வெள்ளி, 7 அக்டோபர், 2016

மெட்ராஸ் மச்சான்

மெட்ராஸ் மச்சான்
     திருமணம் முடிந்து கணவனோடு சென்னை சென்ற சுயம்புக்கனி கிராமத்து அம்மன் கொடைக்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு வெறும் வயிரோடு திரும்பி இருந்தாள். அவளோடு அவளது கணவன் பொன்பாண்டியும் வந்திருந்தான். ஊர் பஸ் நிலையத்தில் நின்ற பஸ்ஸில் இருந்து சுயம்புக்கனி வெளிநாட்டு நைலக்ஸில் சிக் என்று இறங்க பொன்பாண்டி பட்டு வேட்டி சிலக் ஜிப்பாவில் பந்தாவாகக் குதித்தான். அரிஸ்டோகிரட் சுயிட்கேஸை ஒரு கையால் தூக்கிக்கொள்ள மறு கையில் ஜநூற்று ஜம்பத்தைந்து பாக்கெட்டுக்குள் இடம் பிடித்திருந்த சார்மினார் புகைந்தது. ஜநூற்று ஜம்பத்தைந்து சிகரெட் பாக்கெட்டை ஜிப்பாவின் மேல் பாக்கெட்டில் வெளியே தெரியும்படி வைத்திருந்தான். பார்க்கிறவன் அவனவன் சாகணும். திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் மிட்டாய் கடையில் வாங்கிய மிட்;டாய் பெட்டிகள் சுயம்புக்கனியின் கையில் இருந்தது.
     சுயம்புக்கனியும் பொன்பாண்டியும் வந்த தோரணையால் பிரமித்துப்போன கிராமத்துப் பெண்களுக்கு அவர்களை அடையாளம் கண்டு கொள்ளவே சிரமமாக இருந்தது.
     “ஏழா அதுல போறது யாரு….”
     பெண்கள் ஒருவருக்கொருவர் குழப்பத்தோடு எதிர் நோக்க சுயம்புக்கனி  வாயெல்லாம் பல்லாக
     “ஏ மைனி என்ன அப்படி முழிக்கிறிய…
     அப்படியா அடையாளம் தெரியாம போயிட்டோம்…”
     அவளது குரலை வைத்து இனம் கண்டு கொண்ட பெண்கள் அவளை சூழ்ந்து கொண்டு ஆர்வத்தோடு விசாரிக்கத் தொடங்கினர்.
     “எப்பு வரும் போது வயித்தைத் தள்ளிக்கிட்டு வருவேன்னு எதிர்பார்த்தோம்…. என்ன இப்படி வந்திருக்கே… புருஷன் உன்னை சரியாகக் கவனிக்கலையா…?
     “போ மைனி உனக்கு எப்பவும் கேலிதான்…”
     பொன்பாண்டி பெண்கள் கூட்டத்தைப் பார்த்ததும் ஜநூற்றி ஜம்பத்தைந்தைத் திறந்து மீண்டும் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். கழுத்தில் கிடந்த (பித்தளை) செயினை வெளியில் தெரிகிறதா என்று கவனமாகப் பார்த்துக் கொண்டான்.
     “ஏ பிள்ளைகளா மருமவனை பாதையில் உட்டுக்கிட்டா அவளோட கொஞ்சிக்கிட்டு கிடக்கிய… அவியவூட்டுக்குப் போவட்டும்.. அங்கின போயி பார்த்துக்கிடலாம்…”
     தெருவே திரண்டு நின்று அவாகள் வீடு செல்லும் அழகைப் பாhத்தது.
     “மெட்ராஸ் மாப்பிள்ளை அழகாத்தான் இருக்காவ….
நிமிஷத்துக்கு நாலு சிகரெட்டு இல்லே பத்தைக்காவ… யாவாரம் நல்ல போடுசா இருக்கும் போலிருக்கு….”
மாமியார் வீட்டில் பொன்பாண்டிக்கு ராஜ வரவேற்பு நடந்தது.
“ஏல மாரியப்பா அத்தானுக்கு அந்த நாற்காலிய எடுத்துப் போடுல… அங்கின என்னல பறக்கப் பார்த்திட்டு நின்னுகிட்டு இருக்கே….”
மாமியார் போட்ட அதட்டலால் மாப்பிள்ளை மாரியப்பன் ஓடோடிச் சென்று நாற்காலி எடுத்து வந்து போட்டான்.
“அத்தானுக்கு ரோட்டுக்கடையில் ஒரு கலர் வாங்கிட்டு ஓடியால… அப்படியே கோவில்ல ஜயா நிப்பாக… சேதி சொல்லிட்டு விரசா வா….”
மாரியப்பன் பாய்ந்தோடினான். பொன்பாண்டி சுயிட்கேஸில் இருந்த டேப்ரிக்கார்டரை எடுத்து பாட்டு போட்டான். சென்னையில் அவனது காய்கறிக்கடைக்கு பக்கத்து வீட்டில் அவன் வரும்போது கொண்டாந்திருவேன் என்று வாங்கி வந்தது இங்கே தெரியவா போகிறது.
   “ஏம்மா ஏ கனி உம் மாப்பிள்ளை பச்சத் தண்ணியில் குளிப்பாவுளோ என்னம்போ… சுடுதண்ணி போடட்டாழா…”
   மகளின் பதிலுக்குக் காத்திராமல் இளைய மகளிடம்
“பானையத் தூக்கி அடுப்பில வச்சி சீக்கிரம் தண்ணிய வெதுப்பு பிள்ளே… அவிய முதல்ல குளிக்கட்டும்…”
தண்ணீர் தயாரானதும் கட்டிலில் ஊர் பெண்களோடு இருந்த சுயம்புக்கனியிடம் பொன்பாண்டி அலட்டலாக் கேட்டான்.
“பாத்ரூம் இருக்கில்லா…”
ஆமாம் இவிய தினமும் வேளச்சேரியில நடுரோட்டில கோடு போட்ட டிராயர் போட்டுகிட்டு குளிக்கறதை மறந்திட்டு பாத்ரூமா கேக்காவ என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டவள்…
“வளவுலே போயி குளிச்சிட்டு வாங்க….
இங்கின யாரு பாத்ரூம் கட்டியிருக்கா…”
மீண்டும் சுயிட்கேஸை திறந்தவன் தேங்காப்பூ டவலை எடுத்து மேலே போட்டுக்கொண்டு மைசூர் சாண்டல் சோப்பையும் சோப்புப் பெட்டியையும் எடுத்துக் கொண்டான். குளித்துவிட்டு சிலோன் கைலியில் வந்த அவனைப் பார்த்த கொழுந்தியாள் பொன்னுத்தாய்க்கு பெருமை பிடிபடவில்லை. மாரியப்பன் கலரோடு வந்திருந்தான். கலரை அவன் உடைத்ததும்…
“ஸ்ட்ரா வாங்கலியா மாப்பிள்ளை…”
“எக்கா அத்தான் என்ன கேக்காவ…”
“சும்மா அன்னாந்து ஊத்துங்க… அந்த எழவெல்லாம் இங்கின கிடைக்காது…?”
பொன்பாண்டி கலரை அன்னாந்து ஊத்திவிட்டு கால் பாட்டில் மிச்சம் வைத்தான். மாப்பிள்ளை மாரியப்பனுக்கு கால்பாட்டில் மிச்சம் கொண்டாட்டமாக இருந்தது.
“பாட்டிலை கொடுத்திட்டு வந்திர்றேம்மோவ்..”
என்றவன் வீட்டுச் செருவை மறைவில் நின்று அத்தான் குடித்து மிச்சம் வைத்த மீதி கலரை ஒரே முடக்கில் குடித்தான்.
சுயம்புக்கனி சுயிட்கேஸைத் திறந்து பொரிக்கடலை பொட்டலத்தை வெளியில் எடுத்தாள். வந்தவர்களுக்கு ஆளுக்கு கொஞ்சம் பொரிக்கடலையும் லாலா மிட்டாயும் காரச்சேவும் வழங்கப்பட்டது. மாமனார் கோவிலில் இருந்து வந்திருந்தார்.
“வாங்க மாப்பிள்ளை… யாவாரமெல்லாம் எப்படி…”
“ஒரு வாரம் கடை அடைச்சிட்டு ஊருக்குப் போறதே ஏரியாக்காரங்களுக்கு பெரிய வருத்தம்…
நம்ம கடையத் தவிர வேற எங்கினையும் ஒருத்தரும் வாங்க மாட்டாங்க மாமா…”
“மாப்பிள்ளைக்கு கோழி அடிச்சி சாப்பாடு தயார் பண்ணு பிள்ளே…”
மனைவிக்கு கட்டளை பறந்தது.
“ஏல அத்தானக் கூட்டிக்கிட்டு கோயிலுக்கு போயிட்டு வந்திரு… அவிய போனாவண்ணா பெரிய மதிப்பா இருக்கும்…”
பொன்பாண்டி சுயிட்கேசுடன் உள்ளறைக்குச் சென்றான். பாண்ட் போட்டுக் கொண்டான். டான் பனியனை அணிந்து கொண்டான். மட்டமான செண்டை மேலே தெளித்துக் கொண்டான். மாரியப்பனுக்கு அத்தானை பாண்ட் சட்டையில் பாhத்ததும் புல்லரித்தது. மழைக்கு அறிகுறியாக வானம் இருண்டு கிடந்தது. பொன்பாண்டி அப்படியும் கருப்புகூலிங்கிளாஸ் போட்டு செயினை இழுத்துப் போட்டுக் கொண்டான்.
“அப்ப கோயிலுக்கு போயிட்டு வரோம் மாமா…”
“அப்படியே நம்ம ஊர் சொந்தக்காரங்க வீட்டுக்கும் தலையக் காமிச்சிட்டு வந்திருங்க…”
தனது மாப்பிள்ளையை இந்தக் கோலத்தில் கிராமம் முழுக்கப்பார்க்க வேண்டும் என்று அவரது மனது ஆசைப்பட்டது. வெளியே புறப்பட்ட பொன்பாண்டி மறக்காமல் ஐநூற்றி ஜம்பத்தைந்து சிகரெட் பாக்கெட்டை சட்டைப் பையில் வைத்துக் கொண்டான். தெருவில் இறங்கியதும் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். அவன் வெளியே போன பிறகு சுயம்புக்கனியை பெண்கள் நெருக்கமாகச் சூழ்ந்து கொண்டனர்.
“உம் மாப்பிள்ளை தங்கமான குணம்டீ…”
“நீங்க என்னக்கா… அவிய மெட்ராஸ் தெருவிலே போறாவன்னா அவன் அவன் ஒதுங்கியில்ல நிப்பான்…”
சுயம்புக்கனியின் சித்தி மகள் ராசாத்தி வாய் மூடாமல் அக்கா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ராசாத்திக்கு இருபது வயதிருக்கும். பருவம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. ஊரில் தெருவில் சினிமா காண்பிக்கப்படும் போது ஆஜராகும் முதல் நபர் அவள் தான். சினிமாவைப் பாhத்துப் பார்த்து பட்டணத்து நாகரீகத்தில் மயங்கிப் போய் இருந்தாள். சென்னை கனவுப் பட்டணமாக இருந்தது அவளுக்கு.
“அத்தானுக்கு அங்கின ரொம்ப மதிப்பு என்னக்கா…”
“வழக்கு பேசி தீராது புள்ள… பொம்பளைப் பிள்ளைங்க வேற அவரையே சுத்தி சுத்தி வருவாளுங்க…
     எப்பவும் பத்துப் பதினைஞ்சி அடியாளுங்க கூடவே வச்சிருப்பாரு உங்க அத்தான்… இவரு கடையில் இருந்தாலே கூட்டமாத்தான் இருக்கும்…
தினமும் நூறு இருறூறு வேஸ்டா செலவு பண்ணுவாருன்னா பார்த்துக்கயேன்…”
பெண்கள் கூட்டத்தில் இஸ்டத்துக்கும் அளந்து கொண்டிருந்தாள். வேளச்சேரியில் இருக்கும் சாதாரண காய்கறிக் கடையில் பொன்பாண்டி வேகாமல் வேகுவது அவளுக்கு நினைவுக்கு வந்தது. கரீம் பீடியை பற்ற வைத்துக் கொண்டு விடிகாலையில் கொத்தவால் சாவடிக்கு சைக்கிளில் சரக்குப்பிடிக்க அவன் விரைவதும் நினைவுக்கு வந்தது. உண்மையைச் சொன்னால் உள்ள மதிப்பும் போய் விடும். இவளுக மெட்ராஸ்க்கு வந்து பார்க்கவா போறாளுங்க….
“வீடெல்லாம் வசதியா இருக்குமாக்கா..”
ராசாத்தி கேட்கவும்
“பெரிய பங்களாவை ஜநூறு ரூபா வாடகைக்கு புடிச்சி போடடிருக்காவபுள்ள… நாலு குடும்பம் இருக்கலாம்…”
ராசாத்தியின் கண்கள் வியப்பால் விரிந்தது.
வேளச்சேரியில் ஜம்பது ரூபாய் வாடகைக் குடித்தனத்தில் சிறிய அறையில் சுயம்புக்கனி உள்ளே படுத்துக்கொள்ள பொன்பாண்டி நாயாய் வெளியே படுத்திருக்கும் கதை யாருக்குத் தெரியும்.
“என்ன யாவாரமெல்லாம் இருக்கு அக்கா…”
“மளியக்கடை.. அதுக்குப் பிறவு வட்டிக்கும் குடுப்பாவ…”
 “பெரிய ஆளுதான் அத்தான்…”
பொன்பாண்டி அதற்குள் கோவிலுக்கும் விருந்து வீடுகளுக்கும் போய்த் திரும்பியிருந்தான். ராசாத்தி ஓடி ஒழியப் போனவளை சுயம்புக்கனி பிடித்து வைத்துக் கொண்டாள்.
“உங்க கொழுந்தியாளுக்கு மெட்ராஸ் பாக்கணுமாம்…”
பொன்பாண்டி அப்போதுதான் முதல் தடவையாக ராசாத்தியைப் பார்த்தான்.
     “இது யாரு கனி சினிமா ஸ்டாரு மாதிரி…”
“எங்க சித்தி மவ தான்…”
பொன்பாண்டி மீண்டும் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். மதியம் சாப்பிட்டதும் ஒரு குட்டித் தூக்கம் போட்டான். மாலை ஏறியதும் மாப்பிள்ளை மாரியப்பனைத் தேடினான். மாரியப்பன் வந்ததும்
“மாப்பிள்ளை பனங்காட்டுக்கு போயிட்டு வருவோமா…”
சுயம்புக்கனிக்கு திக் என்றது. வேளச்சேரியில் சாராயம் குடித்துவிட்டு கண்ட இடத்தில் விழுந்து கிடப்பான்.
“பனங்காட்டுக்கு மயிரு புடுங்கவா… ஏலே மாரி நீ விளையாட போல…. அவிய இங்கினயே கிடக்கட்டும்…”
நல்ல வேளை ராசாத்தியோ மற்ற பெண்களோ பக்கத்தில் இல்லை. மானம் போயிருக்கும். வீட்டுக்குள் இருந்த பொன்னுத்தாய்க்கு மட்டும் அக்கா அத்தானை மடப்பேச்சு பேசுவது வருத்தமாக இருந்தது.
அம்மன் கொடை ஜாம் ஜாமென்று நடந்து கொண்டிருந்தது. பொன்பாண்டிக்கு ஏக வரவேற்பு. வாலிபர்கள் அவனிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள்.
“பெரிய ஆளுங்க யாரெல்லாம் தெரியும் மச்சான்…”
“ரஜினி இல்லே… அவரு நம்ம தோஸ்துதான்…. இதப்பாரு அவரும் நானும்…” மணி பர்ஸைக் காண்பித்தான்.
போட்டோ ஸ்டுடியோ கட் அவுட்டில் ரஜினியோடு எடுத்துக் கொண்ட படம் எவ்வளவு வசதியாக இருக்கிறது. ரஜினிக்கு வேண்டிய ஆள் என்றதும் கிராமமே பொன்பாண்டியை பிரமிப்புடன் பார்த்தது.
ராசாத்திக்கு பொன்பாண்டி மேல் ஒரு கண் இருந்தது. அவன் தனியாக இருக்கும் போது வலிய வந்து பேசினாள். அவள் நெருக்கமாக பேசுவது உள்வீட்டுப் பொன்னுத்தாய்க்கு எரிச்சலாக இருந்தது. இரவில் ஊர் அடங்கியதும் தற்செயலாக வளவுக்கு வந்த பொன்பாண்டி ராசாத்தியைப் பார்த்துத் திடுக்கிட்டான்.
     “மச்சான் என்னையும் கட்டிக்க மச்சான்….”
அவளது திமிறும் இளமை பொன்பாண்டியை உலுக்க அங்கேயே அவளைக் கட்டிப்பிடித்தான். வளவு வழியே பக்கத்துத் தென்னந்தோப்புக்கு வழி இருந்தது. தென்னந்தோப்பில்  பொன்பாண்டியிடம் தன்னை இழந்து கொண்டிருந்தாள் ராசாத்தி.
“என்னைய கைவிட்டிராதீங்க மச்சான்…
உங்க பங்களாவிலே அக்கா கூட நானும் இருந்துக்கறேன்…”
அம்மன் கொடைமுடிந்த அடுத்த நாள் பொன்பாண்டியும் சுயம்புக்கனியும் சென்னைக்கு புறப்படுவதாக இருந்தது. முந்தின நாள் இரவில் வெகு நேரமாகியும் அவனைக் காணாதது சுயம்புக்கனிக்கு ‘பக்’ என்று இருந்தது. கொஞ்ச நேரத்தில் சித்தி வீட்டில் ராசாத்தியையும் காணவில்லை என்று தேடத் துவங்கினார்கள்.
பொன்பாண்டி ராசாத்தியோடு ஒடிப்போன விபரம் நேரம் செல்லச் செல்ல விளங்கத் துவங்கியது. சுயம்புக்கனி சத்தம் போட்டு ஒப்பாரியைத் துவக்கினாள். பெண்கள் கூட்டமாக அவளைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள். பொன்னுத்தாய்க்கு அழுகை அழுகையாக வந்தது… இந்த ராசாத்தி எவ்வளவு பெரிய கைகாரி… அத்தானோடு நாம் ஓடியிருக்க வேண்டியது. எல்லாம் போச்சு… எல்லோரையும் விட பெரிய குரலில் மார்பில் அடித்து அவள் அழத் துவங்கினாள்.
.................................................................................................................................................
தாய்
21.07.91

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக