வெள்ளி, 7 அக்டோபர், 2016

நந்து.. நந்துக்குட்டி...

நந்து… நந்துக்குட்டி…!
     புகுந்த வீட்டில நந்தினி அடி எடுத்து வைத்தபோது மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தன் நால்வரும் அவளை அதிருப்தியுடன் பார்த்தனர். கணவன் சிவராமனுக்கு மட்டும் அவள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
     நந்தினியின் தந்தை நரசிம்மன் சாதாரண பள்ளிக்கூட வாட்ச்மேன். நந்தினிதான் மூத்தவள். நான்கு பெண்பிள்ளைகளைப் பெற்றுவிட்ட நரசிம்மனுக்கு, அவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய பயம் இருந்தது.
     நந்தினியின் அழகுக்கு சிவராமன் வசமாகிப் போனதை தனது பெண்ணுக்கு வாய்த்த அதிர்ஷடம் என்று நினைத்தார் நரசிம்மன். ஆனால், சிவராமனின் தாய் தந்தையர் சுரத்தில்லாமல் நடந்து கொண்டதுதான் அவரை வருத்தமடையச் செய்தது.
     புகுந்த வீட்டின் நிலைமை சில நாட்களில் நந்தினிக்குத் தெளிவாக விளங்கியது. ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான மாமனாரின் சேமிப்பு முழுவதும் புதிதாகக் கட்டிய வீட்டில் கரைந்து போனது தெரிந்தது. வெளியில் வட்டிக்குப் பணம் வாங்கப்பட்டிருப்பதும், மாமனாருக்கு வரும் பென்ஷன் பணம் வட்டிக்கே சரியாகிப் போவதும் புரிந்தது.
     சிவராமனுக்கு அவன் வேலை பார்க்கும் தனியார் கம்பெனியில் அறுநூறு ரூபாய்தான் சம்பளம். வெளியில் அவனுக்கு நல்ல பெயர் இருந்தது. வசதியான இடங்களிலிருந்து பெண்வீட்டார் வந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த வரன்களில் ஒன்று அமைந்தால் வீட்டின்மேல் இருக்கும் இருபதாயிரம் ரூபாய் கடன் சுமை தீர்ந்துபோகும் என்று வாத்தியார் கணக்குப் போட்டிருந்தார். சிவராமனின் முடிவு அவரது கணக்கைத் தப்புக் கணக்காக்கியது. திருமணவயதில் தையல் மெஷினில்  நாட்களை விரட்டிக் கொண்டிருக்கும் மகளது மண வாழ்வும், பட்டம் பெற்றபின் வேலைக்காக அலைந்து திரியும் இரண்டாவது மகனின் எதிர்காலமும் அவரைப் பேதலிக்க வைத்தன. தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்த மகன் குடும்பப் பொறுப்பு இல்லாமல் நடந்து கொண்டு விட்டானே என்று மனைவியிடம் தனிமையில் புலம்பினார்.
     குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து நந்தினி அந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தாள்.
     “இப்போது குழந்தை வேண்டாம்…” என்று கணவனிடம் இரவில் கிசுசிசுத்தபோது….
     “குழந்தைன்னா உனக்குப் பிடிக்காதா நந்து..” என்று அப்பாவியாய்க் கேட்டான் சிவராமன். புதிய உயிரின் உடனடி வரவால் குடும்பத்தின் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படலாம் என்பதை அவள் சுட்டிக் கட்டியபோது அவனுக்கு உடம்பு சிலிர்த்தது. நடு இரவிலும் நந்தினி தூங்காமல் சிந்தனையில் இருந்தது அவனைக் குழப்பியது.
     “தூக்கம் வரலையா நந்து…?”
     “இல்லையே….”
     “பொய் சொல்றே… மணி ரெண்டாகுது… இன்னும் கொட்டக் கொட்ட விழிச்சிருந்தா என்ன அர்த்தம்…. ஏதாவது பிரச்சையா நந்து…?” அவள் பக்கம் சாய்ந்து ஆதரவுடன் அவள் முடிகளைக் கோதினான். அவளது கண்கள் பனித்தன.
     “நந்து… நந்துக்குட்டி… என்னம்மா?”
     “என்னால இந்த வீட்டுல என்ன பிரயோஜனம்னு யோசிச்சேன்.. உங்களுக்குப் பாரமாகத்தானே வந்திருக்கேன்..” தொண்டை அடைத்தது.
            “பொக்கிஷம் மாதிரி நீ கிடைச்சிருக்கியே போதாதா..”
     “அதனால பிரச்சனை தீர்ந்திருமா?”
     “இதைப் பார்… உன்னை எதுக்குக் கட்டிக்கிட்டேன் தெரியுமா…? எங்க அப்பா அம்மாவைக் கண்ணைப் போல பார்த்துக்கிடணும்… என் தம்பிக்குத் தாயா இருக்கணும். அவ்வளவுதான். எதுக்கு வீணாகப் போட்டு மனசைக் குழப்பிக்கறே… பேசாமல் படு…” அவளுக்கு ஆறுதல் சொன்னானே தவிர, விடியும் வரையில் சிவராமனுக்குத் தூக்கம் வரவில்லை.
     நந்தினி சீரும் சிறப்புமாக வீடு புகவில்லை என்ற குறை இருந்தபோதிலும் அவளது பணிவிடைகள் மாமனார், மாமியார் இதயத்தைத் தொட்டன. நந்தினியை வெறுப்போடு பார்த்த பார்வைகள் மாறி ‘நந்து.. நந்து..’ என்று அந்த வீடே அவள் பின்னால் சுற்றிவரத் துவங்கியது.
     அன்று விடுமுறை, சிவராமன் வராந்தாவில் பழைய இரும்பு நாற்காலிகளுக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தான். உள் அறையில் கடகடவென தையல் மெஷின் ஓடிக் கொண்டிருந்தது. மாமனார் ஈஸி சேரில் சாய்ந்திருந்தார். தயங்கியபடி சிவராமனிடன் வந்தாள் நந்தினி.
     “என்ன… நந்து…?”
            “புடவை வாங்கணும்.. நீங்க வேலை பார்க்கிற முதலாளிகிட்டே ரெண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்க முடியுமா?”
     சிவராமன் மிரண்டான்.
     “வீட்டுக் கடனே நிறைய இருக்கு.. இது தெரிஞ்சுமா கேட்கறே…?
     “கண்டிப்பா வேணுங்க..” அவள் என்னதான் வராந்தாவில் இருந்த கணவனிடம் மெதுவாகக் கேட்டாலும் ஹாலில் இருந்த மாமனாரின் காதில் தெளிவாக விழவே செய்தது. அதிர்ச்சியுடனும் வெறுப்புடனும் எழுந்து வந்தார்.
     “ஏண்டா, மடையா.. அவ கல்யாணம் முடிஞ்சு நம்ம வீட்டுக்கு வந்து ஒரு வருஷமாகுது. ஒரு புடவையாவது எடுத்துக் கொடுத்திருப்பியா.. நாளைக்கு முதலாளியைப் பார்த்துப் பேசி எப்படியாவது பணத்தை வாங்கிரு… அவளைக் கூட்டிக்கிட்டுப் போய் வேண்டிய புடவையை வாங்கிக் கொடு… பழைய கடனோடு இன்னும் இரண்டாயிரம்… அவ்வளவுதானே…”
     உள் அறையில் இருந்து எட்டிப் பார்த்த மாமியாருக்கும் விஷயம் விளங்கியது. இரண்டாயிரம் ரூபாய் கேட்கிறாள் என்றதும் உடம்பு ஆடியது. பெண்ணிடம் முணுமுணுத்தாள்.
     “இவ்வளவுதானா இவள்…” தாயும் மகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். தாயிடம் மகள் கேட்டாள்…
     “என்ன திடீர்னு புடவை ஆசை…?”
     “அவங்க ஊர்ல திருவிழா… பட்டு உடுத்திக்கிட்டுப் போகணும்னு ஆசை வந்திருக்கும்…”
     மகளின் கால்கள் வெறித்தனமாக தையல் மெஷினை இயக்கின.
     மாதத்துக்கு நூறு ரூபாய் பிடித்துக் கொள்ளப்படும் என்ற சம்மதத்துடன் இரண்டாயிரம் ரூபாயை எண்ணிப் போட்டார் முதலாளி. அரை நாள் லீவு கேட்டு ஜவுளிக் கடைக்கு நந்தினியோடு வந்தான். கடைக்குள் அவளை அனுமதித்துவிட்டு வெளியே நின்று கொண்டான்.
     இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு அவள் குரல் கேட்டது.
     “ஏங்க… இதைக் கொஞ்சம் தூக்கிக்க முடியுமா…?”
     “உங்க அப்பா வீட்டுலேருந்து வாங்கிக்கிட்டு வர்ற மாதிரியில்ல தெரியுது…” அவனையறியாமல் சுடுசொற்கள் சிதறின.
     வீடு வந்த பிறகு கூடத்தில் பாயில் அடுக்கி வைக்கப்பட்ட முப்பது புடவைகளைப் பார்த்து அனைவரும் வெகுண்டு போனார்கள். நாத்தனார், நந்தினிக்கு கேட்பது மாதிரி சத்தமாகவே தன் தாயிடம் சொன்னாள்.
     “இந்த அண்ணி பேராசைக்காரி… சே…”
     சிறிது நேரத்தில் வயர்கூடை நிறைய புடவைகளுடன் நந்தினி புறப்பட்டதும் அனைவரும் புரியாமல் விழித்தனர். மாமனாரை நெருங்கியவள் கால்களைத் தொட்டு வணங்கினாள்.
     “என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா… தவணை முறையில் புடவை வியாபாரம் பண்ணப் போறேன்… முதல்லேயே சொன்னா ஆளுக்கொரு அபிப்பிராயமா சொல்லித் திட்டத்தைச் செயல்படுத்த முடியாம ஆயிரும்னு சொல்லலை… துணிஞ்சு இறங்கிட்டேன்.. இதுல வர்ற வருமானம் வீட்டுக் கடனை அடைக்கறதுக்கு உதவியா இருக்கும்.”
     ‘இந்தப் பெண்ணையா தவறாக நினைத்தோம்’ பொங்கிய நெஞ்சமெல்லாம் விம்மின. கண்களில் நீர் பெருக மாமியார் ஒடிவந்து நந்தினியைக் கட்டிக் கொண்டு “நந்து… நந்துக்குட்டி…” கன்னங்களில் திரும்பத் திரும்ப முத்தமிட்டாள்.
......................................................................................................................

ஆனந்த விகடன்

25.03.90

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக