புதன், 26 டிசம்பர், 2012

அவள் அழட்டும்



                                      அவள் அழட்டும்

     சிவசக்தி கல்யாண மண்டபத்தில் பெண்கள் கூட்டம்தான் அதிகமாக இருந்தது. ஆண்கள் பகுதியில் முன்பக்கம் முக்கியப் பிரமுகர்கள் அமர்ந்திருக்க பின்பகுதி அநேகமாக காலியாகவே இருந்தது. மணவாளன் வாசலில் நின்று நிதானமாக சிகரெட் இழுத்துவிட்டு ஆண்கள் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மட்டுமே அமர்ந்திருந்த வரிசைக்குப் பின்னால் தாராளமாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டான். திருமண வீட்டார் அவனை முன்வரிசைக்கு அழைத்த போதுää ‘பரவால்லங்க…’ என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான். பின் வரிசையில் அமர்ந்திருப்பதில் அவனுக்குச் சௌகரியமிருந்தது. அவ்வப்போது யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் எழுந்து சிகரெட் பிடித்துவிட்டு வரலாம்.

     முன்னால் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்களும் அவனை அதிகம் பொருட்படுத்தவில்லை. பெண்கள் பகுதியில் யாரையோ குறிப்பிட்டு மெல்ல பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டது அவனது காதுகளையும் எட்டிக் கொண்டிருந்தது.
   
     “எந்த ஊர்ன்னு சொன்னே உடன்குடியா…”

     “சொந்த ஊரு படுக்கப்பத்தப்பா… கல்யாணம் ஆகியிருக்கிறது உடன்குடி”

     மணவாளன் நிமிர்ந்து அமர்ந்து கொண்டான்.
   
     “உனக்கு அவங்களை எப்படித் தெரியும்…”
   
     “படுக்கப்பத்திலே அவங்க வீட்டுக்கு பக்கத்து வீடுதான் எங்க சித்தி வீடு.. ஸ்கூல் லீவிலே அடிக்கடி போவேன்… பார்த்து பத்து வருஷம் இருக்கும்… திடீர் கல்யாணம்… உடனே மெட்ராஸ் வந்திட்டாங்க…”

     “எதுக்காக திடீர்க் கல்யாணம்…”
   
     பதில் சொல்ல அடுத்தவன் சங்கடப்பட்டு பின்னால் பார்க்க மணவாளன் வேறெங்கோ பார்ப்பது போல் பாவனை செய்தான்.

     “சொல்லுடா…”

     “அந்த அக்கா ஒருத்தனை நம்பி மோசம் போயிருச்சு… அதான் அவசர அவசரமாக…”
   
     மணவாளனுக்கு வியர்க்கத் துவங்கியது.

     “ஏன் அந்தாளு வேண்டானுட்டானா…”


     “மூணு மாச கர்ப்பம் தெரிஞ்சி போச்சு… விஷயத்தை வெளியேவிடாம அக்காவோட ஆளுங்க கெடுத்தவன் வீட்டுல போய் பேசியிருக்காங்க… அந்தாளுங்க ரொக்கம்ää நகை நிறைய வேணும்னு பிடிவாதம் பண்ணியிருக்காங்க… இவளைத் தொட்டவனும் கண்டுக்கலே… ஒரு பெண்ணோட நிராதரவான நிலைமையைப் புரிஞ்சிக்காம கீழே மேலே பேசுனதனால இவங்க காதும் காதும் வச்சது மாதிரி மெட்ராஸ்ல மளிகைக் கடை வச்சிருக்கிற உடன்குடிக்காரருக்கு சடார்னு பேசி முடிச்சிட்டாங்க.
   
     எப்படியோ ஒருவனை நம்பி ஏமாந்திருச்சு… ஆனா குணத்திலே தங்கம்… இப்ப கார் பங்களான்னு நல்ல வசதியா  இருக்கிறதா பேசிக்குவாங்க… ஊருக்கு அதிகம் வர்றது கிடையாதாம்… சித்தி சொன்னாங்க…”
   
     “இந்த விஷயம் இவங்களைக் கட்டிக்கிட்டவருக்கு தெரிஞ்சிருக்காதா…”

     “மெனெக்கெட்டு எவனாவது போய் சொன்னாத்தானே… மனுஷனா பொறந்தவன் சொல்வானா… விஷயம் அமுங்கிப் போயிருக்கும்…”

     மணவாளன் தெப்பமாக நனைந்து போயிருந்தான்.


     “அவங்க பேரு..”

     “கல்பனாக்கான்னு சொல்லுவோம்…”

     மணவாளனுக்கு அதற்குமேல் இருக்கப்பிடிக்கவில்லை. சட்டென்று எழுந்து கொண்டான். மண்டபத்தை விட்டு வெளியே வந்ததும் சிகரெட் பற்றவைத்துக்கொண்டான். மனம் அமைதியி;ல்லாமல் தவித்தது. தனது மாருதியை நெருங்கியவன் ஏறி அமர்ந்துää “கடைக்குப் போப்பா….” என்று டிரைவரை விரட்டினான்.

     கடையை கார் நெருங்கியதும் இறங்கிக் கொண்டு… “அவசர வேலைää அதனால் வந்திட்டேன்னு சொல்லிரு…  இந்தக் கவரை அவகிட்டே கொடுத்திரு..”

     முதலாளி ஏன் இப்படி படபடப்பாய் பேசவேண்டும். டிரைவர் குழம்பினான்.
   
     திருமண மண்டபத்தில் கல்பனா கணவனைத் தேடினாள். சரிää எங்காவது வெளியில் நண்பர்களுடன் அரட்டையில் இருப்பார் என நினைத்துக் கொண்டாள். பந்தி முடிந்து வெளியே வந்ததும் டிரைவர் பவ்வியமாகக் கவரைக் கொடுத்து விஷயத்தைச் சொன்னான். கல்பனா ஒரு நொடி தயக்கமாய் நின்றுவிட்டு கவருடன் மணப் பெண்ணை நெருங்கினாள்.

     காரில் பங்களாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அவளும் அதிகமாகக் குழம்பினாள். எதற்காக அவசரமாய் திரும்பியிருப்பார்… பங்களா வந்ததும் கடைக்கு போனை சுழற்றினாள்.

     “ஹலோ…”

     “இப்பதான் வந்தியா கல்பனா… உங்கிட்டே சொல்லிக்காம வர வேண்டியதாய்ப் போச்சு…”

     அவன் குரல் என்றுமில்லாமல் பிசிறடித்தது.

     “ஏங்க குரல் என்னவோ போல இருக்கு…”

     “அது ஒண்ணுமில்யே… இன்கம்டாக்ஸ்காரங்க வந்திருக்காங்க…”

     “அவங்களுக்கு ஏன் இப்படி பயப்படணும்… நாமதான் கணக்கை ஒழுங்கா காட்டிர்றமே… இதையா பெரிசா போன் போட்டு கல்யாண மண்டபத்துக்குச் சொன்னாங்க… கணக்குப்பிள்ளையே அவங்களுக்கு வேண்டிய விபரங்களைத் தந்திருக்கலாமே…”

     “அப்புறம் பேசலாம் கல்பனா”
   
     போனை வைத்துவிட்டான்.

     கல்பனா பட்டுப் புடவையைக்களைந்துவிட்டு வாயில் புடவையை எடுத்து சுற்றிக்கொண்டாள். கணவனுக்காக சாப்பாடு தயார் செய்ய வேண்டும். அவள் செய்தால்தான் விரும்பிச் சாப்பிடுவான்.

     மதியம் இரண்டு மணி வரை மணவாளன் சாப்பிட வரவில்லை. மீண்டும் கடைக்குப் போன் போட்டாள். ஒரு மணிக்கே அம்பாஸிடரை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டுப் போய்விட்டதாய் கணக்குப்பிள்ளை பதில் சொன்னார். இன்கம் டாக்ஸ்காரர்கள். போய்விட்டார்களா என்ற கேட்டாள். அப்;படி ஒருத்தரும் வரலியேம்மா… என்று பதில் வந்தது. பத்து வருட வாழ்க்கையில் மணவாளன் அவளிடம் முதல் முறையாகப் பொய் சொல்லியிருக்கிறான். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

     மாம்பலத்தில் உள்ள அந்த லாட்ஜில் ஏஸி அறையில் மணவாளன் சிந்தனையுடன் படுத்திருந்தான். கையில் தொடர்ந்து சிகரெட்புகைந்து கொண்டிருந்தது.

     கல்பனாவின் வாழ்வில் இப்படி ஒரு ரகசியம் இருக்கும் என்பது அவன் எதிர்பாராதது. கல்யாணத் தன்று அவள் மணமேடையிலேயே மயங்கி விழுந்தது… முதலிரவில் நடுங்கி வியர்த்தது…  இன்றுவரை அவள் முகத்தில் படிந்திருக்கும் இனம் தெரியாத பயம்.. பீதி… பிறந்த ஊருக்குகூடப் போகவேண்டாம் என்று அவள் செய்யும் பிடிவாதம்… இரவில் அவன் விழித்துக் கொள்ளும் பல சந்தர்ப்பங்களில் அவள் தூங்காமல் அழுது கொண்டிருந்தது… பின் ஏதேதோ சொல்லிச் சமாளித்தது… மூன்று குழந்தைகளுக்குத் தாயான பின்பும் எதிலும் பிடிப்பு இல்லாதவள் போலää எதையோ இழந்தவள் போல அவள் வழைய வருவது… எல்லாவற்றிற்கும் இன்றுதான் அர்த்தம் புரிந்தது. அவளது வாழ்வில் ஏற்பட்ட அந்த சம்பவம் என்றாவது அவனுக்குத் தெரிந்துவிடும் என்று அவள் பயந்துபோயிருக்க வேண்டும்… திருமணம் முடிந்த பத்தாவது மாதத்தில் முதல் குழந்தை பிறந்தது. அப்படியானால் அந்த அவனுக்குக் கருத்தரித்தது சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

     இரவு மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் ஊதித்தள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. கடை இந்நேரம் அடைக்கப்பட்டிருக்கும். எங்கு சென்றான் என்று கல்பனா கலவரப்பட்டுக் கொண்டிருப்பாள்.

     ஒரு முடிவுடன் எழுந்து லாட்ஜில்  பில்களுக்கான பணத்தைக் கட்டினான். உறுதியுடன் காரை நோக்கி நடந்தான். காரை நிதானத்துடன் செலுத்தினான். கார் பங்களாவை நெருங்கியதும் வாட்ச்மேன் சுறுசுறுப்பாகக் கதவுகளைத் திறந்தான். போர்ட்டிகோவில் காரை நிறுத்திவிட்டு இறங்கிக் கொண்டபோது கல்பனா சோகத்துடன் முன்வாசலில் நின்று கொண்டிருந்தாள்.

     “எனனங்க… என்கிட்டே இன்கம் டாக்ஸ்காரங்க வந்ததா பொய்தானே சொன்னீங்க…”

     அவன் பதில் சொல்லாமல் ஹாலில் கிடந்த சோபாவில் அமர்ந்தான்.
   
     “நேரமாச்சு… சாப்பிடுங்க முதல்ல… அப்புறம் பேசிக்கலாம். பிள்ளைங்க எவ்வளவு நேரமா தேடிக்கிட்டிருந்தாங்க தெரியுமா…”

     அமைதியுடன் அமர்ந்து சாப்பிட்டான்.

     அவனது அமைதி அவளுக்குப் பயமாக இருந்தது. அவனை இப்படியொரு கோலத்தில் அவள் பார்த்ததே இல்லை. இந்தப் பத்து வருட குடும்ப வாழ்க்கையில் அவளிடம் எவ்வளவு சிநேகிதமாய்.. பாசத்துடன்… உள்ளார்ந்த பிரியத்துடன்… ஒரு ப10வை நேசிப்பது போல அவளை நேசித்திருக்கிறான்… எதற்கு இந்த ஆழ்ந்த அமைதி…
   
     சாப்பிட்டுப் படுக்கையில் சாய்ந்து கொண்டவனின் காலருகில் அமர்ந்து கொண்டு கால்களை இதமாகப்பிடித்துவிட்டாள்.

     “என்னங்க பிரச்சினை…”

     “இன்கம்டாக்ஸ்தான்…”

     “கணக்குப்பிள்ளை இல்லேன்னார்…”

     “இன்கம்டாக்ஸ் ஆபிசுக்கு வரச்சொல்லியிருந்தாங்க… போயிருந்தேன்… அவருக்குத் தெரியாது…”

     “இனகம்டாக்ஸ் சிக்கல் எப்போதும் நமக்குக் கிடையாதுன்னு சொல்லியிருக்கீங்களே…”

     “அவங்களுக்கு ஆயிரம் வழியிருக்கும்…”

     அவன் படுத்துக் கொள்ள அவள் அருகில் படுத்து மெல்ல தலை முடியைக் கோதினாள்.

     “தூங்கணும் கல்பனா…”

     அவன் பொய்யாகத் தூங்குவது போல் பாசாங்கு செய்ய அவள் நெடு நேரம் விழித்திருந்து பின் அசந்து தூங்கிப் போனாள்.


     தன் பக்கத்தில் கோழிக்குஞ்சாய் சுருண்டு தூங்கிக் கொண்டிருந்த கல்பனாவை அவனது விழிகள் வெறித்துக் கொண்டிருந்தன. தன்னோடு அவள் வாழ்ந்து வரும் பத்து வருட வாழ்க்கையில் அவளுக்குள் எந்தக் களங்கமும் இருந்திருக்க முடியாது. நான்கு சுவருக்குள் தன்னைச் சுருக்கிக்கொண்டு தனக்காகவும்ää குழந்தைகளுக்காகவும் அவதாரம் எடுத்ததைப் போல எவ்வளவு பொறுப்புடன் அக்கறையாய் அவளது கவனிப்புகள் இருந்திருக்கின்றன… கல்யாண மண்டபத்தில் நிகழ்ந்த பேச்சை வைத்து நொடிப் பொழுதில் தளர்ந்து போய்… அவளிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தது சரியாää தவறா என்று மனம் மீண்டும் குழம்பியது.

     பருவ வயதில் ஒரு பெண் தன் உடலை ஒருவனுக்கு சமர்ப்பிக்க ஒப்புகிறாள் என்றால்ää அவன் மீது அவளுக்கு எவ்வளவு அழுத்தமான நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். நம்பியவளுக்கு மோசம் செய்வான் என்பதை அவள் எண்ணிப் பார்த்திருக்க முடியாது. கல்பனா வஞ்சிக்கப்பட்டிருக்கிறாள்… சூறையாடப்பட்டிருக்கிறாள் ஏமாற்றப்பட்டிருக்கிறாள்… அந்த சம்பவம் அவள் மனதைப் பலமாகக் காயப்படுத்தியிருக்க வேண்டும். அந்த சம்பவத்தை மறக்கமாட்டாமல்  இந்தப் பத்து வருடங்களாய் மனதில் வைத்து சுமந்து கொண்டிருக்க வேண்டும்… எப்போதும் பயம்… பீதி.. நடுக்கம்… மனப்பாரம் எவ்வளவு கொடியது…


     மனம் அமைதி பெறத் துவங்கியது. கல்பனா உடலளவில் கறைபட்டுப் போயிருக்கலாம். ஆனால் ஸ்படிகம் போன்ற தூய்மையான அந்த மனம்… சதா நேரமும் அம்பாளையே மனதில் நிறுத்தி அவனுக்காகவும் குழந்தைகளுக்காகவும் துடித்துக் கொள்ளும் அந்த மனம்… அதில் மாசிருக்க முடியாது. இவளைப் போய் வெறுத்து ஒதுக்க மனம் எப்படித் துணிந்தது!

     திருமணத்திற்கு முன்பு பெண்கள் வெகு சிலருக்கு இப்படிப்பட்ட துரோகம் இழைக்கப்பட்டிருக்கலாம். கடந்த கால அந்த துயரச் சம்பவம் மறக்கப்பட வேண்டியதுதான். திருமணத்திற்குப் பின்பும் ஒருத்தி கட்டியவனுக்குத் துரோகம் செய்கிறாள் என்றால் அந்த துரோகம் மட்டும் மன்னிக்கப்பட இயலாதது… என் கல்பனா ஒரு குழந்தை… வஞ்சிக்கப்பட்ட குழந்தை… இவளை மறந்துபோக நினைத்த என்னை ஆண்டவன்கூட மன்னிக்க மாட்டான்…

     “கல்பனா… கல்பனா…”

     “என்னங்க..”

     அவளை இழுத்து ஆரத் தழுவிக் கொண்டான்.

     “இன்னும் தூங்காமலா இருக்கீங்க…”

     மணி டாண்… டாண்… என் மூன்று முறை அடித்தது.

     “மூணு மணி வரைக்கும் தூங்காம அப்படி என்ன சிந்தனை..”

     எழுந்துகொண்டு விளக்கைப் போட்டான்.

     “கல்பனாää இன்கம்டாக்ஸ்காரங்க கண்ணுக்குத் தப்பி நம்மகிட்டே கொஞ்சம் பணம் இருக்கு தெரியுமா…”

     “என்னங்க சின்னப்பிள்ளை மாதிரி… இதை பேசவா இந்நேரம் வரை தூங்காம….

     அதில்லே கல்பனாää எனக்கு ஒரு யோசனை தோணிச்சு… இங்கே ஆண்களால் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் நிறைய பேர் அடைக்கலமாயிருக்கிற ஒரு அமைப்பு இருக்கு… அந்தப் பெண்களைப் பத்தின சோகத்தைப் பக்கம் பக்கமா படிச்சிருக்கேன்… எனக்கேகூட அப்படிப்பட்ட பொண்ணு ஒருத்தியைக் கட்டிக்கணும்தான் ஆசையிருந்திச்சு….”

     கல்பனா கண்கள் விரிய அவனை விநோதமாய்ப் பார்க்க…

     “அந்த அமைப்புக்கு ஒரு லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்திரலாம்னு முடிவு பண்ணிட்டேன்… எப்படி என் முடிவு….”

     கல்பனாவிடம் இருந்து நிம்மதியாய் நீண்ட ஒரு பெருமூச்சு…

     “என் ராசா எதைச் செய்தாலும் நல்லதாத்தானே இருக்கும்…”

     குரல் தழுதழுக்க அவனை இழுத்து தன் மார்போடு சேர்த்து இறுக்கிக் கொண்டாள். மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் குழந்தை போல் வாய்விட்டு கதறிக் கதறி அழுதாள். பத்து வருட மனப்பாரமும் புழுக்கமும் குறைந்து மனம் லேசாகிவிட்டதைப் போல் தோன்றியது. மணவாளன் அவள் அழுது முடிக்கக் காத்திருந்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக