சனி, 29 டிசம்பர், 2012

கற்பூர சத்யம்


                      கற்பூர சத்யம்

அந்த பொறியியல் கல்லூரி வகுப்பறையில் சுப்பிரமணியன் தனியாக அமர்ந்திருந்தான். ஸ்டிரக்சரல் என்ஜினீயரிங் பற்றிய தடித்த புத்தகம் மேஜையில் விரிந்திருந்தது. சின்னச் சின்ன குறிப்புகளை குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருந்தான். அந்த வகுப்புக்கு வரவேண்டிய போராசிரியர் விடுமுறை ஆதலால் மாணவர்கள் தேநீர்விடுதி… நூலகம்… அரட்டை…. சிகரெட்ää பீடி என்று வெளியேறி விட்டார்கள். மாணவிகள் ஓய்வறை நோக்கி போய்வி;ட்டார்கள். திடீரென கொலுசு சப்தம். திரும்பினான்  பானுமதி. இரண்டாம் ஆண்டு படிக்கும் அவனுடைய பானுமதி.
“ஏதாவது உதவி வேண்டுமா பானுமதி…”
“பாடத்தில் ஒரு சந்தேகம். நீங்க ரொம்ப அக்கறையா குறிப்பெடுத்துக் கிட்டிருக்கீங்க”
“அதனால பரவாயில்லே… உன் வகுப்பு என்னாச்சு?”
“பிரி அவர்ஸ்தான்”
‘தமிழ்லே சொல்லேன். வகுப்பு கிடையாதுன்னு….
“சொல்ல வரலே”
“சொல்லணும்… நம்ம மொழியில் இல்லாத வளமா…. கருத்தா.. அழகான சொற்களா?”
“எனக்கு முதல்ல இதைச் சொல்லித் தர்றீங்களா?”
அவளது சந்தேகத்தை அரை மணி நேரத்திற்குள் தெளிவுபடுத்தினான். பேராசிரியர் கூட அவ்வளவு பொறுமையாக சொல்லித்தரமாட்டார். பாடம் முடிந்ததும் கேட்டாள்.
“தந்தை பெரியார் மீது பாசம் இருக்க வேண்டியதுதான்… ஆனா இவ்வளவு வெறியா இருக்கக் கூடாது”
“எதுக்காக திடீர்னு…”
“கல்லூரிக் கூட்டங்கள்லே அவர் பேரைச் சொல்லி சண்டை இழுக்கற மாதிரி தோணுது…”
“பானுமதி பொறியியல் மாணவியா படிச்சா மட்டும் போதாது… கொஞ்சம் சமூக உணர்வும் வேணும்…. மனுநீதி… வர்ணாசிரமம்… இதையெல்லாம் நீ ஒத்துக்கறியா?”
“அதுக்குள்ளே நான் வரலேப்பா”
“வரவேண்டாம்… திருநீறு ப10சிக்க… குங்குமம் வச்சுக்க… கோவில்தோறும் போயி கன்னத்துல போட்டுக்க…”
அவள் சிரித்தாள்.
“பெரியார் எதையும் அவருக்காகக் கேட்கலே. அடிமட்டத்து மக்களுக்காகத்தான் கேட்டாரு. கண்ணு தெரியாம அலையாதீங்கடான்னு தமிழர்களை எச்சரிக்கை பண்ணினாரு.. கூனிக்குறுகி ஏண்டா கும்பிடறீங்க… தலைநிமிர்ந்து நில்லுங்கன்னு சொன்னாரு. நாலு வர்ணமும் பொய்… வேதங்கள் பொய்.. உனக்குன்னு ஒரு வரலாறு இருக்குன்னு ஆதாரங்களோட சொன்னாரு. அவரளவுக்கு தமிழ் மக்களைப் பற்றி கவலைப்பட்டவங்க வேற யாரும் இருக்கமுடியாது” துடிக்கும் அவனது அதரங்களையும சிவந்த விழிகளையும பானுமதி தைரியமாக ஏறிட்டாள்.
“அதெல்லாம் இருக்கட்டும்… இந்த வருஷம் முடிய இன்னும் நாலுமாசம்தான் இருக்கு. நீங்க பட்டம் வாங்கிட்டு போயிருவீங்க. எனக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க…?”
“நீ படிச்சி முடி… அடுத்த நாளே எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிர்றேன்…”
“எனக்கு பயமா இருக்கு. இந்த சாதியத் தளைகள் என்னென்ன பிரச்சினைகளை உண்டுபண்ணுமோ”
“எங்கப்பாவும் நம்ம காதலை கண்டிப்பா ஏத்துக்கமாட்டார். ஆனா என்னால உன்னை பிரிஞ்சி இருக்க முடியாது”
“என்னைக் கைவிட்டிறாதீங்க.. அப்புறம் நான் செத்துப் போயிருவேன்”
“என் மேல சந்தேகம் இருந்தா தாராளமா செத்துப்போ”
“இந்த கோபமும் பிடிவாதமும் தான் உன்னை நெருங்கச் செய்ததடா... என் செல்லப் பையா”
“முதல்ல இடத்தை காலி பண்ணு”
அவன் கன்னத்தில் மெல்லத் தட்டிவிட்டு அவள் வகுப்பறையை விட்டு வெளியில் வந்தாள்.
வருடங்கள் உருண்டன. சுப்பிரமணியனுக்கு அரசுத்துறையில் சென்னையில் வேலை கிடைத்தது. பானுமதி படித்துவிட்டு வேலை தேடினாள். வேலை கிடைத்தபாடில்லை. தகப்பனார் அவளுக்கு வரன் பார்க்கத் துவங்கினார். இன்டர்விய10 அது இது என்று பொய் சொல்லி சென்னை வந்தவள் சுப்பிரமணியனை நேரில் சந்தித்து கண்ணீர் சிந்தினாள்.
“உன் அப்பாவுக்கு தபால் எழுதிப்போடு. என்னுடனே இருந்து கொள்” என்றான் அலட்டிக்கொள்ளாமல். அவளுக்கும் அது சரி என்று பட்டது. விடிந்தால் பதிவுத் திருமணம்.
“தாலி அவசியமில்லைää அது ஒரு அடிமைச் சின்னம்” என்றான் சுப்பிரமணியன்.
‘எனக்கு அது வேண்டும் . உங்கள் கொள்கைகளை நீங்களே வைத்துக் கௌ;ளுங்கள்”
அவளது முகக் கோணலையும் சிணுங்கலையும் ரசித்தான்.
“உன்னோட உணர்வுக்கு எப்போதும் மதிப்புக் கொடுப்பேன்.” தாலி கட்டினான். கோவிலுக்கு போக வேண்டும் என்றாள். வடபழனி அழைத்துச் சென்றான். அவளை சன்னதிக்குள் அனுப்பி வைத்துவிட்டு வெளிப்பிரகாரத்திலேயே நின்று கொணடான். அவள் ப10வும் குங்குமமுமாய் வந்ததை மௌனச் சிரிப்போடு ஏறிட்டான்.
செய்தி தெரிந்து அவளது பெற்றோர்கள் வந்தார்கள். ரௌத்திரம் ஆனார்கள்.
“இதுக்கா படிக்க வச்சோம்?”
பானுமதி அழுதாள்
“வீட்டு வாசப்படி ஏறக்கூடாதுடி…” அப்பா கத்திவிட்டு அம்மாவையும் இழுத்துக் கொண்டு போனார்.
சுப்பிரமணியன் பானுமதியை அழைத்துக் கொண்டு கவுண்டம்பாளையம் வந்தான்.
“நீ என் பிள்ளையாடா.. குலத் துரோகி…” கூச்சலிட்டவர் வாசலில் கற்ப10ரம் பொறுத்தி சத்தியம் செய்து அணைத்தார்.
“நீ எனக்குப் பிள்ளையும் இல்லை… நான் உனக்கு அப்பனும் இல்லைää உன்னை தலைமுழுகிட்டேன்…”
சுப்பிரமணியன் தந்தையை… அவரது கதறலை.. அனுதாபத்துடன் பார்த்தான். கடலைக்காய் போட்டு வியர்வை சிந்தி அவர் தந்த கல்வி.. பிள்ளை சொல் கேளாமல் குலம் அறியாமல் எவளோ ஒருத்தியை இழுத்து வந்து நிற்கிறதே என்று வெடித்த வேதனை.. அப்பா மேல் அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை. மனைவியோடு திரும்பி நடந்தான். ஊர் வேடிக்கை பார்த்தது. அவனது தாயும் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் மகனைக் கையைக் காட்டி அழுதாள். அவள் கூக்குரல் அங்கு எடுபடவில்லை.
ஜந்து வருடங்களில் பானுமதி மணியான இரண்டு பிள்ளைகளுக்கு தாய் ஆனாள். மூத்தவன் ராமசாமி. இளையவன் குமாரசாமி. ஒருநாள் சுப்பிரமணியன் மனைவியிடம் சொன்னான்.
“என்ற அய்யனைப் பார்க்கணும் போல இருக்கு”
அவள் மறுப்பேதும் சொல்லவில்லை.
கவுண்டம்பாளையம் அவர்கள் சென்றபோது நல்ல மழை பெய்திருந்தது. கடலைக்காடடில் வேலை இருக்காது. அப்பா வீட்டில்தான் இருக்க வேண்டும். தம்பதிகள் இருவரும் வெளியிலேயே நின்று கொண்டார்கள். சுப்பிரமணியன் பிள்ளைகளைப் பார்த்து சொன்னான்.
“டேய் இதுதாண்டா உங்க தாத்தன் வீடு…
ராமசாமியும் குமாரசாமியும் அந்த பண்ணை வீட்டிற்குள் குடுகுடுவென ஓடினார்கள். கூடத்தில்  தாத்தா ஓய்வு நாற்காலியில் படுத்திருந்தார். பாட்டி வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தாள்.
“யாரு கண்ணு நீங்க…?”
“என் பேரு ராமசாமி… அவன் பேரு குமாரசாமி…”
அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். பையன் அவர் பெயரையும் அவர் தந்தையின் பெயரையும் சொல்கிறான்.
“யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க…”
“என்ற அய்யன் பேரு சுப்பிரமணியன்… அதான் உன்ற பிள்ளை…”
தாத்தா சேரில் இருந்து எழுந்து அவர்கள் இருவரையும் அப்படியே அள்ளிக்கொண்டார்.
“என்ற பேரப்பிள்ளைங்க…. என்ற பேரப்பிள்ளைங்க… “குதிக்காத குறைதான். வாசலுக்கு வந்தவர் தயங்கி நின்றவர்களை ஏறிட்டார்.
“ஏடி… என்ற பிள்ளையை உள்ளார வரச்சொல்லுடி.. என் மருமகளையும்தான்…”
சுப்பிரமணியன் பானுமதியோடு வீட்டினுள் வந்தான். பேரப்பிள்ளைகள் தாத்தாமார்களின் இதயக் கோட்டையை எவ்வளவு எளிதில் கைப்பற்றி விடுகிறார்கள்… அவனது மனது வியப்பின் எல்லைக்கு சென்றது.
தேவி
12.02.2003

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக