வெள்ளி, 7 அக்டோபர், 2016

அன்னை மடி


                                                                   அன்னை மடி
 நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள டாக்டர் இமயவரம்பனின் இல்லம் கலகலப்பால் களைகட்டியிருந்தது. விடிந்தால் அவரது ஓரே மகள் தங்கநிலாவுக்கு ஆபட்ஸ்பரியில் திருமணம். டாக்டர் இதய சிகிச்சையில் உலகப் புகழ்பெற்றவர். நிறைய அறிமுகம். நிறைய நண்பர்கள். அவரது மனைவி டாக்டர் குயிலிஇ மகன் டாக்டர் சொல்லழகன் அனைவருமே கல்யாண ஏற்பாடுகளில் களைத்திருந்தனர்.
 வீடு முழுக்க மனைவி வீட்டார் குழந்தை குட்டிகளுடன் ஓரே இரைச்சல். ஓயாமல் ஒலித்த டெலிபோன் சிணுங்கல்கள். ஜந்து நட்சத்திர விடுதிகளில் மிகப்பிரபலமான விருந்தினர்கள் எல்லாம் வந்துவிட்டநிலையில்இ மனைவியின் உறவுப்பட்டாளமே வந்து குவிந்து விட்ட சூழலில்இ கிராமத்தில் இருந்து தன்னுடைய சகோதரன் இளமாறனும் அவனது மனைவி பிள்ளைகளும் ஏன் இன்னும் வரவில்லை என்று அத்தனை பரபரப்பிலும் டாக்டரது இதயம் அவர்களுக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது.
 இரவு மணி எட்டைக் கடந்து கொண்டிருந்தது. கல்யாண மண்டபத்தை ஒரு முறை சரிபார்க்க வேண்டும். எல்லா காரியங்களும் ஓழுங்காக கவனிக்கப்படுகிறதா… டாக்டரும் அவரது மனைவியும் அலங்கரித்துக்கொண்டு புறப்பட்ட அதே வேளை வீட்டு வாசலில் கடகடவென ஆட்டோ நிற்கும் சப்தம். யாராக இருக்கும்…. டாக்டர் யோசித்து நிற்கையில் ஆட்டோவில் இருந்து அவரது தம்பி இளமாறனும் மனைவிஇ பிள்ளைகளும் இறங்கிக் கொண்டிருந்தார்கள். காவல்காரர் முத்தண்ணன் தம்பி குடும்பத்தை பரிவோடு அழைத்து வந்தார்.
 வீட்டினுள் அடியெடுத்து வைத்த தம்பியை டாக்டர் இமயவரம்பன் கட்டி அணைத்துக்கொண்டார். பரிதாபமாக விழித்துக் கொண்டிருந்த தம்பி மகனையும் மகளையும் ஆதரவுடன் பற்றிக் கொண்டார்.
 “ஏம்மா… ஒரு பத்து நாளைக்கு முந்தியே வந்திருக்கலாமே… எனக்குத்தான் கிராமத்துப்பக்கம் வர்றதுக்கு நேரம் கிடைக்கறதில்லை… உங்களுக்கென்ன…?”
 தம்பி மனைவி வெட்கத்துடன் நெளிந்தாள். கிராமத்து வெட்கம்.
 வீட்டிற்கு வந்த தம்பியையும் அவன் குடும்பத்தையும் மனைவி இன்னும் வரவேற்காதது அவருக்கு வருத்தத்தை தந்தது.
 “என்ன குயிலி வாங்கன்னு ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா…?
 “எனக்கும் சேர்த்துதான் நீங்க கேட்டாச்சே… சரி… சரி… நேரமாகுது… இவங்களை நான் கவனிச்சுக்கறேன்… நீங்க மட்டும் போயிட்டு வந்திருங்க…”
 “திருநெல்வேலியிலே இருந்து களைச்சுப் போய் வந்திருப்பாங்க… குளியலறையிலே வெந்நீரை எப்படி திறக்கணும்னு சொல்லிக்கொடு… சாப்பிட்டதும் தூங்கட்டும்… காலையிலே பார்த்துக்கலாம்…”
 “ஆகட்டும் புறப்படுங்க…”
 ஆபட்ஸ்பரியில் அனைத்தும் திருப்தியாக இருந்தது.
 டாக்டர் வீடு திரும்பும்போது இரவு மணி பதினொன்று.
 “தம்பியையும் குடும்பத்தையும் எந்த அறையிலே தங்கவச்சிருக்கே…?” மனைவியைக் கேட்டார்.
 “அவங்களை நல்லபடியா படுக்க வச்சாச்சு… நீங்க வாங்க சாப்பிடலாம். காலையிலே சீக்கிரம் எழும்ப வேண்டியதிருக்கு…”
 “அவன் கூட ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம்னு…. ஆசை ஆசையா ஓடி வந்தேன்…”
 “டெல்லி பாம்பேலயிருந்து நிறைய டாக்டர்ஸ் வந்திருக்காங்க…. அவங்களை கவனிச்சி அனுப்பறதைப் பற்றி யோசிங்க….” பேச்சின் கவனம் பிரபலங்களை நோக்கித் திரும்பியதால் தம்பியைப் பற்றிய சிந்தனை மாறிப்போனது. சாப்பிட்டார். அரை மணி நேரம் சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். திருநெல்வேலியில் அவர் பிறந்து வளர்ந்த கிராமம்… மறைந்த தாய் தந்தை.. நினைவு வந்தது. தம்பி வந்திருக்கிறான். அவனது குடும்பம் வந்திருக்கிறது. தனது வீட்டு குளிர்சாதன அறையில் அவர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார்கள். மன நிறைவுடன் படுக்கையில் சாய்ந்தார். தூங்கிப் போனார்.
 டாக்டர் குயிலி கணவனை எழுப்பியபோது விடியற்காலை மணி ஜந்து. முகூர்த்தம் ஏழு மணி என்பதால் எல்லோருமே எழுந்து கொண்டார்கள். டாக்டர் இமயவரம்பனை மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
 அனைவரும் மண்டபத்துக்கு புறப்படத் தயாரானபோது டாக்டர் தம்பியைத் தேடினார்.
 “அவங்க முந்தி போயாச்சு…”

 திருமண மண்டபமே விருந்தினர்களால் நிரம்பிப் போயிருந்தது. இதயத்தை தொட்ட நாதஸ்வர இசைஇ பட்டுப்புடவைகளின் சரசரப்பு… வேதங்கள் இல்லை. யாக சாலையும் இல்லை. எல்லாம் பழம் தமிழர் முறையில். பெண்ணே இனி நீ என் உடமை… நான் உன் அடிமை என்பதை உணர்த்துவதும்இ சிறைப்படுத்தும் சின்ன நூல்கண்டு அல்லஇ சமுதாயச் சீரழிவை தடுக்க வந்த சத்திய வேலி என்று உணரப்பட்டதுமான மங்கலநாணை மணமகள் கழுத்தில் கட்டினான் மாப்பிள்ளை.
 மேடையில் மணமக்களுக்கு பரிசுப் பொருட்கள் குவிந்த வண்ணம் இருந்தன. உணவு மண்டபம் நிரம்பியிருந்தது. டாக்டர் ஒவ்வொருவரையும் அக்கறையாய் கவனித்துக் கொண்டார். அன்பைப் பொழிந்தார். விருந்தினர்களில் பேதம் பார்க்கவில்லை. எல்லோரிடமும் அவரது அன்பு மாறாது இருந்தது.
 பதினொரு மணிக்குள் மண்டபம் காலியானது. விருந்தினர்கள் அனைவரும் விடைபெற்றுச் சென்றாயிற்று. மணமக்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு மனைவியோடு தானும் புறப்பட்டார். வீட்டில் மனைவியின் உறவுப் பட்டாளம் அப்படியே இருந்தது. மதியச் சாப்பாட்டிற்காக வந்தமர்ந்த போதுதான் தம்பியின் நினைவு வந்தது. “அடடா… அவனைக் கவனிக்காமல் போனோமே… திருமண மண்டபத்தில் கூட கண்ணில் தட்டுப்படவில்லையே.. எங்கே அவன்…? குயிலி… டாக்டரின் முகத்தில் பதட்டமும் கோபமும்.
 குயிலி அலட்டிக் கொள்ளாமல் “என்னங்க…?” என்றாள்.
 “என் தம்பி… அவன் மனைவி… பிள்ளைகள் எல்லாம் எங்கே…?”
 “ஊர்லே அவசர வேலையாம்… கல்யாணம் முடிஞ்சதுமே புறப்பட்டுப் போயிட்டாங்க…”
 “என்கிட்டே கூட சொல்லிக்காமேயா…?
 “அந்தக் கூட்டத்துல உங்ககிட்டே சொல்லி விடைபெறுவது சிரமம்ங்கறதினாலே…. என்கிட்டே சொல்லிட்டு போயிட்டாங்க… உங்க பொண்ணுக்கு அரைபவுன் மோதிரம் மட்டும் போட்டாங்க… இவங்க மோதிரம் போடலைன்னு யார் கவலைப்பட்டா…”
 டாக்டர் இலையில் இருந்து எழுந்து கொண்டார். குயிலியைப் பார்க்கப் பார்க்க அவரது நெற்றி நரம்புகள் புடைத்தன. அந்த இடத்தில் அவரது கோபத்தையும் ஆத்தி;ரத்தையும் அடக்கிக் கொண்டு அவரது அறையை நோக்கி நடந்தார். அவரது மகனும் மகளும் ஒன்றும் புரியாமல்  ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். குயிலி கணவனைத் தொடர்ந்து அவரது அறைக்குள் சென்றாள். கண்கள் சிவக்க டாக்டர் அவளைக் கேட்டார்.
 “என் தம்பியையும் அவன் குடும்பத்தையும் என்ன பண்ணினே…?”
 “இதென்ன கேள்வி… கல்யாணத்துக்கு வந்தாங்க… சாப்பிட்டாங்க… புறப்பட்டு போயிட்டாங்க…”
 ஏதோ விபரீதமாக நடக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு மகனும் மகளும் அறைக்குள் நுழைந்தனர்.
 “தம்பி முத்தண்ணனை அழைச்சிட்டு வா…”
 “அவரு எதுக்கு இப்போ….?” குயிலி இடைமறிக்க…
 “நான் சொன்னதைச் செய்…!”
 முத்தண்ணன் அந்த பங்களாவின் காவல்காரர் மட்டுமல்ல… டாக்டரது கிராமத்துக்காரரும் கூட. முத்தண்ணன் வந்தார். அவரது கைகளின் நடுக்கத்தை டாக்டர் கவனிக்கத் தவறவில்லை.
 “முத்தண்ணா… ஊர்ல இருந்து தம்பி குடும்பத்தோடு வந்திருந்தானே… அவன் எங்கே தங்கியிருந்தான்… ஏன் என்கிட்டே சொல்லிக்காம புறப்பட்டுப் போனான்…?”
 முத்தண்ணன் சங்கடத்தோடு பார்த்தார்.
 “சொல்லுங்க முத்தண்ணா…” டாக்டரை இவ்வளவு உக்கிரத்தோடு யாரும் பாhத்ததில்லை.
 “வேணாம் தம்பி.. என்னை வேண்ணா ஊருக்கு அனுப்பி வைச்சிரு…”
 “குயிலி வெளியே போடி…” அவள் அஞ்;சி வெளியேற முத்தண்ணன் அழுதுகொண்டே எல்லாம் சொன்னார்.
 “ஊர்ல இருந்து தம்பி வந்ததும் நான் கவனிச்சுக்குவேன்னு உன்னை திருமண மண்டபம் போகச் சொல்லிருச்சு… நீயும் போயிட்டே… உடனே சவுக்கால அடிச்ச மாதிரி தம்பிகிட்டே அம்மா பேசிச்சி… உங்களையெல்லாம் யார் வரச்சொன்னாங்க… வந்தது வந்தாச்சு… கல்யாண மண்டபத்துல ஒருஅறை தரச்சொல்றேன்… போய் சாப்பிட்டுட்டு தங்கிக்குங்க… மண்டபத்துல நான்தான் அவரோட தம்பின்னு சொல்லிக்கிட்டு வெளியிலே தலைகாட்டக் கூடாது… அது அவருக்குத்தான் அவமானம்….
 உன் பொண்ணுக்கு வாங்கிட்டு வந்த மோதிரத்தை கூட தூக்கி வீசிருச்சு. பிள்ளைங்கயெல்லாம் பசியாயிருக்கண்ணி அவங்களுக்காவது ஒருவாய் சாப்பாடு கொடுங்க அப்புறமா மண்டபம் போய்க்கிறோம்னு தம்பி அழுதுகிட்டே கேட்டிச்சு… அதை காதுல வாங்கிக்காம சரக்கு ஏத்தற வேன்ல மண்டபத்துக்கு ஏத்திவிட்டிருச்சு…
 ராத்திரி தம்பி;யோட நானும் மண்டபத்துலதான் இருந்தேன். தம்பி அழுதுகிட்டே இருந்திச்சு… காலையிலே கல்யாணம் முடிஞ்சதும் ‘என் அண்ணன் பிள்ளைங்க நல்லா இருக்கணும்னு…’ வானத்தை பார்த்து கும்பிட்டுட்டு புறப்பட்டு போயிருச்சு.. அதுகிட்டே செலவுக்கு இருக்கோ என்னமோன்னு நான்தான் என் சம்பள ருபாய்ல ஆயிரத்தை கொடுத்து ஆட்டோ பிடிச்சி அனுப்பி வைச்சேன்… உன் தம்பியும் குடும்பமும் வந்ததும் போனதும் உன் பிள்ளைகளுக்கு கூட தெரியாதுப்பா…”
 டாக்டரின் கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளமாய் பீறிட்டுக்கிளம்பியது. கதறிக் கதறி அழுதார். மகனும் மகளும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதயநோய் நிபுணரான அவருக்கே மாரடைப்பு வரும் சூழ்நிலை. தங்கநிலா குளிர்சாதன அறையிலும் வியர்த்திருந்த அவரது முகத்தை தாங்கி மெல்லிய துண்டால் ஒற்றி எடுத்தாள். அவளது கண்களிலும் கண்ணீர். மகளது கைகளைப் பற்றிக் கொண்டார்.
 “அம்மா உன் சித்தப்பனுக்கும் எனக்கும் பதினைந்து வயது வித்தியாசம்… என்னை டாக்டருக்கு படிக்க வைக்கறதுக்காக எங்க அப்பா இருந்த வயலையும் தோட்டத்தையும் வித்தாங்க… நான் முதல் வகுப்புல தேர்ச்சியானேன். அப்பதான் உங்க அம்மாவை பெண் பேசி அவங்க வீட்டுல இருந்து வந்தாங்க… என்னை படிக்க வச்சே எங்க வீடு ஏழ்மையாகிப்போச்சு… உங்க அம்மாவின் அப்பா இரண்டு லட்ச ரூபாயை எங்க அப்பா கையில கொடுத்தாங்க… பையன் எங்களோட இருப்பான்னு சென்னைக்கு அழைச்சிட்டு வந்திட்டாங்க… உங்க அம்மா வீடு பணக்கார வீடுங்கறது உங்களுக்குத் தெரியும். அவங்கதான் ஆஸ்பத்திரியெல்லாம் கட்டித்தந்தாங்க… என் முயற்சியாலேயும் திறமையினாலேயும் இந்தியாவிலயே பெரிய இதய சிகிச்சை நிபுணர்னு பேர் வாங்கினேன்… கோடி கோடியா சம்பாதிச்சுக் கொடுத்தேன்.
 ஆனா உங்க அம்மா என் வீட்டாரை அண்டவிடவில்லை…. வீடு தேடி என் அப்பா வந்தபோதெல்லாம் விரட்டியடிச்சா… என்னை பணத்துக்கு வித்ததா நினைச்சி எங்க அப்பா கவலையிலேயே செத்துப் போயிட்டாங்க… அப்பா போன கொஞ்ச நாள்ல அம்மா மரணப்படுக்கையில்.. செய்தி வந்ததும் ஓடிப்போனேன்… அம்மா என் கையைப்பிடிச்சிக்கிட்டு ‘தம்பியை கைவிட்டிராதேடாண்ணு’ சொல்லி உயிரை விட்டாள்.
 இதய மருத்துவத்தில் பெயர் வாங்கணும்னு உலகம் ப10ரா சுத்திக்கிட்டிருந்தேன். தீபாவளி வந்தா மட்டும் சித்தப்பாவுக்கு பத்தாயிரம் ரூபாய் அனுப்புவேன். அப்புறமா அவனைப் பற்றி நினைக்கவே நேரமிருக்காது… ஆஸ்பத்திரி… வைத்தியம்…. அறுவை சிகிச்சை.. விமான நிலையம் இப்படியே என் நாட்கள் ஓடிருச்சு….
 உன் திருமணத்துக்கு கூட நேர்ல போய் அழைக்க முடியல. தபால்லதான் பத்திரிகை அனுப்பினேன் எவ்வளவோ ஆசையா நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கு வந்தவனை அவமானப்படுத்தி கேவலப்படுத்தி அனுப்பி வைச்சிருக்கா…. அவன் மனசு என்ன பாடு பட்டிருக்கும்… எந்த நிலைமையில ஊர் போய் சேர்ந்திருப்பான். அம்மா… சாயங்காலம் நீ உன் மாப்பிள்ளை வீடு போகணும்… என்னைப்பற்றி எதுவும் நினைக்காமல் போய் வா… சொல்லழகா.. இநத அறைக்குள் உங்க அம்மாவோ வேறு யாரோ வரக்கூடாது… வந்தா சத்தியமா சுட்டுக் கொன்னுருவேன்….” அடிபட்ட புலியாய் அவர் சீற அவர்கள் மிரண்டு போய் வெளியே வந்தார்கள்.
 சாயங்காலம் குயிலியே மகளை மாப்பிள்ளையோடு அனுப்ப வேண்டியதாயிற்று. மகள் புறப்பட்டு சென்றதும் வீடே ஆழ்ந்த அமைதியில்.
 இரவு ஏழு மணிக்கு டாக்டர் கையில் பெட்டியுடன் வெளியில் வந்தார். அவரைத் தடுத்த குயிலியை “ச்சீ… தள்ளு… நீயெல்லாம் ஒரு பெண்ணா… உனக்கும் எனக்கும் கணக்கு தீர்ந்து போச்சு…” அவள் பேச்சற்று நிற்க அவரை ஏற்றிக் கொண்ட டாட்டா சுமொ திருநெல்வேலி நோக்கி சீறிய பாய்ந்தது.
 விடிந்ததும் விடியாததுமாய் வீட்டருகில் வந்து கிரீச்சிட்ட சுமோவைப் பார்த்து தம்பி இளமாறன் அதிர்ந்தான். அதில் இருந்து இறங்கி அண்ணனைப் பார்த்ததும் பிரமித்தான். “அண்ணா” என்று உடைந்துபோய் அவர் கால்களில் விழுந்தான். அவனை அப்படியே தூக்கி வாரியணைத்துக் கொண்டு “உனக்கு இடமில்லாத வீடு எனக்கு தேவை இல்லைடா… நம்ம வீட்டுக்கு வந்திட்டேன்டா…” அவரை நோக்கி ஓடிவந்த தம்பி பிள்ளைகளை குனிந்து தூக்கிக் கொண்டார். முத்தம் கொஞ்சினார். கார் நிறைந்த பரிசுப் பொருட்களைப் பார்த்த குழந்தைகள். “இதெல்லாம் யாருக்கு பெரியப்பா” இதெல்லாம் உங்களுக்குத்தான்டா என் கண்ணுகளா… இவைகள் மட்டுமில்லேடா… பெரியப்பாவே உங்களுக்கு பரிசா வந்திருக்கேன்…”
 அந்த பழைய வீட்டின் தாழ்வாரத் திண்ணையில் அமர்ந்தார். அது அன்னையின் மடிபோல் அவரை இதமாகத்தாங்கிக் கொண்டது.

தேவி
27.12.2000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக