வெள்ளி, 7 அக்டோபர், 2016

வாக்காளப்பெருமக்களே

வாக்காளப் பெருமக்களே….!
திருவண்ணாமலை. பொழுது கொஞ்சம் கொஞ்சமாக புலர்ந்து கொண்டிருந்தது. அண்ணாமலையார் திருப்பள்ளி எழுச்சி இனிமையான தமிழால் அமுதமாகக் காதில் விழுந்தது. சுயம்பு நாடார் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டார். தெரு களைகட்டிவிட்டது. ஜன்னல் வழியே பார்த்தபோது பெண்கள் காலையிலேயே குளித்துவிட்டு கோலமிட்டுக் கொண்டிருந்தனர். பால்காரர்கள் மாடுகளை ஓட்டிச்சென்றனர். எதிர்ச்சுவர் அருகில் சிலர் கூட்டமாய்…. என்ன நடக்கிறது.. எட்டிப் பார்த்தபோது… புரிந்தது… கட்சியாட்கள்.. சுவரில் வெள்ளையடித்து இடம் பிடிக்கிறார்கள். தேர்தல் வருகிறது…
ஆணவமும் அகங்காரமும் சுயநலமும் ஊழலும் கொள்கைகளாகக் கொண்டுள்ள அரசியல்வாதிகளுக்காக தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தல்கள் நாட்டிலே சாதித்தது என்ன? சாமானியனின் வாழ்க்கைத்தரம் கடுகளவாவது உயர்ந்திருக்கிறதா? இலவசத் திட்டங்களால் அவனைப் பிச்சைக்காரனை விட கேவலமானவனாக்கி ஓட்டுக்காக அவனை அடகு வைத்தார்களே… அதற்காக உறவாட வருகிறார்களா? மதவேற்றுமையை உருவாக்கி சகோதரனோடு சகோதரனை மோதவிட்டு வேடிக்கை பார்த்த கயவர்களுக்காக தேர்தல் வருகிறது. “யாதும் ஊரே… யாவரும் கேளிர்…” என்ற மூத்த தமிழனின் சொல்லை மறந்து தற்குறிகளாக  மாறி, சினிமா கவர்ச்சிக்கும் இமல்டாமார்க்கோஸைவிட மிஞ்சிய ஆடம்பரங்களுக்கும் சாராயத்திற்கும் பலியாகிப் போன மானிடப்பிண்டங்களுக்காக தேர்தல் வருகிறது…
சுயம்பு நாடாருக்கு ரத்தக்கொதிப்பு ஏறியிருந்தது. ஒரு மாத்திரையை எடுத்துப் போட்டு மீண்டும் கட்டிலில் படுத்தார். மனம் அமைதிக்கு வர மறுத்தது. அறையில் தந்தை பெரியாரும்… காமராஜரும்…. தந்தை பெரியார் கண்ட கனவு ஏதேனும் தமிழகத்தில் பலித்திருக்கிறதா..? சுயமரியாதைச் சிங்கங்கள் எங்கு தொலைந்து போனர்கள். ஈழத்திலே அடிபட்டு மிதிபட்டு உரிமை மறுக்கப்பட்டு நாயினும் கடையவனாக ஆக்கப்பட்டானே ஈழமண்ணின் உரிமையுள்ள மகன்… அவனுக்காக ஆட்சிபீடமேறியபின் குரல் கொடுத்தார்களா…? பதவி சுகம் பதர்களைப் போல அவர்களை ஆக்கியதா…? தமிழா உன்னை எவனாவது ஆண்டதாக வரலாறு இருக்கிறதா…? நீ உன் உரிமைகளைப் போராடிப் பெற ஏன் தயங்குகிறாய்…? மேற்கு நோக்கி கடலில் கலக்கும் நதிகளில் இருந்து ஒரு சொட்டு நீர் உனக்கு தருவதற்கு அவர்களுக்கு மனமிருக்கிறதா…? நீ ஏன் உன்னிடமுள்ள கார்னைடு மணலையும், பெட்ரோலையும், மின்சாரத்தையும் எல்லோருக்கும் தரவேண்டும்… உனது உரிமை எவை எது என்று கண்டறியும்  ஆற்றலையுமா இழந்து போனாய்..? தன்னலமில்லாமல் வாழ்ந்து காட்சிக்கு எளிமையாய் தாழக்கிடந்தவர்களை தட்டி எழுப்பின ஈரோட்டுச் சிங்கம் மாதிரி எந்தத் தலைவனும் உண்டா…?
இதோ இந்த காமராஜர் ஏழைகளுக்காகவே வாழ்ந்து ஏழையாகவே மறைந்தவர். அவரது வாழ்க்கை ஒரு யோகியைப் போல. தந்தை பெரியாரும் பசும்பொன் தேவர் அய்யா அவர்களும் காமராஜர் மீது எத்தனை நல்லெண்ணம் வைத்திருந்தார்கள்.
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு தடவை காமராஜர் திருவண்ணாமலை வந்திருந்தார். சுயம்பு நாடாருக்கு அப்போது நல்ல இளம் வயது. மாவட்டத் தலைவரிடம் தனது விருப்பத்தைச் சொன்னார். ‘தலைவருக்கு ஒரு வேளை சாப்பாடு தர விரும்புகிறேன்…’ மாவட்டத் தலைவர் நல்ல மனிதர். ஒரு சாதாரணனின் வேண்டுகோளை புறக்கணிக்கவில்லை. தலைவரிடம் அழைத்துப் போனார். தலைவரை நேரில் பார்த்தபோது சுயம்பு நாடாருக்கு பேச்சு வரவில்லை. ஆண்சிங்கம்; ஒன்று அரியணையில் இருந்தது போல் இருந்தது. அவரது கண்பார்வையில் ராஜாளியின் கூர்மை…..
‘என்ன விஷயம்…’
நல்ல முரட்டுக் குரல் தலைவருக்கு.
“உங்களுக்கு ஒருவேளை சாப்பாடு தரணும்னு பிடிவாதம் பிடிக்கிறார் அய்யா…”
“எதுக்கப்பா எனக்கு சாப்பாடு தரணும்னு நினைக்கிறே…”
“அய்யா நான் பாத்திரக்கடையில் சம்பள ஆளாத்தான் வேலை செய்யறேன். என்னால உங்களுக்கு பணம் காசு தரமுடியாது. ஒருவேளை சாப்பாடு தந்தேன்னா… அதைவிட மகிழ்ச்சியான விஷயம் எனக்கு வேறு இல்லை…”
“நல்லது… மதியச் சாப்பாடு நான்கு பேர் சாப்பிடற மாதிரி கொண்டுவா…”
சுயம்பு நாடாருக்கு உலகமே தன் வசம் வந்தது போல் இருந்தது. மதியம் அடுக்குகளில் சாப்பாடு எடுத்துப் போனார். தலைவர் அவரது நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நேரம் தாழத்தான் வந்தார். தலைவரோடு ஜந்து பேர் அமர்ந்து கொண்டார்கள். நல்ல தலை வாழை இலையாகப் போட்டார். பரிமாறினார். தலைவர் சாப்பிடச் சாப்பிட சுயம்பு நாடாரிடம் பேச்சுக் கொடுத்தார்.
“எந்த ஊரு.”
“திருநெல்வேலி மாவட்டம் நவ்வலடி அய்யா…”
“கேள்விப்பட்ட மாதிரி இருக்கே…”
“திசையன்விளைக்கு பக்கத்து ஊருங்க அய்யா…”
“அதானே.. நிறைய தடைவ அந்த வழியா வந்திருக்கேன்… தம்பி கருத்தையா அங்கேதானே இருக்கான்… ஏதாவது செய்யறானா….”
“அவரை மாதிரி ஆளுங்க கிடைச்சது பெரிய புண்ணியம்ங்க அய்யா….”
“உனக்கு பிள்ளைங்க எத்தனை..?”
“ஒன்பதுங்க அய்யா…”
“நிறைய பெத்துகிட்டிருக்கே…!”
கொஞ்ச நேர மௌனம்.
“காங்கிரஸ் கட்சிக்கு என்ன பண்ணியிருக்கே…?”
“தேர்தல் நேரத்திலே பத்து நாள் லீவு போட்டுட்டு தெரு பூரா கொடி கட்டுவேன். நோட்டீஸ் ஒட்டுவேன். சைக்கிள்லே ஒலிபெருக்கி வச்சிட்டு சுத்துவேன்…”
“ஒன்னை எவண்டா காசு பணம் செலவு பண்ணச் சொன்னது. முட்டாள்… அறிவு கெட்டவனே… பார்க்கிறது பாத்திரக்கடை வேலை… நிறைய பிள்ளைங்க வேற… இந்தா கேட்டுக்க.. உன் பிள்ளைகளை நல்ல முறையிலே படிக்க வை… அறிவு சொல்லிக் கொடு… அதுதான் தேசத்திற்கு செய்யற பெரிய தொண்டு. அவன் அவன் பாடு படற காசை பாழாக்காம குடும்பத்தை கவனிச்சி பிள்ளைகளையும் கவனிச்சா தேசம் தன்னாலே முன்னுக்கு வந்திரும்… ராப்பகலா உழைச்சி ஒரு கடையை வைக்கப்பாரு. என் கொள்கைகள் பிடிச்சிருந்தா உன் வாக்கு சீட்டை எனக்குப் போடு, புரிஞ்சுதா.. அக்கம் பக்கத்துல இணக்கமா நடந்துக்க… எல்லாரும் சகோதரங்கதான்…”
ஒரு சாதாரணமானவனான தன்னிடம் பெற்ற தந்தையைப் போல் பரிவு காட்டி புத்தி சொல்லிய மாபெரும் தலைவனைப் போன்ற ஒருவனை எந்தப் பிறவியில் தேடுவது… என்ன எளிமை.. கருணை… தெளிவு…  ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் புத்தி சொல்லி கொடுத்தால் தேசத்துக்கே அறிவு சொன்ன மாதிரி என்பதை எவ்வளவு அழகாகச் சொன்னார்.
சுயம்பு நாடாருக்கு கட்டிலில் படுத்தபடியே நெஞ்சுவிம்ம அழுகை வந்தது. காமராஜரின் தியாகத்தில் ஆயிரத்தில் ஒன்றையாவது நாட்டு மக்களுக்குத் தருபவர்கள் நாட்டில் யாராவது உண்டா?
வெளியே தேர்தல் பிரசார வண்டி ஒன்று ‘வாக்காளப் பெருமக்களே…’ என்ற அழைப்புடன் சாலையைக் கடந்து கொண்டிருந்தது.
.................................................................................................................................................................................

தேவி
11.08.99

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக