வெள்ளி, 7 அக்டோபர், 2016

காகித ஓடங்கள்

காகித ஓடங்கள்
     பொழுது விடிந்தும் விடியாததுமாக கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தது. ராமலிங்கம் தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார்.
     எழுபது வயது தள்ளாமையும், தனிமையும் அவருக்குள் சோகச் சுமைதான். கடந்த காலங்களை மனத்திரைக்குள் அசைபோட்டபோது யாரோ கதவைத் தட்டினார்கள்.
     ‘யாரது…?’ தள்ளாடி எழுந்து கதவைத் திறந்தார்.
     அந்த  அதிகாலை நேரத்தில் பதற்றமான முகத்துடன் மகள் கலைவாணியையும், அவள் குழந்தைகளையும் அவர் எதிர்பார்க்கவே இல்லை. கையில் பெட்டியும் பையும் இருந்தன.
     “என்னம்மா… திடீர்னு…. ஒரு தகவல் இல்லாம…. மாப்பிள்ளை வரலியா.?”
     “பணம்… பணம்னு அடிக்கிறாருப்பா.. இன்னும் இருபதாயிரம் வேணுமாம்… எங்க அப்பாவால எப்படி முடியும்னேன்… செருப்பால் அடிச்சி வெளியிலே துரத்திட்டாரு…”
     அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது.
     “சரி உள்ளே வா… பார்த்துக்கலாம்…”
     சுவரோரத்தில் மகள் அமர்ந்து கொள்ள, அவள் காலடியில் குழந்தைகள் சுருண்டு கொண்டன.
     காலை முழுமையாய் மலர்ந்தது. பத்து நிமிட அவகாசத்தில் காப்பி போட்டுக் கொடுத்தார். நல்லபசிபோலும். குழந்தைகள் ‘மடக் மடக்’ என்று குடித்தன.
     “உன்னை பெண் கேட்டு வரும் போதே இவ்வளவுதான் முடியும்னு தெளிவா சொல்லி பத்து பவுன் நகை போட்டேன். வீட்டை விற்று இருபதாயிரம் ரொக்கம் கொடுத்து கல்யாணத்தையும் நடத்தி வச்சேன்.
     இப்ப என்கிட்டே சல்லிக்காசு இல்லே… உயிர் மட்டும்தான் ஒட்டிக்கிட்டிருக்கு… அத்தனையும் தெரிஞ்சுமா உன்னை அடிச்சி அனுப்பி வச்சான்…”
     அவளிடம் இருந்து பதில் வரவில்லை.
     “உன் வாழ்க்கை வீணாகிடக் கூடாதுன்னு அப்பப்ப கேட்டதையெல்லாம் கடனைப் புரட்டிக் கொடுத்தேன்… எனக்குச் சம்பளம் வெறும் எண்ணூறு ரூபாய்… என்னால என்ன செய்ய முடியும்… இப்பவே கண்பார்வை சரியில்லே… வேலைக்கு சரிப்பட்டு வராது… வேறு இடத்தில் வேலை பார்த்துக்குங்கன்னு முதலாளி சொல்லிக்கிட்டிருக்காரு…”
     தகப்பனைப் பார்த்த அவளது பார்வையில் பரிதாபம் தெரிந்தது.
     ‘சரி எட்டு மணிக்கு வேலைக்கு போயிட்டு வர்றேன்… என்ன பண்ணலாம்னு பார்ப்போம்…”
     கம்பெனியில் முதலாளி கொஞ்சம்  கலகலப்பாக இருந்தார். அந்த சந்தர்ப்த்தில் அவர் மனம் கனியும் என்று நெருங்கி மகளின் பிரச்சினையைச் சொன்னார்.
     “வயதைப் பார்த்து பரிதாபப்பட்டுத்தான் இந்த வேலையையே தந்திருக்கேன்… வேலை பார்க்கணும்னா பாரும்… கடன் அது இதுன்னு கேட்டா சரிப்பட்டு வராது…”
ராமலிங்கம் கூனிக்குறுகி வெளியில் வந்தார். மதியத்துக்கு கொண்டு போயிருந்த கஞ்சியைக்கூட அவர் தொடவில்லை.
இரவில் மகளிடம் தன் திட்டத்தைச் சொன்னார்.
“நம்ம உறவுக்காரங்க நிறைய பேர் சென்னையில் இருக்காங்கம்மா… நிலமையைச் சொன்னா கொஞ்சமாவது உதவுவாங்க… காலையில் நான் சென்னைக்கு புறப்படுறேன்… பெட்டியில் ஜந்நூறு ரூபாய் இருக்கு…. சமையலுக்கும், குழந்தைகளுக்கும் வேணும்கிறதை வாங்கிக்க… உன் கணவன் கேட்டதை கொடுத்துடலாம்….” சொன்ன ராமலிங்கம், சென்னைக்குப் பேருந்து ஏறினார்.
அவருக்குத் தெரியும். உறவுக்காரர்கள் யாரும் உதவமாட்டார்கள். இருப்பினும் சென்னைதான் அவருக்கு இப்போதைக்குச் சரியான இடம்.
சென்னையில் வந்து பாரிமுனையில் இறங்கிய போது நள்ளிரவு. தூக்கமும் துக்கமும் அவரை வதைத்தன. இரவுப் பொழுதை பேருந்து நிலையத்திலேயே கழித்தார்.
காலையில் எழுந்தார் துணிப்பையில் வைத்திருந்த அலுமினியத் தட்டை எடுத்தார். கண்களில் கண்ணீர் பீறிட… கைகள் நடுங்க…. கால்கள் தடுமாற ஒவ்வொருவரையும் நெருங்கினார்.
“ஐயா… பிச்சை போடுங்க சாமி….
தட்டில் நாணயங்கள் விழத் தொடங்கின.
அப்பா, சென்னைக்குப் போய் ஒரு மாதமாகிவிட்டது. தகவல் ஏதும் இல்லை.
கலைவாணி கவலைப்பட்டபோது ஜந்நூறு ரூபாய் பணவிடையும், கடிதமும் வந்தன.
அவளைக் கவலைப்பட வேண்டாமென்றும்… இன்னும் சில மாதங்களில் முழு தொகையான இருபதாயிரம் பணத்தோடு வந்துவிடுவேன் என்றும் எழுதி இருந்தார்.
அப்பாவால் எப்படி அவ்வளவு பணத்தை புரட்டி வர முடியும்… நமக்காக என்னென்ன வேதனைகளை அனுபவிக்கிறாரோ…. அவளது கண்களில் கண்ணீர் கரை புரண்டத.
அவர்களின் ஊராரில் சென்னையில் தங்கி வியாபாரம் செய்பவர்கள் நிறைய பேர் உண்டு. அவர்களில் வடக்குத் தெரு பால்துரை சித்தப்பா, ஊருக்கு வந்ததும் வராததுமாய் அவளைத் தேடி வந்தார்.
அவர் சொன்ன தகவலைக் கேட்டு கலைவாணி நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.
“சென்னையில் அப்பா பிச்சை எடுக்கிறாரா? வறுமையில் வாழ்ந்த போதும் மானத்துடன் வாழ்ந்த அப்பா… கையில் தட்டுடன்… அய்யோ கடவுளே… “ என்று சுவரில் முட்டினாள்.
அவள் கதறிய கதறலில் குழந்தைகள் மட்டுமல்ல, பால்துரையும்கூட ஆடிப்போனார்.
அம்மன் கொடை முடிந்து பால்துரை சித்தப்பா புறப்பட்டபோது, குழந்தைகளை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு அவளும் பேருந்து ஏறினாள். சென்னை வந்து, அந்தப் பரிதாபத்தை நேரில் பார்த்தாள். அப்பாவைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
“அப்பா… எனக்கு தாம்பத்திய வாழ்க்கையே வேண்டாம்ப்பா… வாங்கப்பா ஊருக்கு போவோம்… நான் பீடி சுற்றி என் குழந்தைகளை காப்பாத்துவேன்…”
 அன்றே அவர்கள் ஊருக்கு பேருந்து ஏறினார்கள். அப்பாவின் தளர்ந்தகரத்தை கலைவாணி ஆதரவுடன் பற்றிக்கொண்டாள்.
“பிச்சை எடுக்கிற நிலைமைக்கு உங்களை ஆக்கின பாவிகூட நான் வாழவே மாட்டேன்பா… என்னை வச்சி வாழறேன்னு உண்மையான அன்போட ஊனமுற்றவன் வந்தாலும் நான் ஏத்துக்குவேன்… என்னைப் பற்றி கவலைப்படாதீங்கப்பா…” மெதுவாய்ச் சொன்னாள். ஆனாலும் அவள் கண்களில் கண்ணீர் கொட்டியது.
மகளின் வார்த்தைகள் மனதில் ஆறுதலாய் பதிய, பேருந்தின் சீரான ஓட்டத்தில் குளிர்ந்த காற்றின் மயக்கத்தில் அவர் நிம்மதியாகத் தூங்கிப் போனார்.
ழூழூழூழூழூ

ராணி

02.12.2001

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக