வெள்ளி, 20 ஜூலை, 2012

மீண்டும் ஒரு பயணம் வரும்…


மீண்டும் ஒரு பயணம் வரும்

            திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கிக் கொண்ட விஜயராகவனுக்கு உயரமான கோவில் கோபுரம் தெரிந்தது. முருகாபயபக்தியோடு கன்னங்களில் போட்டுக் கொண்டான். லெதர்பையை தோளில் போட்டுக் கொண்டு சூட்கேஸை கையில் தூக்கிக் கொண்டான்.
            “இரண்டு ருபா கொடுங்க சார் நான் தூக்கிட்டு வர்ரேன்…”
            அழுக்கடைந்த உடையில் கூலிக்கார பையன்.
            “சூட்கேஸை மட்டும் தூக்கிக்கோ…” நடந்தார்கள். டாக்ஸி ஸ்டாண்டில் பழைய மாடல் அம்பாஸிடர்கள் நிறைய இருந்தன.
            “வாங்கசார்கோவிலுக்குதானே போகணும்?”
            “இல்லேகானத்துக்குப் போகணும்.. எவ்வளவு வேணும்?”
            “நூறு ருபாய் ஆகும் சார்
            காரில் ஏறிக்கொண்டான். பெட்டியைத் தூக்கி வந்த பையனிடம் ஜந்து ருபாயை நீட்டினான்.
            “சில்லரை இல்லே சார்…”
            “வச்சிக்கோ
            கார் நகர்ந்தது. சிறுவனின் கண்களில் பிரமிப்பு. கார் சென்ற பாதை நெடுகிலும் பனை மரங்களும் உடை மரங்களும் தான். அங்கங்கே செழுமையான தென்னந் தோப்புகள். காயாமொழியிலிருந்து வடக்கே வரும்போது சிகப்புக்கலரில் மணல் மேடுகள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எழுந்தும்ää தாழ்ந்தும் மணல் குவியல்கள் அற்புதமாய் இருந்தன. அந்தச் செம்மண் தேரியிலும் பசுமையாய் தழைத்து நின்றன கொல்லாமரங்கள். காற்று வீசும் போது பொடிமணல் காற்றோடு கலந்து மேனியை வருடியது. கானம் பள்ளத்தில் இருந்தது. நெருங்கவும் டிரைவர் கேட்டான்.
            “எந்த தெரு சார்…!
            ‘விசாரிக்கணும்நாராயணசாமி கோவில் பக்கத்துலதான் வீடு…”
            டிரைவர் கும்பலாய் ஓடிவந்த சிறுவர்களைக் கோட்டான்.
            “நாராயணசாமி கோவில் எங்கல இருக்கு?
            “நேரா போட்டு…”

வியாழன், 19 ஜூலை, 2012

தாய்மைக்க


                                                                 தாய்மைக்காக

வெயில் உக்கிரமாக அடித்துக் கொண்டிருந்தது. பேய்க்காற்று வேறு. உயரத்தில் செம்மண் புழுதி அவ்வப்போது கிளம்பிக் கொண்டிருந்தது. கிழவி மரகதம் செருவை நிழலில் அமர்ந்து தட்டி முணைந்து கொண்டிருந்தாள். மெலிந்த சுருங்கிய தேகம். இடுங்கிய கண்கள். உடல் முழுக்க நரம்புக் கோடுகள். அடிக்கடி இருமல். தலைää பரட்டையாக இருந்தது.

“கிணிங்…. கிணிங்”…

சைக்கிள் மணியின் சத்தம். கரட்டு கரட்டு என்று உயிரை விடத் தயாராக இருந்த அந்த பழைய சைக்கிளை பிரயத் தனப்பட்டு மிதித்துக் கொண்டிருந்த போஸ்ட்மேன்ää கிழவி இருந்த குடிசையின் பக்கம் இறங்கிக் கொண்டான்.

“மணியார்டர் வந்திருக்கும்மா… மருமகளைக் கூப்பிடு…”

பம்பாயில் இருந்து மகன் தங்கராசு பணம் அனுப்பியிருக்க வேண்டும்.

“எவ்வளவுய்யா அனுப்பியிருக்கான் என் ராசா…?”

“ஏ கிழவிää சும்மா இருக்கமாட்டே நீ.. கொள்ளிக்கட்டையை வச்சி வாயில தேச்சுப் புடுவேன்..”

பணத்தை வாங்கி மடியில் முடிந்து கொண்ட மருமகள் சரோசா கிழவியிடம் மீண்டும் சீறினாள்.

“கிழட்டு முண்டை… இன்னும் நாலு தட்டி கூட முணைஞ்ச பாடில்ல… அதுக்குள்ளே அக்கம் பக்கத்துல என்ன பேச்சு… பணம் எவ்வளவுண்ணு தெரிஞ்சி என்ன பண்ணப் போறே..! பாடை கட்டறதுக்கு பணம் என்கிட்டே இருக்கு… பயப்படாம வேலையப் பாரு… மதியத்துக்குள்ளே இந்த ஓலையையெல்லாம் முணைஞ்சிருக்கணும்… அப்பத்தான் கஞ்சி ஊத்துவேன்…”

கிழவியைப் பார்க்க போஸ்ட்மேனுக்கு பரிதாபமாக இருந்தது. அவள் முகம் சிறுத்துப் போனதையும் அந்த தளர்ந்த கரங்கள் பதட்டத்தோடு ஓலைகளை வளைத்து வளைத்து தட்டியைப் பின்ன விரைந்ததையும் ஏறிட்டுவிட்டு தன்னுடைய வாகனத்தில் ஏறிக் கொண்டான்.

அதிகாலையில் இருந்து மதியம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளை வரை சளைக்காமல் தட்டி முணைந்துகொண்டுதான் இருந்தாள் மரகதம். காலை எட்டு மணிக்கு ஒரு தம்ளரில் மண்டிக் காப்பியை மருமகள் தந்தாள். இனிமேல் மதியம் கொஞ்சம் கஞ்சி தருவாள். பசித்து இடுங்கிய வயிரை ஒளி மங்கிய கண்களால் பார்த்துக் கொண்டு கைவிரல்கள் ஓலைகளை இழுத்துக் கொண்டிருந்தன. இன்றைக்கு மீன் வாங்கியிருப்பாள் போலும். மீன் குளம்பின் வாசனை கமகமவென்று மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது. பேரப் பிள்ளைகள் முருங்கைமர நிழலில் புழுதியில் புரண்டு கொண்டிருந்தார்கள்.
கிழவி அலுத்துக் கொண்டாள்.