வெள்ளி, 28 டிசம்பர், 2012

அம்மா எங்கும் போகமாட்டாள்





                                    அம்மா எங்கும் போகமாட்டாள்

     கதிர்வேலு வீட்டுக்கு வந்தபோது இரவு மணி பனிரெண்டு. மிகுந்த சோர்வுடன் காணப்பட்டார். கைகால் அலம்பியதும் தட்டில் சோற்றைப் போட்டாள் லெட்சுமி. சாப்பிட அமர்ந்தவர் சோற்றை விரல்களால் அழைந்தபடி இருந்தாரே தவிர ஒரு கவளம் கூட வாய்க்குள் செல்லவில்லை.
      லெட்சுமிக்கு அவரது வேதனை புரிந்தது. குறுக்கே பேச வாய் வரவில்லை. வயதுக்கு வந்த மகள்கள் இருவரும் தாயின் பக்கத்தில் கவலையோடு நின்றிருப்பதை ஏறிட்டுப் பார்த்தார். யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
      “சாப்பாடு வேண்டாம்” எழுந்துகொண்டார்.
      சோற்றுப் பானையில் சோறு அப்படியே இருந்தது. அவருக்கு மட்டுமல்லää அவர்களுக்கும் சாப்பிடப் பிடிக்கவில்லை. ஆளுக்கொரு மூலையாய் படுத்துக் கொண்டார்கள்.
      கதிர்வேலு வராந்தாவில் நார்க் கட்டிலில் அமர்ந்து மவுனமாக சுருட்டை இழுத்;துக் கொண்டிருந்தார். பக்கத்து கட்டில் வெறுமையாக இருந்தது. தலையணை மீது போர்வை மடித்து வைக்கப்பட்டிருந்தது. இத்தனை நாளும் அந்தக் கட்டிலில் அமர்ந்துää மகனோடு பேசி மகிழ்ந்து மகன் பக்கத்திலேயே அமைதியாக நித்திரை கொள்ளும் வயது முதிர்ந்த தாயார் இன்று இல்லை. காலையில் அவருக்கும் அவளுக்கும் நடந்த கடுமையான வாக்கு வாதத்தால் வீட்டைவிட்டு வெளியேறி இளைய மகன் இருக்கும் திருவைகுண்டத்துக்குப் போய்விட்டாள். அவள் இல்லாமல் வீடு வெறிச்சோடிக் கிடப்பதாகத் தோன்றியது.



      தாயார் காமாட்சி அம்மாளுக்கு வயது எழுபதுக்கும் மேல். இரண்டு கண்களும் பார்வையை இழந்திருந்தன. இத்தனை நாளும் அவளுக்கு இங்கு எந்தக் குறையும் இருந்திருக்க முடியாது. லெட்சுமியும் பிள்ளைகளும் அவளிடம் உயிராய் இருந்தார்கள்ää கதிர்வேலு எப்ப சாப்பிட வந்தாலும் ‘அம்மா சாப்பிட்டாச்சா?’ என்று கேட்டுவிட்டுத்தான் சாப்பாட்டை கையால் தொடுவார். அவள் சாப்பிடாமல் அவர் ஒருநாளும் சாப்பிட்டதில்லை.

      கட்டிலில் படுத்தவருக்கு தூக்கம் வரவில்லை. தாயின் நினைவுகளே தோன்றிக் கொண்டிருந்தன. திருவைகுண்டத்தில் தம்பி மனைவி அகங்காரம் பிடித்தவள். குணமில்லாதவள.; தம்பிக்கும் தாயிடம் அவ்வளவு பாசம் கிடையாது. அம்மாவை சரியாகக் கவனித்துக் கொள்வார்களா… அம்மா இன்று சாப்பிட்டிருப்பாளா… கண் தெரியாத நிலையில் அவளுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்குமா… அவளுக்கான பணிவிடைகள் செய்து தரப்படுமா…. நிம்மதியாகத் தூங்குவாளா? சிந்தனையுடன் படுத்திருந்தார்.
      அம்மாவைப் பேசியது தவறுதான். அத்தனை கடுமையான வார்த்தைகளை சொல்லியிருக்க வேண்டியதில்லை. மாமன் வீட்டுக்கு அவள் ஏன் போவானேன்? நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவளது மனதில் முறிந்து போன சகோதர உறவு எப்படி மீண்டும் துளிர்விட்டது. உடம்புக்கு முடியாமல் படுக்கையாகிவிட்டார் என்றதும்ää இவள் ஏன் பதறிப் போக வேண்டும்? இவளும்தான் இருபது ஆண்டுகளாக கண் பார்வை இல்லாமல் இருக்கிறாள். அந்த மாமன் என்றைக்காவது கவலைப்பட்டிருப்பாரா? அவருக்கு எப்படி கவலை வரும்? இருபத்தைந்து வயதில் கொழும்பில் கணவனை இழந்துவிட்டு இரண்டு பிள்ளைகளோடு செபத்தையாபுரத்துக்கு அவரது ஆதரவு தேடி வந்தவளை புறக்கணித்தவருக்குää அதற்குப் பிறகு மட்டும் எப்படி தங்கை என்ற பாசம் வந்திருக்க முடியும்? அன்று ஒண்டுவதற்குகூட விடவில்லை. மூன்று உயிர்களுக்கு சாப்பாடு போட வேண்டுமே என்ற பயத்தால் என்னால் எதுவும் இயலாது என்று கைகளை விரித்துவிட்டார்.
      அவருடைய மனைவி குணம் கெட்டவளாக இருக்கலாம். உடன்பிறந்த பாசம் இவருக்கு எங்கே போயிற்று? நகை நட்டு போட்டு திருமணம் முடித்து வைப்பதோடு கூடப்பிறந்த பந்தமும் பாசமும் விட்டுப் போய்விடுமா? இளம் வயது தங்கையை தனியாய் இருந்து உழைத்துப் பிழைத்துக்கொள்ள வேண்டியது தான் என்று எப்படி இரக்கமில்லாமல் அவரால் சொல்ல முடிந்தது. யாருடைய ஆதரவும் இல்லாமல் செபத்தையாபுரத்தில் ஒரு மூலையில் ஓலைக் குடிசையில் எத்தனைக் கஷ்டத்துக்கிடையில் தன்னையும் தம்பியையும் ஆளாக்கியிருப்பாள்? வாழைக் குலைகளைச் சுமந்தும்ää வயற்காட்டு வேலைக்கு கூலியாளாய்ச் சென்றும்ää பதனீர் காய்த்தும்… அவள் அனுபவித்த துன்பம் சாதாரணமானதா? தானும் தம்பியும் வாலிபவயதை எட்டிப் பிடித்த பிறகுதானே அவளால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.
      அந்த நாட்களில் தங்கை அனுபவித்த சிரமங்களை எண்ணிப் பார்த்திருப்பாரா? அப்படியா மனது கல்லாகிப் போக வேண்டும்? அவர் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார் என்றதும் இவளுக்கு பாசம் பொத்துக்கொண்டு வந்து விட்டது. தான் கடைக்குப் போன நேரத்தில் ஊரில் யாரோ ஒருத்தியின் உதவியுடன் அண்ணன் வீடுசென்று அங்கு ஒரு பாட்டம் அழுதுவிட்டு வந்தாளாம். அங்கு போக எப்படி மனம் வந்தது? மிருகமாய் வாழ்ந்த சகோதரன் இருந்தாலென்னää செத்தாலென்ன என்று இருந்தவளுக்கு எப்படி மனம் மாறியது?
      மதியம் சாப்பிட வந்த போது பக்கத்து வீட்டுக்காரி சொல்லியிருக்காவிட்டால்ää அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. பொறுக்க முடியாமல் கன்னா பின்னா என்று பேசிவிட்டார். அம்மா கேவிக் கேவி அழுதது நினைவுக்கு வந்தது. அழுதபோது எழுந்த பலவீனமான குரல் வேதனையாக இருந்தது. லெட்சுமியும் பிள்ளைகளும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவளது அழுகை நிற்கவில்லை. மெல்லிய புலம்பலோடு அவள் உதிர்த்த வார்த்தைகளை நினைவுபடுத்திப் பார்த்தார்.
      “மனசு கேட்காம போயிட்டேன் தப்புதான். அதுக்கு மரியாதை இல்லாமல் என்ன பேச்சு பேசிப்புட்டான்… என்னை வெட்டிருவானாம்.. என்ன பெத்த அப்பன் மடப்பயலாம்… எங்கண்ணனை மாதிரி எனக்கும் ஈனப்புத்தியாம்… இவன் கிட்டே வேற வழியில்ல்hமல் சோறு திங்கறேங்கிற திமிர் தானே? நான் போறேண்டியம்மா… இனிமே செத்தாலும் இங்கே வரமாட்டேன். அந்தப் பயல இனிமே என் மூஞ்சில் முழிக்க வரக்கூடாதுன்னு சொல்லிடு…”
            அம்மாவைப் பேசியது தவறுதான். மாமனின் மேல் இருக்கும் அழிக்க இயலாத வெறுப்பின் காரணமாகத் தான் அவ்வாறு பேசும்படி நேர்ந்தது. பெண்களின் இதயம் இரக்கம் நிறைந்தது தான். அதற்கு அம்மாவே நல்ல உதாரணம். கூடப்பிறந்தவன் துரோகம்  செய்திருந்த போதிலும் கட்டிலில் செயலற்றுக் கிடக்கிறான் என்று அறிந்ததும் பதறிப் போயிருக்கிறாள்.
      தாயைப் பிரிந்த வேதனையால் விடியும் வரையில் தூக்கம் வராமல் தவித்தார். எங்கே போய்விடப் போகிறாள்? ஓன்றிரண்டு நாள் கோபம் இருக்கும். அப்புறம் வந்துவிடப் போகிறாள்.
      அம்மா வருவாள் வருவாள் என்று எதிர்பார்த்து ஆறு மாதம் கடந்துவிட்டது. திருவைகுண்டம் போய் அம்மாவைப் பார்த்துவர ஆசைதான். இன்று போகலாம் நாளை போகலாம் என்று நாட்களை கடத்தியாகிவிட்டது. சைக்கிள் கடையில் காலை ஆறு மணியில் இருந்து இரவு பனிரெண்டு மணி வரையில் நேரம் சரியாக இருக்கிறது. ஜந்தாறு சைக்கிள்கள் “ஓவர் ஆயிலிங்” காக எப்போதும் காத்திருக்கிறது தவிர்க்க முடியாது. கடுமையான வேலையினூடே அம்மாவின் முகம் அடிக்கடி மனதில் தோன்றிக்கொண்டு தான் இருக்கிறது.
      ஆறு மாதத்துக்குப் பிறகு ஒருநாள் தாயை கண்டிப்பாக பார்த்து வந்துவிட வேண்டும் என்று ஆவலோடு புறப்பட்டார் கதிர்வேலு. வேலை நிறைய இருந்தது. அம்மாவை இனி மேலும் பார்க்காமல் இருக்க முடியாது என்பதால் கடையை ப10ட்டுவிட்டு புறப்பட்டுவிட்டார்.
      திருவைகுண்டம் பஸ்ஸ்டாண்டில் மிட்டாய் கடையில் கால் கிலோ ப10ந்தியும் கால் கிலோ காரச்சேவும் வாங்கிக்கொண்டார். அம்மா மிகவும் விரும்பிச் சாப்பிடுவாள்.
      தம்பி வீட்டுக்கு போன போது வீடு ப10ட்டியிருந்தது. எல்லாரும் எங்கே போயிருப்பார்கள்? பக்கத்து வீட்டில் விசாரித்த போத தம்பி மனைவி மக்களோடு நாசரேத் பால்காய்ப்பு வீட்டுக்கு காரில் புறப்பட்டுப் போன செய்தியும் பின்கட்டில் தனியாக அம்மா இருக்கும் செய்தியும் கிடைத்தது. பின்காட்டில் மாடு இருக்கும்  இடத்தில் அம்மாவுக்கு என்ன வேலை? வளவுக்கு வந்தவர் கண்ணில்பட்ட காட்சியால் திகைத்துப்போய் அப்படியே நின்று விட்டார். மாட்டுக் கொட்டகையின் ஓரத்தில் இற்றுப்போன பழைய நார்க் கட்டிலில் அழுக்குமூட்டையாய் அம்மா சுருண்டிருந்தாள். அவளோடு ஒரு ஆட்டுக் குட்டியும் அந்தக் கட்டிலில் படுத்திருந்தது. நெருங்கிப் போய் பார்த்தபோது சோறு தண்ணி இல்லாமல் அம்மா நார் நாராகக் கிடந்தது கண்ணில்பட்டது. ப10வாய் தான் நேசித்த அம்மாவுக்கு இந்தக் கதியா. அட பாவி மகளே… விம்மலுடன் “அம்மா அம்மா” என்று தரையில் அமர்ந்து தாயின் கால்களைக் கட்டிக் கொண்டார்.
      அந்த தளர்ந்த தாய் தட்டுத் தடுமாறி எழுந்திருந்துää மகனின் தலையை ஆசையாக வருடியபடி “கதிர்வேலுவா… எய்யா எம்புள்ளா நல்லா இருக்கியா மகனே….” என்றாள்.
      கதிர்வேலு பதில் சொல்லாமல் அவளின் மடியில் முகம் புதைந்து சிறு குழந்தையாய் தேம்பித் தேம்பி அழுதார்.
      “என் ஞாபகம் இப்பத்தான் வந்ததா கதிர்வேலு…”
            “ஒரு நாள் ஓயாமல் உன்னை நினைச்சுக்குவேன் அம்மா… உன்னைக் கொண்டு போய் மாட்டுத் தொழுவிலேயா போட்டான் நீ பெத்த பாவி… துணியை மாத்தி மாசமிருக்கும் போலிருக்கு… இவனும் இவன் பெண்டாட்டியும் விளங்கத்தானா.” ஆத்திரத்திலும் கோபத்திலும் அவரது உடம்பு துடித்தது.
      “சின்னப் புள்ளதானே…. அவனுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்… அம்மாவுக்கு வயசாகிப் போச்சு… கண்ணுந் தெரியலே… பெரிசா என்னக் கவனிப்பு வேண்டியிருக்குண்ணு நினைச்சுட்டான். சரி அதைத் தள்ளு…”
      “உனக்குச் செய்த துரோகத்துக்கு நல்லா அனுபவிப்பாங்கம்மா… இந்த ப10ந்தியைபும் காரச்சேவையும் சாப்பிட்டுக்கிட்டிரு… இதோ வந்திர்றேன்…”
      அரை மணி நேரத்தில் டாக்சியோடு வந்தார். புதிதாக அம்மாவுக்கு சேலை எடுத்திருந்தார். தாயை அள்ளித் தோளில் போட்டுக் கொண்டு கிணற்றடிக்கு வந்தார். சிமிண்ட் தளத்தில் தாயை அமரவைத்து நான்கைந்து வாளி தண்ணீர் இறைத்து அழுக்குத் தேய்த்து குளிப்பாட்டினார். தனது மேல் துண்டால் தாயின் தலையையும் உடம்பையும் துவட்டினார். பழைய சேலையை தூர வீசிவிட்டு புதுச் சேலையை உடுத்தச் கொடுத்தார்.
      அம்மா சேலை உடுத்திக் கொண்டதும் காருக்குத் தூக்கி வந்தார். கார் பஸ் நிலையத்துக்கு வந்தது. திருவைகுண்டம் பஸ் நிலையத்தில் இருந்து செபத்தையாபுரம் வரை பஸ் பயணம். வீடுவரை கூடத் தாயை நடக்கவிடவில்லை. எங்க அம்மா பத்து மாசம் என்னை வயித்துல சுமந்தா… நான் இப்ப அவளை என் நெஞ்சிலேயும் தோளிலேயும் சுமக்கிறேன். என்ற பெருமிதமாய் வீட்டிற்கு தூக்கி வந்தார்.
      பாட்டியைக் கண்டதும் பேரப் பிள்ளைகளும் மருமகளும் கதறிவிட்டனர். மதியச் சாப்பாட்டுக்கு அம்மா ஆசைப்படுவாள் என்று குதிப்பு மீ;ன் வாங்கி வந்தார். அன்று முழுக்க கடை திறக்க பிரியப்படாமல் ‘அம்மா… அம்மா…’ என்று அவளையே சுற்றி சுற்றி வந்தார்.
      இரவில் தனது படுக்கைக்கருகில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் தாயின் முகத்தையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். இனிமேல் அம்மா எங்கும் போகமாட்டாள். தனது அருகில் எப்போதும் இருப்பாள் என்ற நம்பிக்கை மகிழ்ச்சியைத் தந்தது. வெளியில் எதுவும் கிடைக்கும். ஆனால் மாசற்ற அன்பும் கருணையும் பரிவும் பெற்ற தாயிடம் மட்டுமே கிடைக்கும். தாயின் அண்மையில் மனம் குளிர்ந்து நித்திரா தேவியை மெல்ல அணைத்துக் கொண்டார்.

ராணி
06.01.91

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக