வியாழன், 19 ஜூலை, 2012

தாய்மைக்க


                                                                 தாய்மைக்காக

வெயில் உக்கிரமாக அடித்துக் கொண்டிருந்தது. பேய்க்காற்று வேறு. உயரத்தில் செம்மண் புழுதி அவ்வப்போது கிளம்பிக் கொண்டிருந்தது. கிழவி மரகதம் செருவை நிழலில் அமர்ந்து தட்டி முணைந்து கொண்டிருந்தாள். மெலிந்த சுருங்கிய தேகம். இடுங்கிய கண்கள். உடல் முழுக்க நரம்புக் கோடுகள். அடிக்கடி இருமல். தலைää பரட்டையாக இருந்தது.

“கிணிங்…. கிணிங்”…

சைக்கிள் மணியின் சத்தம். கரட்டு கரட்டு என்று உயிரை விடத் தயாராக இருந்த அந்த பழைய சைக்கிளை பிரயத் தனப்பட்டு மிதித்துக் கொண்டிருந்த போஸ்ட்மேன்ää கிழவி இருந்த குடிசையின் பக்கம் இறங்கிக் கொண்டான்.

“மணியார்டர் வந்திருக்கும்மா… மருமகளைக் கூப்பிடு…”

பம்பாயில் இருந்து மகன் தங்கராசு பணம் அனுப்பியிருக்க வேண்டும்.

“எவ்வளவுய்யா அனுப்பியிருக்கான் என் ராசா…?”

“ஏ கிழவிää சும்மா இருக்கமாட்டே நீ.. கொள்ளிக்கட்டையை வச்சி வாயில தேச்சுப் புடுவேன்..”

பணத்தை வாங்கி மடியில் முடிந்து கொண்ட மருமகள் சரோசா கிழவியிடம் மீண்டும் சீறினாள்.

“கிழட்டு முண்டை… இன்னும் நாலு தட்டி கூட முணைஞ்ச பாடில்ல… அதுக்குள்ளே அக்கம் பக்கத்துல என்ன பேச்சு… பணம் எவ்வளவுண்ணு தெரிஞ்சி என்ன பண்ணப் போறே..! பாடை கட்டறதுக்கு பணம் என்கிட்டே இருக்கு… பயப்படாம வேலையப் பாரு… மதியத்துக்குள்ளே இந்த ஓலையையெல்லாம் முணைஞ்சிருக்கணும்… அப்பத்தான் கஞ்சி ஊத்துவேன்…”

கிழவியைப் பார்க்க போஸ்ட்மேனுக்கு பரிதாபமாக இருந்தது. அவள் முகம் சிறுத்துப் போனதையும் அந்த தளர்ந்த கரங்கள் பதட்டத்தோடு ஓலைகளை வளைத்து வளைத்து தட்டியைப் பின்ன விரைந்ததையும் ஏறிட்டுவிட்டு தன்னுடைய வாகனத்தில் ஏறிக் கொண்டான்.

அதிகாலையில் இருந்து மதியம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளை வரை சளைக்காமல் தட்டி முணைந்துகொண்டுதான் இருந்தாள் மரகதம். காலை எட்டு மணிக்கு ஒரு தம்ளரில் மண்டிக் காப்பியை மருமகள் தந்தாள். இனிமேல் மதியம் கொஞ்சம் கஞ்சி தருவாள். பசித்து இடுங்கிய வயிரை ஒளி மங்கிய கண்களால் பார்த்துக் கொண்டு கைவிரல்கள் ஓலைகளை இழுத்துக் கொண்டிருந்தன. இன்றைக்கு மீன் வாங்கியிருப்பாள் போலும். மீன் குளம்பின் வாசனை கமகமவென்று மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது. பேரப் பிள்ளைகள் முருங்கைமர நிழலில் புழுதியில் புரண்டு கொண்டிருந்தார்கள்.
கிழவி அலுத்துக் கொண்டாள்.


“எலேய்… மண்ணுல புரளாதீங்கல… அம்மையக் கூப்பிட்டு மேலக் கழுவி எழவுடுங்க…”

அவர்கள்ää பாட்டி சொன்னதை காதில் வாங்காமல் செம்மண்ணை குத்துக் குத்தாய் அள்ளி தலையில் போட்டுக் கொண்டு மண் குளியல் நடத்திக் கொண்டிருந்தனர். இதுவே பழைய காலமாக இருந்துää புரள்வது தங்கராசுவாக இருந்தால் மரகதம் சும்மா இருந்திருக்க மாட்டாள். நொத்து நொத்து என்று நொத்தி கிணற்றங் கரைக்குத் தூக்கிப் போய் திலாவில் தண்ணீர் இறைத்து சுத்தமாய் கழுவி விட்டிருப்பாள். இப்பொழுது அதெல்லாம் செய்ய முடியாது. பேரப்பிள்ளைகளைத் தொடக் கூடாது என்பது மருமகளின் உத்தரவு.

“மணி என்ன ஜயா…? தெருவில் போய்க் கொண்டிருந்தவனிடம் கேட்டாள் கிழவி.

“இரண்டு மணி பாட்டி…”

இன்னும் சாப்பிடக் கூப்பிடவில்லை. பசி கண்ணை அடைத்தது. தளர்ச்சியால் அப்படியே தட்டியில் சாய்ந்தாள். தூங்கிப் போனாள்.

சிறிது நேரத்தில் அங்கு ஒரு ப10கம்பமே நிகழ்ந்தது. “கிழட்டுத் தேவடியா… ஒரு வேலை செய்யறது கிடையாது… சாகவும் மாட்டேங்றா… இந்த வயசுலயும் பிளாப்பெட்டி சோத்தை வயிறு ஏக்குது… என்னழா தூக்கம்….? கிழவியை முடியைப்பிடித்துச்சுழற்றி எழுப்பி விட்டாள். இவள் போட்ட சத்தத்தால்  தெருவே கூடியது. கிழவி மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஓப்பாரியைத் துவக்கினாள்.

“ஏ… என்ன பெத்த ராசாவே… என் கண்ணு ராசாவே… அம்மையப் போட்டு கொல்லுதாளேடா சவத்து மூளி… என் உசுரும் போகலியேடா… பத்து மாசம் பெத்து வளர்த்தேன் என் கண்ணு மகiனே… ஜயா… பால் போல வளர்த்தேன்… போனதுதான் போனே என் கண்ணு மகனே அம்மைக்கு குழி வெட்டிட்டு போகப்படாதா என் கண்ணு மகனே…”

சோக ராகத்தோடு கண்ணில் நீர் வடிய மார்பில் அடித்துக் கொண்டு அவள் நாவசைத்து பாடியபோது கூட்டம் ‘உச்’ கொட்டியது. பலரும் அனுதாபத்துடன் பேசினார்கள்.
“மருமக பொல்லாதவடி… நாம ஏதும் தட்டிக் கேட்டா கேக்கக் கூசற மாதிரி; பேசுவா… நமக்கு எதுக்கு வம்பு…?

“இந்தக் கழுதைய எங்கிருந்து கட்டுனான் அந்தப் பய..?”

“எவளாதான் இருக்கட்டுமே… முதல்ல வந்த உடனே எதுத்துப் பேசுவா பாரு… அப்ப கீழ்நாடி பல்லப் ப10றா தட்டியிருக்கணும்… இப்ப அவனை மதிக்காம அவனும் ஓடிட்டான்… மாமியாரும் கிடந்து செத்துக்கிட்டு கிடக்கா…

“இவளுகளையெல்லாம் வெட்டி பொலி போடணும்…” ஒருவர் கொஞ்சம் உரக்கச்சொல்ல… அந்த வார்த்தைகள் சரோசாவின் காதுகளில் தெளிவாக விழுந்தது.

“எலே… நாருன பயலே… யாரலே வெட்டுவே…? ஏன் உங்கம்மா இல்லியா… எங்கலே உன் பொண்டாட்டி… எவன் கூட பயணம் போனா…?

“எழா… செத்தத் தேவடியா முண்டை… இந்த மாதிரி பேச்சை என்கிட்டே வச்சிக்காதே… வாயப் பிடிச்சி கிழிச்சிப் போடுவேன்… என்னழா நீ நினைச்சுக்கிட்டே… எப்படி வேண்ணாலும் பேசலாம்னா… குடலை உருவிப் புடுவேன் உருவி…”

அவனும் பதிலுக்கு ஏசினான். அவள் சளைக்கவில்லை. அவளுடைய வார்த்தைகள் ஏட்டில் எழுதக்கூடிய வகையைச் சார்ந்ததாக இருக்கவில்லை. கூட்டத்தில் ஒருத்தி அவனை விலக்கினாள்.

“தம்பி… விடு.. இவ கிட்ட என்ன பேச்சு…? ஊரே கழிச்சு வச்சிருக்கு இந்த மூதியை… இவகிட்ட போட்டுவாயக் கொடுக்கறியே…!”

அவளையும் சரோசா ஏசினாள். அவளை நாலைந்துபேர் தள்ளிக் கொண்டு சென்றனர். சரோசா வந்த கோபத்தையெல்லாம் மாமியார் மேல் காட்டினாள். ஈக்கு விளக்குமாற்றை மாற்றிப்பிடித்து முதுகில் நங்கு நங்கு என்று நான்கைந்து அடிகள். கிழவி அம்மா அப்பா என்று துடித்தது பாவமாகத் தான் இருந்தது. ஆக அன்று மதியமும் மரகதத்துக்கு சோறு கிடைக்கவில்லை. தெருவோரத்திலேயே கைகளை இடுக்கிக் கொண்டு சுருண்டு கொண்டாள். பசி மயக்கமும் மருமகள் விளக்குமாற்றால் அடித்த வேதனையும் கிழவியை மயக்கம் போடச் செய்தது.

மயக்கம் தெளிந்து தடுமாறி எழுந்த போது இருட்டி இருந்தது. வீட்டில் மருமகளின் சத்தமோ பேரப்பிள்ளைகளின் சத்தமோ கேட்கவில்லை. நடுத் தெருவில் அம்புஜம் வீட்டில் டீவி பார்க்கப் போயிருக்கலாம். இதுதான் சரியான சந்தர்ப்பம். பானையைத் திறந்து வயிறாரச் சாப்பிடலாம். ஆவல் உந்தித்தள்ள செருவையில் படலையைத் தள்ளிக் கொண்டு கிழவி குடிசையை நோக்கிப் போனாள். நாதாங்கியில் கை வைத்ததும் பழைய இரும்புப் ப10ட்டு அவளைப் பார்த்துச்சிரித்தது.

வயிற்றைப் பிடித்துக் கொண்டு திண்ணையில் அமர்ந்து கொண்டாள். வெளி முற்றத்தில் மின்சார பல்பின் வெளிச்சம் பகல்போல் கிடந்தது. பாத்திரம் கழுவும் இடத்தில் அது என்ன வெள்ளையாய்… சிறு சிறு குவியலாய்.. தள்ளாடியபடி கிட்டே சென்றாள். சந்தேகமில்லை. சோறுதான். பேரப்பிள்ளைகள் மிச்சம் வைத்த தட்டை அலம்பிக் கொட்டியிருப்பாள் மருமகள். பகலாக இருந்தால் கோழிகளும் காக்கைகளும் விட்டு வைத்திருக்காது. இரவுச் சாப்பாட்டியின் மீதி என்பதால் இன்னமும் இருக்கிறது. நேரம் சென்றால் எறும்புகள் அபகரித்து விடலாம். தரையில் சம்மணமிட்டு அமர்ந்தபடி சோற்றுப் பருக்கைகளைப் பொறுக்கினாள். மண் சட்டியில் பாத்திரம் கழுவிய் அழுக்குத் தண்ணி மீதி இருந்தது. பருக்கைகளை கையில் இருக்கிப் பிடித்தபடியே தண்ணீரில் முக்கி எடுத்தாள். அடுத்த கணம் அவைகள் வாய்க்குள் சென்றன. ஒரு பருக்கை இல்லாமல் சுத்தமாகத் துடைத்து உள்ளே தள்ளினாலும் கால்வயிறு கூட நிறையவில்லை. வேதனையுடன் மீண்டும் வெளியே வந்து தெருவோரத்திலேயே முடங்கிக் கொண்டாள்.


மரகதத்தைப் பொறுத்தவரை ஓவ்வொரு நாட்களும் ஜீவ மரணப் போராட்டம்தான். தன்னுடைய மருமகள் மாதிரி இந்த உலகத்தில் பெண் யாராவது இருப்பாளா என்பது சந்தேகத்துக்குரியது. கொள்ளிவாய்ப்பிசாசுக்கு கூட இரக்கம் இருக்கலாம். இவளிடம் அதுவும் இல்லை. மகன் இங்கிருந்தபோது அவனை புருஷன் என்று கூட மதிக்காமல் பேயாய் ஆடுவாள். அவனுடைய மனது கோபத்தாலும் அவமானத்தாலும் குன்றிப்போகும். எத்தனை முறையோ அடித்து உதைத்துப் பார்த்து திருந்துவாள் என எதிர்பார்த்தான். பயனில்லை அடித்து விரட்டிவிடலாம் என்றால் சின்னம் சிறுசுகளாய் இருந்த பிள்ளைகளின் எதிர் காலம் பாழாகிவிடும் என்று தோன்றும். கழிசடையை என்ன செய்ய….?

தங்கராசு இருந்த வரையில்  மரகதத்துக்கு இவ்வளவு கொடுமையில்லை. தாய்க்கு சோறு கொடுக்கவில்லை என்று தெரிந்தால் விலா எலும்பை முறித்து விடுவான். ஒருநாள் இரவுச் சாப்பாடு தராமல் பட்டினி போட்ட வகைக்கு நாட்டு உடன்கம்பை எடுத்து அடித்து கையை ஒடித்துவிட்டான். அப்புறம் உதிரமாடன் குடியிருப்புக்கு ஓட வேண்டியது வந்தது. வைத்தியர் தயவால் கை பிழைத்தது. தங்ராசுக்கு சில நாட்களில் கூலி வேலை இருக்காது. வீட்டில் அடைந்து கிடப்பான். சரோசா தட்டியோ பெட்டியோ முணைந்து சம்பாதிக்கும் தெம்பில் அவனை வக்கணையாக ஏசுவாள். அவனது தாயும் அவளோடு சேர்ந்து முணைவது மறந்து போகும். வேலையில்லாப் பிரச்சினை ஒரு பக்கமும் இந்தப் பேயின் அரிப்பு ஒரு பக்கமும் ஆக தங்கராசுவை பம்பாய்க்கு விரட்டியடித்தது. போன வேளை சிகரெட் கம்பெனியில் வேலை கிடைத்தது. மாதம் தோறும் ஜநூறுக்கு குறையாமல் ஊருக்கு அனுப்ப முடிந்தது. கடிதம் எழுதும் போதெல்லாம் அம்மாவுக்கு நல்ல துணிமணி சாப்பாடு கொடு என்பதை மறக்காமல் எழுதுவான். ஆனால் ஊரிலோ நிலமை தலைகீழாக இருந்தது. மகன் இல்லாத தைரியத்தில் மருமகள் தாயை சீக்கிரம் சாகமாட்டாளா என்று அத்தனை முறைகளையும் கையாண்டு கொண்டிருந்தாள்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் மரகதத்திடம் அடிக்கடி சொல்வதுண்டு… “நாலு வரி மகனுக்கு எழுதினா என்ன பாட்டி….?

“வேண்டாம்… கண் காணா இடத்துல இருக்கும் எம்புள்ள கலங்கிப் போகும்… கிழவியின் பதில் இப்படித் தான் இருக்கும்.

அன்று வந்த கடிதத்தைப் பார்த்ததும் சரோசா நடுங்கினாள். சில தினங்களில் ஊர் வருவதாக தங்கராசு எழுதியிருந்தான்.

மரகதத்திற்கு மருமகளின் திடீர் மாற்றம் புரியவில்லை. மாமியாரிடம் அன்பொழுகப் பேசினாள். உடுத்திக்கொள்ள புதுப்புடவை எடுத்துக் கொடுத்தாள். தலை முடிக்கு கைநிறைய தேங்காய் எண்ணை கிடைத்தது. எல்லா வற்றிற்கும் மேலாக வேளா வேளைக்கு வயிறார சாப்பாடு. மதியம் மணக்க மணக்க குதிப்பு மீன் குளம்பு…

 “அத்தை… உங்க மகன் வர்றாக அத்தை…” மரகதத்திற்கு மருமகளின் குழைவுக்கு பொருள் விளங்கியது.

தங்கராசு அன்று காலையில் ஊருக்கு வந்தான். மரகதம் மகனைக் கட்டிக் கொண்டு பிழியப் பிழிய அழுதாள். அவள் தேய்ந்து கட்டையாய் இருந்தது அவனுக்கு எல்லாம் உணர்த்தியது. இந்தப் பத்து நாட்களும் மாமியாருக்கு ராஜ உபசாரம்தான். மரகதமும் மகனிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆத்திரத்தில் அடித்துக் கொன்றாலும் கொன்றுவிடுவான். தாயின் பரிதாபமான பார்வை தங்கராசுவின் நெஞ்சை உருக்கியது. ஊரில் அவன் மனைவியிடம் தாய்படும் பாடுகள் பற்றி எல்லோரும் சொன்னார்கள். அவன் சிந்தித்தான். ஆத்திரம் கொள்ள மனது நினைக்கவில்லை. நாலு உதை கொடுக்கலாம். ஆனால் பம்பாய் போய்விட்ட பிறகு தாயை கொன்று கூட விடலாம் இந்த கிராதகி.

புறப்படும் தினத்தில் அமைதியாகச் சொன்னான்.

 “சரசு… பம்பாயில தனியாகக் கிடந்து கஸ்டப்படறேன்… நல்ல சோறு குழம்பு சாப்பிட வழி கிடையாது… அதனால நாளைக்கு புறப்படும்போது அம்மையை கூட கூட்டிட்டுப் போயிரலாம்ணு பார்க்கிறேன்… நீ ஊர்;ல இருந்து புள்ளைங்களை நல்லா படிக்க வையி… நான் அனுப்புற பணத்துல நீயும் பிள்ளைகளும் வயிறாரச் சாப்பிட்டு காலத்தை கழிங்க… என் வயிறு நிம்மதியா நிறையணும்னா அம்மை என் கூட வந்துட்டா தான் சரிப்படும்…”

சரோசா தனது வெறிநாய் பார்வையில் மரகதத்தைப் பார்க்கää மரகதம் குழந்தையாகி மகனைத் தாயாய்ப் பார்த்தாள்.

தாய் வார இதழ்
10.07.88

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக