புதன், 26 டிசம்பர், 2012

ஒத்திகை



                                          ஒத்திகை
கிழவர் சுப்பையா அண்ணாவி பெரும்குரலில் சத்தம் போட்டு பாடிக்கொண்டிருந்தார். தெருவில் நின்றிருந்த கழுதைகள் அவருக்கு எதிர்க்குரல் கொடுத்தன.
“வே… என்ன குஷி கிளம்பிடிச்சா…? காலறுவான் (பட்டப்பெயர்) நின்று கொண்டிருந்தார்.
“அடடே வாருமய்யா… பார்த்து எத்தனை நாளாச்சு… என்ன விஷேசமோ…?
“பையன்க இந்த வருஷம் ஊர்ல நாடகம் போடறான்களாம்… சகுனி வேஷத்துக்கு ஆள் தேடிக்கிட்டிருக்காங்க… உம்ம சிபாரிசு பண்ணியிருக்கேன்… எப்படி நடிக்கலாமில்லே…”
“நான் இல்லாம நாடகமா… என்ன இப்படி கேட்டுப்புட்டீரு… அந்தக் காலத்துல அரிச்சந்திரனா நான் வேஷம் போட்டு நிக்கும் போது பொம்பளப்பிள்ளைங்கயெல்லாம்…”
“பொம்பளப் பாட்டப் பாடியே விளங்காம போயிட்டீரு ஒய்… நீரு சாப்பாட்டுக் கவலை இல்லாத ஆளு… மகன் இரண்டு பேரும் மெட்ராஸில் இருந்து பணம் அனுப்புறானுக…. தினமும் ஒரு கலசம் கள்ளக் குடிச்சிப்புட்டு பிலாக்கணம் பாடிக்கிட்டு அலைஞ்சிக்கிட்டிருக்கீர். நாடகத்துக்கு வரும் போதாவது தெளிவாக வாரும்… நான் வாரேன்…”
     வாசக சாலையில் வயசுப் பையன்கள் குழுமியிருந்தனர். சுப்பையா அண்ணாவிக்கு பெரிய ஆசனம் போடப்பட்டிருந்தது. அவரது தோழர் காலறுவான் துண்டை விரித்து தரையில் அமர்ந்திருந்தார். நாடக ஆசிரியருக்கு நடு வயது இருக்க வேண்டும். அதிகச் சதைப்பற்றில்லாமல் காணப்பட்டார்.



“பாஞ்சாலி சபதம் தானா சார் போடணும்…?”
“அதுதான்பா கிராமங்கள்லே எடுபடும்…”
“அது பழைய காலம் சார்… இப்ப என்னடாண்ணா ரிக்கார்டு டான்ஸீக்கே பொம்பளக் கூட்டம் அதிகமா வருது.. நாம நல்ல காதல் கதையாப் போடுவோம்.”
“எலே விவரங்கெட்டவனே… பழைய கதைகள்லே அங்கிய மாட்டிக்கிட்டு நிக்கற மாதிரி இருக்குமாலே… காதல் கதை போடணுமாம்… நாகர்கோவில் காரி வருவா கட்டிப்புடிச்சிக்கிட்டு ஆடலாம்ணு நினைச்சியளாலே…”
பெரிசு இசக்கிமுத்து கத்தினார்.
“என்ன இழவோ நடத்திக் தொலைங்கவே… எனக்கென்ன…?”
“பாஞ்சாலி மாப்பிள்ளைகள்லே ஒருத்தனா உன்னைப் போட்டிருவம்லே… கோவப்படாதே.”
ஒரு வழியாக பாஞ்சாலி சபதம் தேர்வு செய்யப்பட்டது. பெரிய மண்பானையை காவடி தூக்கிக் கொண்டு வந்தான்.
“என்னவே பானை வருது… தாளம் போடப் போறாரா வாத்தியாரு…”
“சுக்குக் காப்பி அண்ணாச்சி… தினமும் உண்டு… பஞ்சாயத்து தலைவர் வீட்டுல இருந்து கருப்பட்டி வந்திரும்… பெரிய தனக்காரர் ஒரு மூடை நிலக்கடலையை தூக்கி விட்டுட்டார்…”
‘சர்.. சர்..’ என்று கடலை வறுபடும் சத்தம் கேட்டது. நாடகப் பயிற்சி முடிந்ததும் காப்பியும் கடலையும் உண்டு என்பதால் இரவில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. வியாபாரத்திற்குப் போய் விட்டு களைத்து திரும்பும் வெற்றிலை வியாபாரிகள் சிலரும்… நடுச்சாமத்தில் தண்ணீர் இறைக்கச் செல்லும் விவசாயிகள் சிலரும் நாடகத்தில் நடிக்க வந்திருந்தார்கள். “நாடகத்தில் கோமாளி உண்டாடே…?”
“அவன் இல்லாமலா…”
“இந்தச் சப்ப மூக்கனப் போடுங்க… இவன் வந்தான்னாலே சிரிப்பு அள்ளிக்கிட்டு வரும்…”
“யோவ் கிழட்டு முண்டம்… சப்ப மூக்கன்னு இனிமே சொன்னீர்னா கெட்ட கோபம் வரும்… ஆமாம் சொல்லிப்புட்டேன்…. அர்ச்சுனம் வேஷத்துக்கு ஆள் எடுத்தாச்சா வாத்தியார் அண்ணாச்சி…”
“அர்ச்சுனம் வேஷத்துக்கு முகறைக் கட்டையைப் பாரும் விளக்குமாறுக்கு…”  சப்ப மூக்கன் என்ற சிலுவை முத்து முறைத்தான். ஒரு வழியாகநாடகத் தேர்வு முடிந்தது. காலையில் கிராமம் முழுவதும் நடைபெறப் போகும் நாடகத்தைப் பற்றியே பேச்சாக இருந்தது.
குடிகாரர் சுப்பையா அண்ணாவியும் நடிக்கிறார் என்பது சிரிப்பலைகளை சிந்த வைத்தது.
“தாத்தாவுக்கு கிடவடப்பு இருக்காது போலிருக்கு….”
“என்னளா சொல்லுதிய… இப்ப கட்டணும்ணாலும் எத்தனை கொமரிய போட்டி போட்டுக்கிட்டு நிக்கறா தெரியுமா…?”
“ஆளப் பார்த்துக்கிட்டு நிப்பாளுக… போருமவே….”
இரவில் நாடக ஒத்திகை நடக்கும் போதெல்லாம் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காவடி கோவித்தான். “வீட்டுல வேல கிடையாதா? இங்கின வந்துக் கூடிக்கிடக்கிய. போங்கää நாடகத்துல ஆடுவோம். பார்த்துக்குங்க.”
அவர்கள் கலைவதாக இல்லை. வீட்டுக்கு வீடு ஜந்து பத்து என்று நாடகச் செலவுக்குப் பணம் வசூல் செய்யப்பட்டது.
“பொம்பளைங்க வேஷத்துக்கு நாகர்கோவில் குட்டிகளாää திருநெல்வேலி குட்டிகளா?”
“எல்லாம் பொருத்தமா வரும்.”
“கிழட்டு முண்டைகளை கொண்டு வந்திராதுங்க லேய்… நல்ல இளவட்டமா வரட்டும்.”
“ஆமா…. அவுத்துப் போட்டுட்டு ஆடப் போறாளுங்க…. நல்லா நடிக்கத் தெரிஞ்ச பொண்ணுங்களா கேளுமவோய்…”
நாடகம் அரங்கேறும் நாளும் வந்தது. தங்கம் சவுண்ட் சர்வீஸில் காலையில் இருந்தே டி.எம். எஸ்ஸீம் சுசிலாவும் பாடிக் கொண்டிருக்க மேடையை உள்ளுர்க்காரர்களே போட்டுக் கொண்டிருந்தார்கள். சிவணஞ்செருமாடான் கொடிக்காலில் இருந்து ஓடி வந்தார்.
“ஏல சவத்துக்குப் பொறந்தவனுவளா… அகத்திக்கம்ப எவன்கிட்டே கேட்டுல தூக்கினிய…”
“நாளைக்கே கொண்டு வந்து வச்சிர்றோம் தாத்தா… அலறாதேயும்…”
“ஏலே… மாரிமுத்து… இந்தக் கிழட்டுப்பயல வச்சிப் பாட்டுக்கட்டி நாடகத்துல ஒரு பாட்டாவது பாடிப்புடணும்லே…”


மாலையில் சரசுவும்ää லட்சுமியும் வசந்தாவும் நாகர்கோவிலில் இருந்து வந்தார்கள். சினிமா நடிகைகளை விட அதிகம் பந்தா இருந்தது. சுப்பையா அண்ணாவி மேக்கப் அறையே கதிகென்று அமர்ந்து கொண்டார்.
“பெரியவரே பொம்பளைங்க மேக்கப் போடணும்.. வெளியப் போனீர்னா நல்லது.” “அதையும் தான் பாப்பமவே…. நாங்கள்லாம் வயது கடந்தவங்கதானே…”
நாடக வாத்தியார் வந்து வற்புறுத்திக் கூறிய பிறகே சபித்துக் கொண்டு வெளியே வந்தார். நாடகம் துவங்கியது. ஒவ்வொரு சீன் முடிந்ததும் இடைப்பட்ட நேரத்தில் பழைய காலவித்வான் மணியம் பெருமாள் தொண்டையைக் கனைத்துக் கொண்டிருந்தார். தொங்கவிட்டிருந்தஸீன்களின் பின்னால் வந்த வசந்தாவை ஒருவன் பின்புறத்தில் தடவினான். சகுனி சுப்பையா அண்ணாவி சொல்லிக் கொடுத்த வசனத்தை மறந்துவிட்டு சுயமாக ஏறுக்கு மாறாய்பேசிக் கொண்டிருந்தார். கோமாளியாக நடித்த சிலுவை முத்து பின்பாட்டுக்காரர்கள் கலர் குடித்ததைப் பார்த்து நாக்கைத் தொங்கப் போடவே வாத்தியார் திரைக்குப் பின்னால் இருந்து மிதிக்க வேண்டியது வந்தது. ஒன்றிரண்டு நடிகர்கள் ‘கள்’ ஞாபகத்துக்கு வந்து பனங்காட்டுக்கு ஒரு நடைபோய் விட்டு வந்தனர்.
“யோவ் அடுத்த சீனை வேகமாய் போடுங்க…”
விசில் சத்தங்கள். வாத்தியாருக்கு பற்றிக் கொண்டு வந்தது. கள் குடிக்கப் போன கதையை யாரிடம் சொல்லி அழுவது? அப்படியும் யோசனை வந்தது.
“வசந்தாää மேக்கப்பை கலைச்சிட்டு பாவாடை சட்டையில வந்து நில்லு. யோவ் தங்கம்…. ரெக்கார்டை போடுமய்யா… இரண்டு பாட்டுக்கு ஆடட்டும்….”
வசந்தாவுக்கு ஏகப்பட்ட கைத்தட்டல்கள். “நாடகம் வேண்டாம்… டான்ஸ் தான் வேணும்”  குரல்கள்.
அடுத்த பாட்டுக்கு ஊரில் முழுக்கஞ்சன் என்று பெயரெடுத்த தர்மராசா வசந்தாவின் சட்டையில் பத்து ரூபாய் குத்தி விட்டு சென்றான். எப்படியோ நாடகம் முடிந்தது. காலையில் வாத்தியார் புறப்படும் போது சுப்பையா அண்ணாவி சொல்லிக் கொண்டிருந்தார்.
“வாத்தியாரையா… அடுத்த வருஷமும் வந்திரும்… மகாபாரதத்தை தீட்டிப்புடுவோம்…”
வாத்தியாருக்கு கோபம் வந்தது. சுப்பையா அண்ணாவியை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக