வெள்ளி, 7 அக்டோபர், 2016

இதயம் இருக்கிறது

இதயம் இருக்கிறது
     வானத்தில் இரவுப் பூக்கள் பூத்திருந்தன. காற்று பேய் வேகத்தில் இரைந்து கொண்டிருந்தது. தென்னந்தோப்பின் ஓலைகள் சரசரவென ஒன்றோடொன்று உரசி அந்த இரவிலும் பயங்கரத்தை தோற்றுவித்துக் கொண்டிருந்தன.
     வேலய்யா விழித்துக் கொண்டான். நேரம் நடுச்சாமமாக இருக்கக் கூடும் என்று யூகித்தான். பக்கத்தில் பொன்னி சுருண்டு கிடந்தாள்.
     “ஏ புள்ள எழுந்திரு.. நேரமாகுது…
     அவள் உடலை நெளித்தபடி எழுந்து உட்கார்ந்தாள்.
     இப்போதுதான் தூங்கத் தொடங்கியது போல் இருந்தது. அதற்குள் நள்ளிரவு நெருங்கி விட்டதா?
     முன்தினம் பொழுது சாய்ந்து கொண்டிருந்த பொழுது இளந்தோப்புகளுக்கு தண்ணீர் பாய்த்து முடித்திருந்தான் வேலய்யா. பொன்னி தட்டி வியாபாரிகளுக்கு பாக்கி இருந்த தட்டிகளைப் பின்னி முடித்திருந்தாள். சமைத்து முடிக்கும்  போது மணி எட்டைக் கடந்திருந்தது. இரண்டு வயது சோமுவையும், ஆறு வயது வள்ளியையும் தூங்கப் பண்ணிய பின் அவளுக்கு கண் இருண்டு கொண்டு வந்தது. அசதியில் அப்படியே சாய்ந்து தூங்கிப் போனாள். வேலய்யா வெளியில் கிடந்த தென்னந்தட்டியில் முடங்கியிருந்தான்.
     அதன் பிறகு நள்ளிரவில் தான் மூன்று லைன் கனெக்சன் கிடைக்கும். மூன்று லைனிலும் மின்சாரம் இருந்தால் தான் மோட்டார் ஓடும். இரண்டாயிரம் வாழைக்கு இன்று இரவுமுறை வைத்திருந்தார் முதலாளி. இறைத்தாக வேண்டும்.
     “லைட்டை பத்த வச்சுட்டியா?”
     “ம்…!”
     “லைட் தொங்க போட கம்பியை எங்க புள்ள…?”
            “இதோ எடுத்துத்தாரேன்!”
     “குடிசைப் படலையைச் சாத்திப்போடு. காத்து வேகமாக அடிக்குது. புள்ளைங்க முழிச்சிக்கிட்டு அழுதிட்டு கிடக்கும்…!”
     கருப்பன் வந்து வாலை ஆட்டிக் கொண்டு நின்றது. தாழ்வார தொழுவத்தில் வண்டி மாடுகளின் மணிச் சத்தம் கிணிங் கிணிங் என்று கேட்டுக்கொண்டிருந்தது.
     “நில்லு புள்ள! மோட்டாரை தட்டி விட்டுட்டு வந்துடறேன்.” மோட்டார் அறைக்குள் நுழைந்து கரண்டை சோதித்தான். ஸ்டார்டரின் பச்சை பட்டனை அமுக்கினான். மோட்டார் கடகடவென இறைந்தது. தண்ணீர் வரவில்லை.
     “முதலாளி கிட்ட குட்வால்வ் வாசரை மாத்தணும் மாத்தணும்னு சொல்றேன். காதுலேயே போட்டுக்க மாட்டேங்கறாரு… கொஞ்சம் சாணி இருந்தா எடுத்தா புள்ள…!”
            லைட்டையும் இரும்புக் கம்பியையும் கீழே வைத்து விட்டு பழைய தோண்டியில் சாணத்தை அள்ளிக் கொண்டாள். வாளியில் கரைத்தாள். மூன்று இஞ்ச் இரும்புக் குழாயில் ஊற்றினாள். சரசரவென அது இறங்கிற்று.
     மடமடவென நான்கைந்து வாளித் தண்ணீரை எடுத்து வந்து தொடர்ந்து ஊற்றினான், வேலய்யா! தொட்டியில் இருந்து இறங்கி வந்து மீண்டும் ஸ்டார்ட்டரை அமுக்கினான். அமைதியாக அந்தப் பழைய மோட்டார் ஒடியது. தண்ணீரை வாரி இறைத்தது….!
     “வா போகலாம்….!”
     லைட்டை அவள் தூக்கி;க் கொண்டாள். இடுப்பில் அரிவாளை தொங்க விட்டு கம்பியையும், மண் வெட்டியையும் கையில் எடுத்துக் கொண்டான்.
     “பகல்லே ஒழுங்கா கரண்ட் வந்திச்சுன்னா இவ்வளவு தொந்தரவில்லே…!”
     “என்ன பண்றது? நாமபடுற அவதிய இந்த நாட்டை ஆள்றவுங்க கவனிக்கவா போறாங்க….?”
            “ஐயோ அம்மா! பாம்பு காலைச் சுத்திகிட்டுதே!”
     “அசையாம, பயப்படாம நில்லு….!”
     அவள் கையில் இருந்த லைட்டை வாங்கி நிதானமாக சோதித்தான். பாம்பு மஞ்சள் கலரில் தடியாகத் தெரிந்தது.
     “சாரைதான்… ஒண்ணும் பண்ணாது…!
     வாலைப் பிடித்து இழுத்து சுழற்றி தூர எறிந்தான். அவள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
     “நான் வர்லைங்க.. திரும்பிப் போயிர்றேன்… எனக்கென்னமோ பயமா இருக்கு… புள்ளைங்க வேற தனியா இருக்காங்க.”
     “போடி பைத்தியம்….! இந்தப் பாம்புக்கெல்லாம் பயந்துகிட்டு.. தினமும் எத்தனைப் பாம்பைப் பார்க்கிறேன்..! நீ வா.. நீ போயிட்டியானா எனக்கு வேலையே ஓடாது…!”
     அவன் நடந்தான்… அவள் தொடர்ந்தாள்…
     தென்னந்தோப்பைக் கடந்து வாழைத் தோட்டத்திற்குள் வந்தார்கள்.
     பொன்னி சேலையை முழங்கால் வரை சேறுபடாமலிருப்பதற்காக தூக்கிச் சொருவியிருந்தாள். மங்கிய லைட் வெளிச்சத்தில் கட்டுக்குலையாத அவள் அழகு அபரிதமாகத் தெரிந்தது. ஏதோ கவனக் குறைவாய் பாத்தியில் காலை விட்டவள் வேலய்யா மீதே தடுமாறி விழுந்தாள். அவன் அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். அவள் கைகள் இறுக்கிக் கொண்டிருந்த விதம் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டதால் பிடியை அவன் விடவில்லை.
     அவள்  சிணுங்கினாள்.
     “விடு மச்சான்…!”
            “என்ன புள்ள எத்தனை நாளாச்சி?”
     “அதுக்கு இப்ப என்ன பண்றதாம்…? தண்ணி பாய்ச்சி முடிஞ்சப்புறம் வீட்டுக்குப் போயி….!”
     “சொல்லுவே! உனக்கென்ன?”
            “தண்ணி உடைச்சி போகுது மச்சான். முதல்ல அதைக்கவனி”
     “அது போகட்டும்! எப்படிப் போனாலும் வாழைக்குத் தானே போகுது?”
     “வாழை மரங்களின் அடியில் காய்ந்த பகுதிக்கு அவளை அள்ளித் தூக்கிச் சென்றான். அவர்கள் நாடகம் அங்கு துவங்கியது!”
     “பிள்ளைகள் தனியாக படுத்திருக்கு மச்சான்!”
     “ம்…!”
     “தண்ணி வேற தாருமாறா பாய்ஞ்சிக்கிட்டிருக்கு!”
     “ம்…!”
     “நான் சொல்றது காதுல ஏறுதா?”
     அவன் எதையும் சிந்திக்கும் நிலையில் இல்லை.
     அரைமணி நேரம் ஆயிற்று. எழுந்து கொண்ட போது பதறிப்போய் இருந்தாள். பிள்ளைகள் நினைவுக்கு  வரவே, அவள் குடிசையை நோக்கி ஓடினாள். தண்ணீர் வெள்ளக்காடாய் கிடந்தது. வெள்ளப் பெருக்கில் மணலில் ஊன்றியிருந்த லைட் விழுந்திருந்தது.
     பாத்திகளை இரவு நேரத்தில் சரிப்படுத்துவது இயலாத காரியம் என்பது வேலய்யாவுக்கு நன்றாக விளங்கியது. முதலாளி காலையில் வருவதற்குள் வரப்புகளைச் சரிப்படுத்திவிட வேண்டும். வேறு வழியி;ல்லை.
     வாய்க்காலைத் தட்டுத் தடுமாறி கண்டுபிடித்து வேறு பக்கம் தண்ணீரைத் திருப்பினான். சோர்வாக இருந்ததால் தண்ணீரை அள்ளிக் குடிக்கக் குனிந்தான். முகத்தில் டார்ச் லைட் வெளிச்சம் விழுந்தது.
     “யார் அது?” இடுப்பில் சொருவியிருந்த அரிவாளுடன் எழுந்து கொண்டான்.
     அவ்வப்பபோது தேங்காய்கள் திருடு போய்க் கொண்டிருந்ததால் திருட்டுப் பயல்களோ என்ற சந்தேகம் அவனுக்கு…
     “அரிவாளைக் கீழே போடுடா!”
     முதலாளியின் குரல் அல்லவா இது.
     “எசமான் நீங்களா… இந்த இருட்டுல…?”
     “ஆமாண்டா தண்ணி ஒழுங்கா பாய்க்கிறியா என்னண்ணு திடீர் சோதனை பண்ணிட்டுப் போகலாம்னு வந்தேன். என்னடா இது காடுமேடா தண்ணி கெட்டி நிக்குது. பாத்தியெல்லாம் அழிஞ்சி தண்ணி பாய்ஞ்சிருக்கு. மோட்டாரை தட்டி விட்டுட்டு தூங்கித் தொலைச்சியா? ஓடிப் போயி மோட்டாரை நிறுத்துடா! லைட்டும் இல்லியா? போடா அறிவு கெட்டவனே…!”
     வேலய்யா விரைந்து ஓடினான். மோட்;டாரை தட்டுத் தடுமாறி ஆப் பண்ணினான். விளக்கை பற்ற வைத்தான். அந்த வெளிச்சத்தில் நாற்காலியைத் தூக்கி வந்து போட்டாள்,
பொன்னி.

     முதலாளி அமரவில்லை அவர் கோபத்தில் இருப்பதை உணர முடிந்தது.
    
     பொன்னி குடிசைக்குள் போகத் திரும்பிய போது வெளிச்சத்தில் அவளது முதுகுப்பகுதி துல்லியமாகத் தெரிந்தது. திட்டுத் திட்டமாக செம்மன் கரை அவள் ஜாக்கெட்டிலும், சேலையிலும் இருந்தது. பின் தலையிலும் சிறுசிறு வாழைச் சருகுகள் கூடு கட்டியிருந்தன.

     முதலாளிக்கு உடம்புதான் கனமே தவிர உள்ளம் கனத்திருக்கவில்லை. அர்த்த ஜாமத்திலும் வாழைத் தோட்டத்திற்குள் சிரத்தையாக வேலய்யா நின்றிருந்தது அவன் வேலை செய்ய ஆர்வமுடன் இருந்திருக்கிறான் என்பதை உணர்த்தியது.
    
     பாவம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளக் கூட நேரம் கிடைக்கவில்லை. என்ன செய்வார்கள்?
    
     “சரி வேலய்யா, நான் வாறேன்! காலையிலேயே பாத்திகளைச் சரி பண்ணிடு!”
    
     பொன்னியின் முதுகையும் தலையையும் முதலாளி தன் பார்வையால் ஆராய்ச்சி பண்ணிய போதே காரியம் கெட்டு விட்டது என்று கருதினான் வேலய்யா. அவருக்கும் இதயம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான்.
    
     அவர் தலை மறைந்ததும் மனைவியைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்துக் கொண்டான்.

.....................................................................................................................................


தேவி

09.11.88

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக