வெள்ளி, 7 அக்டோபர், 2016

பிராயச்சித்தம்

பிராயச்சித்தம்
     தஞ்சாவூர் எஸ்.பி. அலுவலகம். எஸ்.பி. காலை ஒன்பது மணிக்கே வந்து விட்டார். எல்லா செக்ஷன்களும் பரபரப்பும் சுறுசுறுப்புமாய் இயங்கத் துவங்கின. பத்து மணிக்கு அந்த போன் வந்தது. எஸ்.பி.யே போனை எடுத்தார்.
     “எஸ்.. எஸ்.பி. ஸ்பீக்கிங்!”
     “சார், ராஜராஜசோழன் நகர்லே இருந்து பேசறோம்.”
     “யார் பேசறீங்க?”
     “என் பேரு ராமதுரை சார். அந்தப் பகுதியிலேதான் குடியிருக்கேன்…”
     “என்ன விஷயம்…?”
     “எங்க ஏரியாவுலே அம்மன்கோயில் இருக்கு சார். அதுக்கு கொஞ்சம் கிழக்கே ஒரு வீட்டுல சாராய வியாபாரம் புதுசா ஆரம்பிச்சிருக்காங்க. வீட்டு நம்பர் 113. ஏரியா மக்கள் மத்தியிலே இதற்கு எதிர்ப்பு கிளம்பி அடிதடி ஆகிப்போச்சி சார். சாராயம் வித்த ஆளை தூண்ல கட்டி வச்சிருக்கோம். உங்களுக்குத் தகவல் தரச்சொன்னாங்க…”
     எஸ்.பி. தனது எதிரில் அமர்ந்திருந்த ஏ.எஸ்.பி. மார்ட்டினை ஏறிட்டார். மார்ட்டின் பயிற்சிக்காகத் தஞ்சாவூர் வந்து ஒருவாரம் இருக்கும்.
     “ராஜராஜசோழன் நகர்லே, அம்மன் கோவில் பக்கத்திலே 113-ம் நம்பர் வீடு. அங்கே சாராயம் வித்ததா வீட்டுக்காரனை ஏரியாக்காரங்க பிடிச்சி அடிச்சி கட்டி வச்சிருக்காங்களாம். நீங்க போயி அட்டெண்ட்பண்ணி மெஸேஜ் கொடுங்க. தகவல் சொன்னவர் பெயர் ராமதுரை.”
     “எஸ் சார்”
     பதினைந்து நிமிடங்களில் இரண்டு ஜீப்புகளில் போலீசார் ராஜராஜசோழன் நகருக்கு விரைந்தனர். முதல் ஜீப்பில் இன்ஸ்பெக்டரும் போலீஸ்காரர்களும் இருக்க இரண்டாவது ஜீப்பில் ஏ.எஸ்.பி. மட்டுமே அமர்ந்திருந்தார். நகரில் குறிப்பிட்ட வீட்டருகே கூட்டம் இருந்தது. வெளியில் டெலிபோன் கம்பத்தில் சாராயம் விற்றதாகக் கூறப்படும் நபரைக் கட்டி வைத்திருந்தார்கள். உடலெல்லாம் செமத்தையாக அடிவிழுந்ததற்கான அடையாளங்கள் தெரிந்தன. வாயில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவரது அருகில் இளம் பெண் ஒருத்தியும் வயதான பெண் ஒருத்தியும் கதறி அழுது கொண்டிருந்தனர். ஏ.எஸ்.பி. ஜீப்பில் இருந்து இறங்கியதும் போலீசார் கூட்டத்தை விலக்கினார்கள்.
     ஏ.எஸ்.பி. யை நெருங்கிய அந்த வயதான பெண் கால்களில் விழுந்து மார்பில் அடித்துக் கொண்டாள்.
     “என் புருஷன் சாராயம் விக்கலே எசமான். இந்த ஊரு பாண்டிவளவன் ஏற்பாடுங்க இது தர்மதுரை…. என் மகளை எப்படியாவது கெடுத்துப்புடனும்ணு திட்டம் போட்டிருக்கான் ஜயா. பிழைக்க வந்தவங்களுக்கு வேற அடைக்கலம் இல்லே சாமி. இப்ப தன் ஆளுங்களை வச்சி, பத்துப் பதினைஞ்சி பேரை குடிக்கவும் வச்சி, இவரை அடிச்சி கட்டிவச்சிட்டாங்க எசமான்!”
     “இன்ஸ்பெக்டர், முதல்லே இவரை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருங்க. இவருக்கு இப்ப உடனடி சிகிச்சை தேவைப்படலாம். இவருகூட யாராவது பக்கத்து வீட்டுக்காரர் போகட்டும். இவரு மனைவியையும் மகளையும் விசாரிச்ச பிறகு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கலாம்.”    
     “வீட்டைப் பார்த்திருவோமா?”
     ஏ.எஸ்.பி. கேட்க இன்ஸ்பெக்டர் தலையை அசைத்தார்.
     பெரியம்மாவைக் கூப்பிடுங்க”
     அந்தப் பெண் அழுது கொண்டே உள்ளே வந்தாள்.
     “வீடு சொந்த வீடா?”
     “வாடகை வீடுங்க.”
     “எவ்வளவு வாடகை?”
     “நூறு ரூபாய்ங்க.”
     “எவ்வளவு நாளா சாராய வியாபாரம் பார்க்கறிங்க?
     “என் தாயி மீனாட்சி சத்தியமா நாங்க சாராயம் விக்கலீங்க. பாண்டிவளவன் எங்களை மிரட்டறதுக்குச் செஞ்ச வேலைங்க  சாமி.”
     “யார் இந்தப் பாண்டிவளவன்?”
     இன்ஸ்பெக்டர் பதில் சொன்னார்…
     “கட்சியிலே கொஞ்சம் செல்வாக்குள்ளவருங்க. பெரிய ஆளுங்க பழக்கம் உள்ளவரு.”
     “அவரு என்ன தொழில் பார்க்கிறாருஃ”
     “டவுன்ல இரண்டு பிராந்தி கடை இருக்கு. கள்ளச்சாராயம் தயாரிச்சி விக்கிறதாகவும் வெளியில பேசிக்குவாங்க.”
     “அந்தாளு மேலே முன்னால ஏதும் கேஸ் இருக்குதா?”
     மேல்மட்ட செல்;வாக்குள்ளவரு. எஸ்.பி.கூட அவருமேல நடவடிக்கை எடுக்கப் பயப்படுவாரு. கேஸ் போடறதா இருந்தா நிறைய போட்டிருக்கலாம் சார்.
     “ஏம்மா உன் புருஷனுக்கு என்ன வேலை?”
     “டவுன்லே ஒரு கம்பெனியிலே வாட்ச்மேன் சாமி.”
     “எத்தனை புள்ளைங்க?”
     “ஓரு பொண்ணும் ஒரு ஆணும்.”
     “பையன் என்ன பண்றாரு?”
     “கல்யாணம் ஆயிப் போச்சு. பெஞ்சாதி புள்ளைகளோட கிராமத்துல இருக்கான். எங்ககூட ஒட்டுறவு கிடையாது சாமி.”
     “உன் பொண்ணு ஏதாச்சும் வேலை பார்க்குதா?”
     “தையல் தைக்கும்”
     வராந்தாவுக்கு வந்தார் ஏ.எஸ்.பி.
     “பக்கத்து வீட்டுக்காரங்களை கூப்பிடுங்க இன்ஸ்பெக்டர்!”
     வந்தவர்கள் பயந்து போயிருந்தார்கள்.
     “இங்கே சாராய வியாபாரம் நடக்கிறது வாஸ்தவம்தானா?” ஏ.எஸ்.பி. கேட்டார்.
     “சே! சே! ஒரு பாவமும் அறியாத ஆளுங்க அவங்க….”
     ஏ.எஸ்.பிக்கும் அந்த நம்பிக்கை வந்தது. தூணில் கட்டிவைக்கப்பட்டிருந்த பெரியவரும் அந்த வயதான பெண்ணும் சாராயம் விற்றிருப்பார்கள் என்று நம்ப முடியவில்லை. சற்று தள்ளி கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்களை நெருங்கினார்.
     “ராமதுரைங்கறவரு யாரு…?
     பதில் இல்லை.
     இன்ஸ்பெக்டரின் காதில் கிசுகிசுத்தார்.
     “அந்;தாளுதான் மெசென்ஜர்.”
            “பாண்டிவளவன் ஆளுங்களாத்தான் இருக்கும் சார்.”
     மீண்டும் 113ம் நம்பர் வீட்டுக்கு ஏ.எஸ்.பி. வந்தார்.
     நடுஅறையில் இருந்த ஸ்டூலில் அமர்ந்து கொண்டார்.
     “ஏம்மா, ஏதோ உன் பொண்ணை கெடுக்கறதுக்கு திட்டம் போட்டான்னியே என்னது அது? எங்கே உன் பொண்ணு கூப்பிடு!”
     அந்த இருபத்தைந்து வயதுப் பெண் பெண்கள் கூட்டத்தில் இருந்து பயந்து நடுங்கியபடி தாயிடம் வந்து ஒண்டிக் கொண்டாள்.
     ஏ.எஸ்.பி. யின் விழிகள் அவளை அளவெடுத்தன. அழகான முகம், சந்தனநிறம், சுருள் முடி, வலதுபக்கக் கன்னத்தில் பெரிய மச்சம் இருந்தது.
     ஏ.எஸ்.பி. யின் விழிகளில் மாறுதல். அமர்ந்தவர் எழுந்து கொண்டார். அவரது பார்வை இன்னும் கூர்மையாகியது. அவளை பக்கத்தில் நெருங்கினார், “உன் வலது கையைக் காட்டு!’
     அவள் தனது வலது கையை அவரை நோக்கி நீட்ட, அதில் நீளமாய் தீப்பட்டகாயம் இருந்தது.
     ஏ.எஸ்.பி. யின் குரல் கம்மியது. அவளது இரண்டு கரங்களையும் ஆதுரத்துடன் பற்றிக்கொண்டு…
     “ஏம்மா, ஒரத்தநாடு ராணிதானே நீ….?”
     “நீங்க… நீங்க….
     அவளும் அந்த வயதான பெண்ணும் தடுமாற.
     “என்னையத் தெரியலே?..”
     “இல்லையே.”
     வயதான பெண்ணின் கரத்தைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டார்.
     “ராணி உனக்குமா தெரியலே…. உன் அண்ணம்மா!
     நாகர்கோவில் அண்ணன், மார்ட்டின்.”
     அவர்களுக்கு நினைவு வந்துவிட்டது. பதினேழு வருடங்களுக்கு முன்னால் தஞ்சாவூர் பஸ்-ஸ்டாண்டில் வீட்டை விட்டு ஒடிவந்து அழுது கொண்டிருந்த சிறுவன் மாhட்டினை வீரபாண்டித்தேவர் நெல் வியாபாரம் முடிந்து திரும்பும்போது பார்த்து வீட்டுக்கு அழைத்து வந்தது நினைவுக்கு வந்துவிட்டது.
     “என் மகனே.. நீ தானா ராசா?”
     அவள் ஏ.எஸ்.பி.யைக் கட்டிக் கொண்டு கதறிக் கதறி அழ, ஏ.எஸ்.பிக்கும் கண்ணீர் வந்தது. மார்ட்டினை ஏ.எஸ்.பி. உடுப்பில் பார்த்துப் பிரமித்துப்போன ராணிக்கும் அழுகை வந்தது.
     மார்ட்டின் ஒரத்தநாடடில் தங்கள் வீட்டுக்கு வந்த போது பதின்மூன்று வயதிருக்கும். அவளுக்கு எட்டு வயது. மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். மார்ட்டின் தாய்-தகப்பன் இல்லாத அனாதை என்றும், நாகர்கோவிலில் வேலை செய்த வீட்டில் கொடுமை தாங்காமல் ஒடி வந்ததாகவும் முதலில் சொன்னான். வீரபாண்டித் தேவர் அவன் அழுக்கடைந்த உடுப்பைப் பார்த்து முதலில் இரண்டு செட் துணி எடுத்து வந்து கொடுத்தார். நான்கு நாட்கள் அவர்கள் வீட்டில் அவன் பாசத்துடன் உபசரிக்கப்பட்டான். ராணி அவனோடு நன்றாக ஒட்டிக் கொண்டாள். சின்ன அண்ணா, சின்ன அண்ணா என்று அவனிடம் மிகப் பிரியம் வைத்தாள். அவள் கன்னத்து மச்சமும் குறும்புத்தனமான பேச்சும் மார்ட்டின் மனதில் பதிந்து போயிற்று.
     ஒரு நாள் விளையாட்டில் அடுப்படியில் விழுந்ததில் விறகுக் கங்கு விழுந்து அவள் கையில் தீக்காயம் பட, அவள் அழ… அவன்… அழ… வீரபாண்டித்தேவர் இருவரையும் சமாதானப்படுத்தினார்.
     வீரபாண்டித்தேவரும் அவர் மனைவியும் ஒரத்தநாட்டில் வசதியாக இருந்தார்கள். நெல்லும், வாழையும் அவர்கள் இல்லத்தை செழிக்க வைத்திருந்தது. தங்கியிருந்த நான்கு நாட்களிலும் எத்தனை ஏழை பாழைகளுக்கு தேவர் வீட்டம்மாள் வயிறு நிறைய சோறு போட்டிருப்பாள்! அவளது கழுத்திலும் காதிலும் தங்கமாக அல்லவா நிறைந்திருக்கும்.
     ஜந்தாவது நாள் வீரபாண்டித் தேவர் கையில் பேப்பருடன் வந்தார். பேப்பரில் மார்ட்டின் படம் ‘காணவில்லை’ பகுதியில் பெரிதாக இடம்பெற்றிருந்தது. வீரபாண்டித்தேவர் அதட்டிக் கேட்டபோது மார்ட்டின் அழுதுகொண்டே உண்மையைச் சொன்னான். பரீட்சையில் பெயிலாகிவிட்டதால் அப்பா திட்டினார் என்றும், அதனால் ஓடி வந்ததாகவும், தஞ்சாவூர் பஸ்-ஸ்டாண்டில் பணமும் துணியும் களவுபோன விபரத்தையும் தெளிவாகச் சொன்னான்.
     வீரபாண்டித்தேவர் கணமும் தாமதியாது நாகர்கோவிலுக்கு கடிதம் எழுத, மூன்றாம் நாள் மாலை அவரது வீட்டருகே கப்பல் போன்ற பென்ஸ்கார் வந்தது. காரில் இருந்து ஓடி வந்த மார்த்தாண்டம் எஸ்டேட் அதிபர் தாசன் நாடாரும் அவரது மனைவியும் மார்ட்டினை கட்டிக் கொண்டு பிழியப் பிழிய அழுதனர். அவர்கள் தேவரையும் அவரது மனைவியையும் வெகுவாகப் புகழ்ந்தார்கள். நன்றி சொன்னார்கள்! ராணிக்கும் அழுகை வந்தது. மார்ட்டின் தனது தாய்-தந்தையோடு போய்விடுவான் என்பதை தாங்கிக்கொள்ள இயலாமல் கேவிக் கேவி அழுதாள். மார்ட்டின் அவளை அணைத்துக் கொண்டு,
     “சின்னப் பாப்பாவை பார்க்க பெரிய லீவுலே வருவேனாக்கும் அழாதே கண்ணு!” என்று தேற்றினான்.
     மார்ட்டின் வீடு திரும்பிய பிறகு அவ்வப்போது ஒரத்தநாட்டிற்கு கடிதம் போடுவான். பதிலும் வரும். காலம் விரைந்து சென்றது. தாசன் நாடார் மகனின் மேல் விஷேச அன்பு செலுத்தினார். மார்ட்டினும் நல்ல பிள்ளையாய் படித்தான், வளர்ந்தான், ஐ..பி.எஸ். பாஸ் பண்ணினான். இவ்வளவு கால ஓட்டத்தில் ஒரத்த நாட்டிற்கு கடிதப் போக்குவரத்து நின்று போயிற்று. மனதில் வீரபாண்டித்தேவரும், அன்னையும், ராணியும் எப்போதும் நினைவுக்கு வருவதுண்டு, வீரபாண்டித்தேவர் மகன் அப்போதும் வீட்டுக்கு அடங்காதவன். இப்போதும் அப்படித்தான் போலும். தஞ்சாவூருக்கு ஏ.எஸ்.பி.யாக போஸ்டிங் ஆனதும் இரண்டாம் நாள் ஒரத்தநாட்டுக்கு சென்று வந்தான். வறட்சியால் விவசாயம் அடிபட்டுப்போக வீரபாண்டித்தேவரின் குடும்பம் தஞ்சாவூர் குடிபெயர்ந்த விவரத்தை அங்கு சொன்னார்கள். அவர்களை இந்த நிலையில் சந்திப்போம் என்று மார்ட்டின் நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை.
     ராணி கதறியபடி அவனது காலில் விழ, தேவரம்மாள் ஏ,எஸ்.பி.யை இன்னும் கட்டிப்பிடித்தபடி கதறிக் கொண்டிருந்தாள். வாசலில் அம்பாஸிடர் ஒன்று வந்து பிரேக் போட்டது. பாண்டிவளவன் டெட்ரக்ஸ் சட்டை, பாலியெஸ்டர் வேட்டியில் நான்கைந்து பேரோடு கம்பீராமாக நடந்து வந்தான்.
     “மிஸ்டர் ஏ.எஸ்.பி. நான் தான் பாண்டிவளவன்! நடவடிக்கை எடுத்தாச்சா…?”
     ஏ.எஸ்.பி. பாண்டிவளவனை பொங்கி வந்த கோபத்துடன் பார்த்துக் கொண்டே தேவரம்மாவிடம்,
     “ராணிகிட்டே என்ன வம்பு பண்ணினான். இந்த ஆளு…? என்றார்.
     “இந்த ஏரியாவிலேயே நாலு பொண்ணுகளை அதிகாரம் பண்ணி சீரழிச்சிருக்கான் தம்பி. ராணி வீட்டுல தனியா இருக்கும்போது பலாத்காரம் பண்ணப் பார்த்திருக்கான். அவ இவன செருப்பால அடிச்சி விரட்டிப்புட்டா. அதுக்காக எப்படியாவது அவமானப்படுத்தி காலடியில விழ வைக்கிறேனா இல்லையான்னு சபதம் போட்டு செஞ்சிருக்கான் தம்பி”
     “நான் யாருங்கறதை இன்ஸ்டெக்டர் சொல்லியிருப்பாரே… பாண்டிவளவன் மீண்டும் வார்த்தைகளைச் சிந்த ஏ.எஸ்.பி. தன்னை மறந்து ஓங்கி ஒரு அறைவிட்டார்.
     “இன்ஸ்பெக்டர், இந்த ஆளையும் கூட வந்திருக்கிறவன்களையும் இம்மிடியட்டா அரெஸ்ட் பண்ணுங்க! மிச்ச மீதி இருக்கிற அவன் கூட்டத்தையும் இரண்டு மணி நேரத்தில் பிடிச்சிரணும்.
     பாண்டிவளவனையும் அவன் ஆட்களையும் போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொள்ள, “என் மேலேயா கைவச்சிட்ட உன் சீட்டை கிழிக்கிறேனா இல்லையாபார்.”
     ஏ.எஸ்.பி. யின் கரம் மீண்டும் உக்கிரமாக அவன் தாடையில் பாய்ந்தது. போலீஸ்காரர்கள் பாண்டிவளவனையும் அவன் ஆட்களையும் ஜீப்பில் ஏற்றினார்கள். பாண்டிவளவனை அறைவிட்டு ஜீப்பில் ஏற்றிய ஏ.எஸ்.பி.யை கூட்டம் பிரமிப்போடு பார்த்தது. இன்ஸ்பெக்டருக்கு ஏ.எஸ்.பி நெருப்போடு விளையாடுவதாகத் தோன்றியது.
     ஏ.எஸ்.பி மார்ட்டினுக்கும் நிலமை விளங்காமல் இல்லை. தன்மீது பெரிய ஆட்களின் அதிகாரம் பாய்ந்து விசாரணை மேற்கொள்ளப்படலாம். தஞ்சாவூரில் இருந்தே அனுப்பப்படலாம். எப்படி ஆனாலும் ஆகட்டும். சமூகவிரோத செயல்களைச் செய்யும் எவராக இருந்தாலும் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அப்படிப்பட்ட மிருகங்கள் எந்தப் போர்வையில் இருந்தாலும் அவர்களை தொலைத்துக் கட்டுவதுதான் முதல் வேலையாக இருக்கும். இதில் பதவியே போனாலும் சரி. மனதுக்குள் கருவிக் கொண்டான் மார்ட்டின், “ஆத்தா. ராணிம்மா வண்டியிலே ஏறுங்க அய்யாவை பாhத்திட்டு வருவோம்.” தேவரம்மாள் ஏ.எஸ்.பி. யின் பக்கத்தில் கம்பீரமாக ஏறி அமர்ந்துகொள்ள, ராணி ஜீப்பின் பின்னால் ஏறிக்கொண்டாள். வண்டி விரைந்து கொண்டிருந்தபோது பதினேழு வருடங்களுக்கு முன்னால் தந்தை வீரபாண்டித்தேவரோடு அழுக்கடைந்த உடையுடன் வீட்டிற்கு வந்த மார்ட்டின் அண்ணனின் சிறுவயது தோற்றம் மனதில் தோன்றியது. அவளது பிஞ்சுக் கரங்களைப் பிடித்துக் கொண்டு ஓடி விளையாடிய சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. பின் அவள் அவன் பிரிவைத் தாங்காமல் அழ, அவளை அணைத்து அவள் கண்ணீரைத் துடைத்த அவனது அன்புக்கரங்கள் கண்முன் எழுந்தது. ஜீப்பை செலுத்திக் கொண்டிருக்கும் ஏ.எஸ்.பி அவளது அண்ணன், நாகர்கோவில் அண்ணன் என்ற எண்ணம் அவளது உள்ளத்தை மீண்டும் சிலிர்க்க வைக்க, தொலைவில் தஞ்சை பெரிய கோவிலின் கோபுரம் கண்களில் தெரிந்தது.
.................................................................................................................................................

இதயம் பேசுகிறது
நவம்பர் 1989
    

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக