வெள்ளி, 7 அக்டோபர், 2016

கடன்

கடன்
     பண்ணையார் குணசேகரன் பங்களா மாடியில் அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருந்த அந்தப் பிரதானப் பகுதி நீள அகலத்தில் மிகவும் விஸ்தாரமாக இருந்தது. வடக்கு மூலையில் பழமையான மேலை நாட்டுப் பியானோ. எல்லா பக்கங்களிலும் ஆளுயர சாளரங்கள். பர்மா தேக்குக் கூரை. சுவரில் பெரிய பெரிய பிரேம்களில் பல வண்ண ஓவியங்கள். இந்த விஸ்தாரமான அறையைத் தவிர இன்னும் ஏழு பெரிய அறைகள். மாடிப்படிகளில் வைதேகி ஏறி வரும் சத்தம் கேட்டது.
     “என்னங்க… மதியச் சாப்பாட்டுக்கு அப்புறம் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கறேன்னு சொல்லிட்டு வந்தீங்க… படுக்கையறையில இல்லாம இங்கே ஹால்ல உட்கார்ந்து என்ன பண்ணிட்டு இருக்கீங்க..”
     குணசேகரன் காப்பியைப் பருகிக்கொண்டே புன்னகையுடன் வைதேகியைப் பார்த்தார்.
     “வேற ஒண்ணுமில்ல… நம்ம பரம்பரையைப் பற்றி யோசிச்சிப் பார்த்தேன். எங்க தாத்தா எப்படி வாழ்ந்தார்னு உனக்குத் தெரியுமா?...
     “அவருக்கென்ன… பர்மாவில போயி சம்பாதிச்சிட்டு வந்தார்… நாலு குளத்தடி நஞ்சை.. ஜநூறு ஏக்கரா புஞ்சை… அவரு பேரைத்தான் இப்பவும் ஊரு சொல்லுதே.”
     “ஊரு வேற என்ன சொல்லுது.?”
     “அவரு கோட்டை கட்டி ஆண்ட கதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா.”
     “அதில்லேம்மா.. ஊரூரூக்கு அவருக்கு வைப்பாட்டி இருந்த கதையும் உனக்குத் தெரியணுமே.”
     “சே… எதைத்தான் பேசறதுன்னு விவஸ்தையில்லாம இது என்ன பேச்சு.”
            “பின்னே… சொல்றதா இருந்தா எல்லாத்தையும்தான் சொல்லணும். எங்க தாத்தா பக்கத்து ஊர்கள்ல வைப்பாட்டி வச்சிருந்தார்னா… எங்க அப்பா இன்னும் கொஞ்சம் மேல போயி பட்டணத்திலே வைப்பாட்டி வச்சிருந்தாரு. அந்தக்கால நடிகைகள்ல ஓண்ணு ரெண்டு பேரு எங்க அப்பாவுக்கு மட்டும் ஆடிக் காட்டினாங்க… என்னா பெருமை பார்த்தியா?”
     “நீங்க மட்டும் என்னவாம்?”
     “என் உடம்பிலே ஓடுறதும் அந்த ரத்தம்தானே… அந்தப் பாதையை சிந்திக்காம இருக்குமா. நானும் தவறியவன்தான்… அந்த வயசுல நீ என்னமா இருப்பே தெரியுமா. திரும்பவும் அந்தக் காலக் கட்டத்துக்கே போயிரலாம்னு தோணும். உன் கிட்டே அழகு இருந்திச்சு. அரவணைப்பு இருந்திச்சு. எல்லாமா சேர்ந்து என்னைத் தடுமாறவிடாம கட்டிப் போட்டிருச்சு..”
     “எதுக்காக இந்த ஆராய்ச்சி.”
     “சொல்றேன்.. தாத்தாகிட்டேயும் நிறையப் பணம் இருந்திச்சி.. அப்பா கிட்டேயும் இருந்திச்சி… இப்ப கோடி கோடியா நம்ம கிட்டேயும் இருக்குது. இவ்வளவு இருந்தும் பிறந்த மண்ணுக்கு உருப்படியா எதையாவது செஞ்சிருக்கோமான்னு மனசு கேள்வியா கேட்குது. மூணு தலை முறையிலும் சொத்துக்களைத்தான் பெருக்கிட்டு வந்திருக்கோம். நம்மைச் சுத்தி இருக்கிறவங்களுக்கு என்ன செய்தோம்ங்கிறதுதான் கொஞ்ச நாளா என்னோட சிந்தனை. வைப்பாட்டி வச்சிக்கறதும் ஆடம்பரமா செலவு பண்றதும் ஒரு பரம்பரைக்குப் பெருமை தேடித்தராது வைதேகி.. நம்ம பணத்திலே மற்றவங்களுக்காக உருப்படியா எதையாவது செய்திருக்கோமா?”
     “எனக்கு என்னங்க தெரியும்”
     “இருந்தாத்தானே சொல்றதுக்கு… தாத்தா, அப்பா, நான் எல்லாருமே ஒண்ணைப் பத்தா ஆக்கியிருக்கோம். அவ்வளவுதான்… இப்ப நம்ம பையன்க இரண்டு பேரையும் டாக்டராகவும் என்சினியராகவும் ஆக்கிவிட்டிருக்கோம்… ரெண்டு பேரும் மெட்ராஸ்ல ஏகமா சம்பாதிக்கறாங்க.”
            “செல்வம் குறையாம இருக்கிறது பெரிய பிராப்தம் இல்லையா.”
     “பிராப்தம்தான். செல்வத்தை நாலு தலைமுறையாக் குறைவில்லாம ஆண்டவன் தந்திருக்காரு! எதுக்கு, நாம மட்டும் அனுபவிக்கிறதுக்கு இல்லே! நாலு பேருக்கு அனுசரணையா இருக்கணும்ங்கறதுக்குத்தான்.”
     “ஜயா, தோட்டக்கார சுப்பையா வந்திருக்கார்.”
     வேலைக்காரியின் குரல்
     “இதோ வரேன்.”
            மனைவி வைதேகியோடு அகலமான மரப்படிகளில் விரைந்து இறங்கினார் குணசேகரன். புதிய சிந்தனையால் மனதும் உடம்பும் ஒரு சேர உற்சாகம் பிறந்தது போல் இருந்தது அவருக்கு.
     “உட்காருங்க சுப்பையா.”
     நீளமான பெஞ்சில் ஓடுங்கியபடி அமர்ந்தார் சுப்பையா. குணசேகரனின் கண்கள் அவர் மீது சஞ்சரித்தன. அழுக்கடைந்த வேட்டி… கிழிந்த பனியன்… இற்றுப்போன உடல் கட்டு… குழி விழுந்த கண்கள்.
     “எப்போ இருந்து நம்ம பண்ணையில வேலை செய்யறீங்க பெரியவரே?”
     சுப்பையாக் கிழவருக்கு சிரிப்பு வந்தது.
     “என்ன முதலாளி தெரியாதது மாதிரி கேட்கறீங்க…. உங்க அப்பா காலத்தில சிறு பையனா இங்கே வேலைக்குச் சேர்ந்தேன். அன்றையில இருந்து இன்று வரைக்கும் உங்க வீட்டுக் கஞ்சிதான் முதலாளி.”
     “பிள்ளைங்க எத்தனை?”
     “மூணு பொண்ணு நாலு ஆணுங்க.”
     “பிள்ளைங்கள படிக்க வச்சிருக்கீரா.
     “எப்படி முடியும் ஜயா… எல்லாம் நம்ம பண்ணையிலதான் வேலை செய்யுது.”
     “எத்தனை பேருக்குக் கல்யாணம் ஆகியிருக்கு..”
     “ஒரு பெண்ணுக்குத்தான் முதலாளி… மச்சினன் மகனுக்கே செலவில்லாமல் கொடுத்திட்டேன்.. இன்னும் இரண்டு பொண்ணுங்க பூத்து நாளாச்சுது… கல்யாணத்துக்கு வழி தெரியாம நிக்கறேன்.”
     “இப்ப சம்பளம் எவ்வளவு வாங்கறீரு?”
     “கணக்குப் பிள்ளை எப்பவுமே நானூறு ரூபாதான் தருவாக.”
     குணசேகரனுக்குப் பொட்டில் அடித்தாற் போல் இருந்தது. அவருக்கு மாத வருமானமே பல லட்சங்கள்.
     ஆனால் அவரிடம் வேலை செய்யும் இருபது பண்ணை ஆட்களுக்கு முன்னூறும் நானூறுமாகத்தான் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் நினைத்திருந்தால் அவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை. ஏன்… முன்னூறு நானூறுக்கு வேலை செய்யவே ஆயிரம் ஆயிரமாய் ஆட்கள் இருந்தனர். அவர்களது குறி பசிக்கும் வயிறுதான். ஒரு நாளைக்கு ஒரு பொழுதாவது அது அடங்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையே அவர்களுக்குப் போராட்டம். அந்தச் சூழ்நிலையைத் தானும் தவறாகப் பயன்படுத்தியது அவமானமாக இருந்தது. தான் மட்டும் ஆரம்பத்திலேயே சுப்பையாவுக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் சிறப்பான சம்பளம் கொடுத்திருந்தால் அவர்களது பிள்ளைகள் படித்திருப்பார்கள். நல்ல உணவைச் சாப்பிட்டிருப்பார்கள். புத்தம் புதுசாய் துணி மணி அணிந்திருப்பார்கள். தெரிந்தே கொத்தடிமைகளாய் அவர்களை வைத்திருந்தது அவரை நாண வைத்தது.
     “என்ன விஷயமா வந்தீங்க பெரியவரே.”
     “அதான்.. என் முதப் பொண்ணு விஷயமாத்தான் ஜயா, பேர்காலத்துக்கு பொங்கிப் போட்டுக் கூப்பிடணும்… எசமான் ஒரு இருநூறு ரூபாய் தந்தீங்கன்னா..” குணசேகரன் எழுந்து வீட்டிற்குள் சென்றார். சுப்பையாக் கிழவருக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்னால் இது போன்ற அவசரங்களுக்கு எப்போது வந்தாலும், கணக்கு பிள்ளையைப் பாருங்க, எனக்கு என்ன தெரியும், என்று மறு பேச்சுக்கு இடம் தராமல் அகன்றுவிடும் அதே மனிதருக்கு என்ன வந்தது?
     “சம்பளம்தான் மாசம் பிறந்த உடனே வாங்கித் தொலையறியளவே… அப்புறம் என்ன அட்வான்ஸ் மண்ணாங்கட்டி.”
     என்று எரிச்சல் படாமல் சிரித்த முகமாய்… நிச்சயம் அதிசயம்தான் நடந்திருக்க வேண்டும் . சுப்பையா கிழவர் யோசனையில் ஆழ்ந்திருக்கும் போது குணசேகரன் உள்ளறையில் இருந்து வந்தார். அவரோடு வைதேகியும் வந்தாள்.
     “இந்தாங்க பெரியவரே… இது உங்களுக்குதான். “இரண்டு நூறு ரூபாய் கட்டுகள்.
     அது எதற்கு என்று தெரியாமல் கிழவர் தடுமாற…
     “பெரியவரே, இந்த இருபதாயிரத்தை முதல் கட்டமா வச்சிக்குங்க… அடுத்தாப்போல உங்க மக இரண்டு பேருக்கும் கல்யாண ஏற்பாடு செய்யுங்க… செலவுக்கு ஒரு லட்ச ரூபா தர்றேன்.”
     சுப்பையா கிழவர் மெய் நடுங்க மலைத்துப்போய் நிற்க….
     “இது உமக்கு மட்டுமல்ல ஜயா… நம்ம பண்ணையில ஊழியம் செய்யற அத்தனை பேருக்கும்தான். போயிட்டு வாங்க.”
     நடப்பது உண்மைதானா என்பதை யூகிக்க முடியாமல் அவர் வெளியேற அடியெடுத்து வைத்த போது குணசேகரன் குரல் மீண்டும் அவரைத் தேக்கியது.
     “இது உங்களுக்கு இனாமாத் தர்ற கூலி அல்ல. நீங்க உழைச்ச கூலி. இத்தனை வருசமாத் தராத கூலி. தெம்பா போயிட்டு வாங்க….”
     உணர்ச்சிப் பெருக்கோடு வெளியே நடந்த கிழவரையும், மனிதத்தன்மையோடு நடந்து கொண்ட கணவனைவும் இமைக்காமல் பார்த்தாள் வைதேகி.

......................................................................................................................
சாவி

28.02.90

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக