுகளை நியாயப்படுத்துவான்… தன்னை மிரட்டுவான்.. ஆணவத்துடன் நடந்து கொள்வான் என்ற அவள் எதிர்பார்ப்பு தகர்ந்துபோக கிட்டத்தட்ட மண்டியிட்ட நிலையில் இருந்த அவனது தோற்றம் அவளுக்குள் அனுதாப விதையை விதைத்தது. தான் அதிகப்படியாக நடந்து கொண்டோமா என்று மனம் தவித்தது…. அவனே பேசினான்.
     “பணம் என் புத்தியை சிதற அடிச்சுது… பணத்துக்காக நான் சந்திச்ச பெண்கள்கிட்டே பெண்மையைப் பாhத்ததில்லே… எனக்குன்னு நல்ல வாழ்க்கை அமையணும்னு ஆசைப்பட்டேன்.. அதுவும் உன்னை சந்திச்ச பிறகுதான்… அழகான உன் உடம்புக்காக நான் எடுத்த முடிவல்ல இது… உன்னைவிட அழகானவங்க பணத்தை வீசி எறிஞ்சா கிடைப்பாங்க… காமம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை எனக்கு உணர்த்தியவளே நீதான்… பெண் ஒரு பெரிய சக்கி… அதனாலே ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்…  உன்னுடைய நினைவுகளே என்னை மனிதனாக ஆக்கியது… எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். என்னோட கடந்தகால வாழ்க்கை பெருமைக்குரியது அல்ல… அது வெட்கப்படவேண்டியது… அதைப்பற்றி உன்கிட்டே எப்போதுமே சொல்ல விரும்பல்லே.. சாக்கடையிலே குளிக்கிறது மகிழ்ச்சிக்குரிய விஷயமா.. நான் உன்னை ஒருபோதும் ஏமாற்ற நினைக்கலே… என் மனசுல உன்னை ரொம்ப உயரத்துல வச்சிருந்தேன்..”
     மேலும் பேச முடியாமல் அவன் கண்களில் நீர் திரையிட்டது.
     “நீங்க திருந்தியிருந்தா மகிழ்ச்சிதான். இருந்தாலும் உங்க மேல இனிமேலும் அன்பு செலுத்த முடியாது. தயவுசெய்து என்னை மறந்திருங்க.. என் வாழ்க்கைத் துணைவன் இப்படித்தான் இருக்கணும்னு எனக்கு லட்சியங்கள் இருக்கு… என்னை என் பாதையிலே விட்டிருங்க… என் வாழ்க்கையிலே நீங்க வந்த அடிச்சுவடே தெரியக்கூடாது…”
     அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான். மெல்ல சுதாரித்துக் கொண்டு எழுந்து கொண்டான்.
     “மலர் என்னோட வேண்டுகோள்… என் வீட்டு வரைக்கும் வந்திட்டுப்போ… நானே உன்னை கார்லே உங்க வீட்டுல விட்டிடுறேன்..” அவள் தயங்க…
     “இந்த ரெண்டு வருஷமா உன்கிட்டே நான் கண்ணியமா நடந்துக்கிட்டதை நீ மதிக்கிறதா இருந்தா என்னோட என் வீட்டுக்கு நம்பிக்கையோடு வா..”
     அவள் அவனோடு அந்த அழகிய டயோட்டா காரில் பயணித்தபோது அவன் எதுவும் பேச முயற்சிக்கவில்லை. தியாகராயநகரில் அந்த அழகிய பங்களாவில் அவள் கால் பதித்தபோது அந்த பங்களாவே உயிர் பெற்றதைப் போல் அத்தனை பேரும் ஓடி வந்தார்கள். அவனது அம்மா சகோதரிகள் அவளைக் கட்டித் தழுவிக் கொண்டார்கள். அவனது அம்மா குங்குமச்சிமிழை நீட்டியபடி “என் பையன் திருந்துவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லம்மா… எங்களுக்கெல்லாம் தெய்வம் நீ…”
     மன்னர்மன்னன் நொடி நேரத்தில் அவனது அறைக்குள் சென்று திரும்பினான். அத்தனை பேர் முன்னிலையிலும் தெளிவாகப் பேசினான்.
     “மலர்.. இதோ நீ எனக்கு அனுப்பிய கடிதங்கள்… நாமிருவரும் இருக்கும் புகைப்பட ஆல்பங்கள்… அவைகளின் நெகடிவ்கள்… இதோ எனக்குப் பரிசாகத் தந்த மோதிரம்… இவைகளை உன் கையினாலேயே அழிச்சிரு… உன்னை ஏமாற்றியதாக நினைச்சா மன்னிச்சிரு..”
     “என்னடா இதெல்லாம்..” தாய் விக்;கித்து நிற்க மலரோடு மீண்டும் வெளியில் வந்து காரைக் கிளப்பினான்.
     அவன் எத்தகைய பண்பட்ட மனிதன் என்று அந்த கணத்தில் புரிந்தது. நெஞ்சு சிலிர்த்தது. காமத்தை வைத்து ஒருவனை தீர்மானிக்க முடியுமா என்று சந்தேகம் வந்தது. கார் அவளது வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தது. மயிலாப்பூர் லஸ் முனையில் அவள் இறங்கிக் கொண்டாள். அவனிடம் என்ன சொல்லி விடைபெறுவது என்று தோன்றாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
     “மலர் போய்வா… என்னைவிட்டுப் போவது நீ மட்டுமல்ல… என்னுடைய வசந்தங்களும்தான். உன்னோடு பழகிய நாட்களை நான் என் நெஞ்சில் கிளறிப் பார்க்கமாட்டேன்… எனக்குப் புதுப்பாதை காண்பித்த தேவதை நீ… எங்கிருந்தாலும் நல்லா இரு..” ஸ்டியரிங்கில் படுத்தபடி அழுதான். அவள் இன்னும் விடைபெறவில்லை. அவளது பதிலுக்குக் காத்திராமல் மெல்ல காரை நகர்த்தினான்.
----------------------------------------------------------------------------------------------------------------

தேவி

01.11.2000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக